தலைமுறை, தலைமுறைக்கும் பயன்படும் ‘நான் முதல்வன்' திட்டம்


தலைமுறை, தலைமுறைக்கும் பயன்படும் ‘நான் முதல்வன் திட்டம்
x
தினத்தந்தி 8 March 2022 7:37 PM GMT (Updated: 2022-03-09T01:07:44+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தலைமுறை மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையும் பயன்படவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தலைமுறை மட்டுமல்லாமல், எதிர்கால தலைமுறையும் பயன்படவேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தன்னுடைய ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறுகிறார். தான் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை வெளியிட்ட விழாவிலேயே அவர், “எனது தத்துவம் என்பது திராவிட மாடல் ஆட்சி. அதாவது திராவிடவியல் ஆட்சி முறை” என்பதை பறைசாற்றினார்.

திராவிட மாடல் ஆட்சி என்பதை அவர் ஒரே வாக்கியத்தில் சொல்லும்போது, ‘அனைவரையும் உள்ளடக்கிய அனைத்து துறை வளர்ச்சி’ என்று கூறுகிறார். அந்தவகையில், இன்றைய இளைய தலைமுறை வளர்ச்சியடையவேண்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற சீரிய நோக்கில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், ஏதாவது ஒரு திறனில் ‘நான் முதல்வன்’ என்ற பெருமிதம் கொள்ளத்தக்க அளவில் அவர்களுக்கு சிறப்பான திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்கும் அவரது கனவு திட்டத்தை தொடங்கியுள்ளார்.

‘நான் முதல்வன்’ என்ற இந்த திட்டத்தை ஆழமாக படித்து பார்த்தால் இன்றைய இளைஞர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமானதாக மாற்றப்போகும் திட்டம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்ற உடனேயே முதல்-அமைச்சர், ‘2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.75 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்கவேண்டும் என்பதே தனது லட்சியம்’ என்று கூறினார். இந்த அளவில் பொருளாதாரம் வளரவேண்டும் என்றால் 2026-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் இளைஞர்கள் திறன் மேம்பாடு அடையவேண்டும்.

இப்போதெல்லாம் மாணவர்கள் நிறையபேர் படித்தவர்களாக இருக்கிறார்கள். நிறைய தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த தொழிற்சாலைகள் எதிர்பார்க்கும் திறன் நமது மாணவர்களிடம் இல்லை. வேலைவாய்ப்பு இருந்தாலும் அதைப்பெறும் திறன் இல்லாததுதான் மாணவர்களிடம் பெரிய குறையாக இருக்கிறது. அந்தவகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை கல்வியில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், தொழில்திறமையில், தனித்திறமையில் மட்டுமல்லாமல் நிறுவனங்களை நடத்தும் தொழில்முனைவோராகவும் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்ன திறமை இருக்கிறது? என்பதை அடையாளம் கண்டு, அந்தந்த துறைகளில் அவர்களை மேலும் ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தான் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். அதுமட்டுமல்லாமல், திறமையின் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்டு என்னென்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? என்றும் வழிகாட்டப்படும்.

தமிழில் தனித்திறன் பெற சிறப்பு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாக பேசவும், நேர்முகத்தேர்வில் எப்படி கலந்துகொள்வது? என்பது தொடர்பாகவும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இதற்காக தனி கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டமும் வகுக்கப்படும். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு அவர்கள் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு ‘கோடிங்’, ‘ரோபோடிக்ஸ்’ போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும்.

தேவைக்கேற்ப வெளிநாட்டு மொழிகளும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். இதுபோன்ற பல அம்சங்கள் இந்த திட்டத்தின் கீழ் இடம்பெறும். மொத்தத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகளை பெறவும், பிற நிறுவனங்களில் வேலைக்காக கதவை தட்டுபவர்களாக மட்டுமல்லாமல், இன்றைய மாணவர்களே நாளை புதிய நிறுவனங்களை தொடங்கி மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உருவாகுவதை உறுதி செய்யும் இந்த ‘நான் முதல்வன்’ திட்டம் ஒரு முத்திரை பதித்துள்ள திட்டம் ஆகும். ஒவ்வொரு மாணவரும் தங்கள் துறையில் ‘நான் முதல்வன்’ என்ற பெருமையை பெறும் இந்த திட்டம் தமிழகத்துக்கு புதிய பெருமையை சேர்க்கும்.

Next Story