ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு!


ரூ.2 ஆயிரம் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு!
x
தினத்தந்தி 10 March 2022 7:44 PM GMT (Updated: 2022-03-11T01:14:38+05:30)

‘மழை விட்டும் தூறல் நிற்கவில்லை’ என்று பழமொழி சொல்வார்கள்.

‘மழை விட்டும் தூறல் நிற்கவில்லை’ என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி திடீரென இரவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் பேசும்போது, அன்று நள்ளிரவு 12 மணி முதல் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்றும், 10-ந்தேதி முதல் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றும் அறிவித்தார். நாடு முழுவதும் பெரிய பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அடுத்த நாளில் இருந்து ஏ.டி.எம். மையங்களை முற்றுகையிட்டு பணம் எடுக்கவேண்டும் என்று குவிந்தனர்.

கருப்பு பணத்தை பிடித்துவிடுவோம், கள்ள பணத்தை ஒழித்துவிடுவோம், பயங்கரவாத செயல்களுக்கான பணம் தடுத்து நிறுத்தப்படும், லஞ்சம்-லாவண்யம் ஒழிக்கப்படும் என்றெல்லாம் இந்த பணமதிப்பு நீக்கத்துக்கு காரணங்களாக கூறப்பட்டன. ஆனால் எதுவுமே நடக்கவில்லை. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் 99.30 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டது. பணமதிப்பு இழப்பு எதிர்பார்த்த வெற்றியை தராவிட்டாலும் கூட பரவாயில்லை, 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதன் வடு மறையவில்லை.

இதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று ஒருபக்கம் கூறினாலும், மறுபக்கம் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு, உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, வேலை இழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு என்று பட்டியலிட்டு ஒவ்வொரு பாதிப்பாக கணக்கில் எடுத்தால், பணமதிப்பு நீக்கம் என்பது மக்களுக்கு துயரத்தைத்தான் அளித்ததே தவிர, எந்த நன்மையையும் கொண்டுவந்துவிடவில்லை. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரான பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், ‘ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் ஏற்படப்போகும் கடும் விளைவுகளை சொல்லி ஏற்கனவே மத்திய அரசாங்கத்தை எச்சரித்தேன். இதில் ஒரு பொருளாதார வெற்றியும் இல்லை’ என்று கூறினார்.

பொதுவாக நாட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கவேண்டும். அப்படியென்றால்தான் பொருளாதாரமும், வர்த்தகமும் வளரும். ஆனால் தற்போது காணமுடியாத ரூபாய் நோட்டாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மாறிவிட்டன. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடிக்க 2 நிதி ஆண்டுகளாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று அரசு தெரிவித்த உடன் எங்கே ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் செல்லாது என்று அறிவித்துவிடுவார்களோ? என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கையை கூறும் கணக்குக்கும், உண்மையிலேயே புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் எண்ணிக்கை 2019-ல் 32 ஆயிரத்து 910 ஆக இருந்த நிலையில், 2021 மார்ச் இறுதியில் 24 ஆயிரத்து 510 தான் இருந்தது. ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 199 கோடியாக இருந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகள், ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 195 கோடியாக குறைந்துவிட்டது.

ஏ.டி.எம். மையங்களிலும், ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இல்லாததால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 40 நோட்டுகள் தான் எடுக்கமுடியும் என்பதால் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இல்லாத நிலையில், ரூ.500 நோட்டுகள் 40 எண்ணிக்கையில் அதாவது ரூ.20 ஆயிரம் தான் எடுக்கமுடிகிறது. மேலும் ரூ.20 ஆயிரம் ஒருவர் எடுத்துச்செல்லவேண்டும் என்றால் ரூ.2 ஆயிரமாக இருந்தால் 10 நோட்டுகளை சட்டைப்பையில் வைத்து யாரும் கண்டுபிடிக்க முடியாதவகையில் எடுத்துச்செல்லலாம். ஆக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தை மீண்டும் அதிக அளவில் கொண்டுவரவேண்டும். அதுபோல இனிமேல் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமல்ல, எந்த நோட்டும் செல்லாது என்ற அறிவிப்பு ஒருபோதும் வெளியிடப்படாது என்ற உறுதியையும் மத்திய அரசாங்கம் கொடுக்கவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story