உக்ரைன் மீட்புப் பணியில் மத்திய அரசாங்க - தமிழக குழுக்கள்!


உக்ரைன் மீட்புப் பணியில் மத்திய அரசாங்க - தமிழக குழுக்கள்!
x
தினத்தந்தி 4 March 2022 8:16 PM GMT (Updated: 2022-03-05T01:46:34+05:30)

கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அதிகாலை முதல் ரஷிய ராணுவம், உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அதிகாலை முதல் ரஷிய ராணுவம், உக்ரைன் மீது தாக்குதலை தொடர்ந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நகரத்தையும் கைப்பற்றும் ரஷியாவின் குண்டு மழையினால், உக்ரைனே அல்லோலப்படுகிறது. இந்தியாவில் ‘நீட்’ தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற விதியினால், ‘நீட்’ தேர்வில் போதிய மதிப்பெண் பெறாத மாணவர்களும், ‘நீட்’ தேர்வு எழுதாத மாணவர்களும், உக்ரைன் போன்ற நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.

அந்த வகையில், இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள் உள்பட, 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் வாழ்கிறார்கள். இதில், ஏறத்தாழ 5 ஆயிரம் தமிழக மாணவர்கள் உக்ரைனில் படிக்கிறார்கள். ரஷியா போர் தொடுப்பதற்கு முன்பே, போர் வரக்கூடும் என்ற அச்சத்தில் உக்ரைனில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களை சொந்த நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து அங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் திரும்பினாலும், பெரும்பாலானோர் அடுத்த சில மாதங்களில் இறுதித் தேர்வு இருக்கிறது என்ற நிலையில், அது வீணாகிவிடக்கூடாது என்ற எண்ணத்திலும், விமானக் கட்டணம் ரூ.1 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்தச் செலவை மேற்கொள்ள முடியாத நிலையிலும் அங்கேயே தங்கிவிட்டனர்.

போர் மூண்ட பிறகு, உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பதுங்கு குழிகளிலும், சுரங்க அறைகளிலும், மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களிலும் தஞ்சம் அடைந்தனர். இவர்கள் எல்லாம் உக்ரைன் எல்லையை கடந்து, அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, சுலோவேகியா, ஹங்கேரி, மால்டோவா, இப்போது சில நாட்களாக ரஷியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்ப வேண்டியநிலை இருக்கிறது.

அந்த எல்லைப்பகுதிக்கு வருவதற்கும், எல்லையை கடப்பதற்கும் பெரும் இன்னல் இருக்கிறது. குண்டு மழையில் இருந்து தப்பி கடுமையான பனிப்பொழிவுக்கு இடையே பல கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு “ஆபரேஷன் கங்கா” என்று மத்திய அரசாங்கம் பெயர் சூட்டியுள்ளது. இந்த மீட்புப்பணியை ஒருங்கிணைக்க, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று, அங்கேயே தங்கியிருந்து கவனிக்க 4 மத்திய மந்திரிகளை மத்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவில் இருந்தும், கிரண் ரிஜிஜூ சுலோவேகியா நாட்டில் இருந்தும், ஹர்தீப்சிங் புரி ஹங்கேரியில் இருந்தும், வி.கே.சிங் போலந்து நாட்டில் இருந்தும் மீட்புப் பணிகளை கவனிக்கிறார்கள். அங்கிருந்து ஏறத்தாழ 450 மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு திரும்ப காத்திருக்கிறார்கள்.

அவர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதிசெய்ய ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஏ.கே.கமல் கிஷோர், எம்.பிரதீப்குமார், அஜய் யாதவ், எம்.கோவிந்தராவ் ஆகியோரை சுலோவேகியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து, இதற்கு தேவையான அனுமதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விரைவாக வழங்கவேண்டும் என்று, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய-மாநில அரசுகளின் இந்த முயற்சி வெகுவாக பாராட்டுக்குரியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ள தமிழக குழுவுக்கு வெளியுறவு அமைச்சகம் உடனடியாக அனுமதி வழங்கி, தமிழக குழுவினரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பினால், பதற்றத்தில் உக்ரைனில் இருக்கும் தமிழக மாணவர்களுக்கு, நம்மை மீட்டுச்செல்ல தமிழக அரசு இருக்கிறது, தமிழக மக்கள் இருக்கிறார்கள், தமிழக குழு இருக்கிறது என்ற நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும்.

Next Story