2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான இயல்பு வாழ்க்கை!


2 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான இயல்பு வாழ்க்கை!
x

தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கொரோனா காலடி எடுத்துவைத்தது.

தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி கொரோனா காலடி எடுத்துவைத்தது. முதலில் மஸ்கட்டிலிருந்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவருக்குத்தான் கொரோனா பாதிப்பு இருந்தது. எவ்வளவோ தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டும், ஆரம்பத்தில் மெல்ல மெல்லவும், பிறகு அதிவேகமாகவும் பரவல் தொடங்கியது. ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டால் அதை அலை என்று மதிப்பீடு செய்கிறார்கள்.

அந்த வகையில், 31-5-2020 அன்று 1,149 பேர் பாதிக்கப்பட்டு முதல் அலை தொடங்கியது. முதல் அலையின் உச்சமாக 27-7-2020 அன்று 6,993 பேர் பாதிக்கப்பட்டு, 77 பேர் உயிரிழந்தனர். 20-2-2021-ல் 438 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், இனி கொரோனாவை ஒழித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், “விட்டேனா.. பார்” என்ற வகையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகமாகி, 19-3-2021-ல் 1,087 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 2-வது அலை தொடங்கியது. 21-5-2021-ல் மிக அதிகமாக எல்லோரும் அச்சமடையும் வகையில், 36,184 பேருக்கு பாதிப்பும், 467 உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இந்த பரவல் குறைந்து, 24-12-2021-ல் 597 பேர் பாதிக்கப்பட்டு பரவல் குறைந்தது.

2-வது அலையோடு கொரோனா போய்விடும் என்று நினைத்த நேரத்தில், மீண்டும் 31-12-2021-ல் 1,155 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 3-வது அலை தொடங்கியது. 3-வது அலையிலும், கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி 30,744 பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இந்த அலை வேகமாக குறைந்து நேற்று 292 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

கொரோனா பரவத்தொடங்கிய நேரத்தில், அதை கட்டுப்படுத்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகளோடு விதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு கிடந்தன. போக்குவரத்து முடங்கியது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால், மாநிலத்தின் வளர்ச்சியே அடிமட்டத்துக்கு சென்றுவிட்டது. குடும்பங்களிலும் வருமானம் இழப்பு, வேலையிழப்பு என்ற பரிதாபநிலை உருவானது. பிறகு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.

மத்திய அரசாங்கம் கடந்த மாதம் 25-ந்தேதி கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார தொடர்பான தளர்வுகள் உள்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறைகளை கடைப்பிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. இத்தகைய சூழ்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீண்டும் திரும்புவதற்கு, திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 பேருக்கு மிகாமல் நடத்த அனுமதி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 250 பேர்களுடன் அனுமதி என்ற 2 கட்டுப்பாடுகளை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்ள உத்தரவிட்டார்.

ஆக, தமிழ்நாடு இப்போது இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஆனால், இந்த சுதந்திரமான வாழ்க்கை நிலைக்க வேண்டுமென்றால், மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்காத நிலையை உறுதிப்படுத்தும் பொறுப்பு மக்களின் கையில்தான் இருக்கிறது. அதற்கு அனைவரும் தொடர்ந்து முககவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும்.

நேற்று முன்தின கணக்குப்படி, 91.5 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். 72.46 சதவீதம் பேர்தான் 2-வது டோஸ் போட்டிருக்கிறார்கள். இவை இரண்டுமே 100 சதவீத இலக்கை அடைந்து பூஸ்டர் டோஸ் போடவேண்டிய காலக்கெடு அடைந்தவர்கள் அனைவரும் அதையும் போட்டுக்கொண்டால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மத்திய அரசும் உடனடியாக 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அடுத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசிபோடும் நடைமுறையை தொடங்கவேண்டும். அடுத்த சில காலங்கள் முககவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி என்பது வாழ்க்கையின் நடைமுறையாக இருந்தால் மட்டுமே, கொரோனாவை மீண்டும் தலையெடுக்காமல் தடுக்க முடியும்.

Next Story