வெற்றிக்கொடி நாட்டிய பா.ஜ.க.-ஆம் ஆத்மி !


வெற்றிக்கொடி நாட்டிய பா.ஜ.க.-ஆம் ஆத்மி !
x
தினத்தந்தி 11 March 2022 7:47 PM GMT (Updated: 2022-03-12T01:17:59+05:30)

வெற்றி வரும்போது முன்வாசல் வழியாகத்தான் வரவேண்டும் என்பதில்லை. சந்து, பொந்துகள், கூரை, பின்வாசல், ஜன்னல் என்று எல்லா வழிகளிலும் உள்ளே வந்து குவியும் என்று வழக்கு மொழியில் சொல்வார்கள்.

வெற்றி வரும்போது முன்வாசல் வழியாகத்தான் வரவேண்டும் என்பதில்லை. சந்து, பொந்துகள், கூரை, பின்வாசல், ஜன்னல் என்று எல்லா வழிகளிலும் உள்ளே வந்து குவியும் என்று வழக்கு மொழியில் சொல்வார்கள். அது, பா.ஜ.க.வுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் மிக அற்புதமாக பொருந்திவிட்டது. 403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசம், 117 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பஞ்சாப், 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட், 60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மணிப்பூர், 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கோவா ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகளை இந்தியா முழுவதும் மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தது.

இதில், பெண்களின் பங்கு மிக, மிக முக்கியம். ஏனெனில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் ஆண்களை விட அதிகமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். பஞ்சாப்பில் மட்டும் பெண்களுக்கு நிகராக ஆண்கள் வாக்களித்துள்ளனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற மாநிலங்களில் பா.ஜ.க.வும் அபார வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. இமாலய வெற்றியை பெற்றுள்ளது.

பொதுவாக கடந்த பல ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தில் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் ஒரு முறை ஆட்சி செய்த கட்சிக்கு மறுமுறை வாய்ப்பு மந்தமாக இருக்கும் என்பார்கள். ஆனால் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள 4 மாநிலங்களிலும் ஏற்கனவே பா.ஜ.க. தான் ஆட்சியில் இருந்த கட்சி. உத்தரபிரதேசத்தை பொறுத்தமட்டில் 1952-ம் ஆண்டுக்கு பிறகு 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த எந்த முதல்-மந்திரியும் திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அது இப்போது முறியடிக்கப்பட்டு யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.

மேலும் விவசாயிகள் போராட்டம் நடந்தது, விவசாய சங்க தலைவர்களும் போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு இருக்குமோ? என்று எல்லோரும் நினைத்த நிலையில், விவசாயிகள் அதிகம் உள்ள பகுதிகள், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள மேற்கு உத்தரபிரதேச பகுதிகளில் எல்லாம் பா.ஜ.க.வுக்கு ஆதரவான ஓட்டுகளே விழுந்துள்ளன.

கோவாவில் பா.ஜ.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி, அதாவது 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. சட்டசபை தேர்தல் நடந்த எல்லா மாநிலங்களிலும் விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், கொரோனா பாதிப்பு, ஆளுங்கட்சி மீது அதிருப்தி இவையெல்லாம் கை கொடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தாலும், எல்லாவற்றையும் மீறி பா.ஜ.க. பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தொடங்கி 9 ஆண்டுகள் தான் ஆகிய நிலையில், ஒரு பிராந்திய கட்சி அடுத்த மாநிலத்திலும் வெற்றி பெற்றுமுத்திரை பதித்துவிட்டது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, சுனாமி வெற்றி. ஆம் ஆத்மி கட்சி இப்போது காங்கிரஸ் எப்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஆட்சி செய்கிறதோ, அதுபோல டெல்லி யூனியன் பிரதேசத்திலும், பஞ்சாப்பிலும் ஆட்சியில் இருக்கும். இந்த தேர்தல் வெற்றியில் பா.ஜ.க.வுக்கு இன்னொரு லாபம் இருக்கிறது. ஜூலை மாதம் நடைபெற போகும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க.வின் வேட்பாளர் மிக எளிதில் வெற்றி பெற்று விடுவார். மாநிலங்களவையிலும் பா.ஜ.க.வின் பலம் உயர்ந்துவிடும். இதுமட்டுமல்லாமல் தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக நின்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் பரிதாபத்துக்குரிய தோல்வியை அடைந்துள்ளன.

மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இது ஒரு ‘டிரெய்லர்’, அரை இறுதி போட்டி என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். பிரதமர் மோடியின் சாதுர்யமான அணுகுமுறையும், கொண்டுவந்துள்ள திட்டங்களும், மக்களின் இதயத்தை தொடும் பேச்சும் மட்டுமல்லாமல், அவர் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், எல்லாவற்றுக்கும் மேலாக அவரது உறுதியான செயல்பாடுகளும் தான் இந்த வெற்றியை கொண்டு வந்துள்ளது.

Next Story