தமிழக மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு!


தமிழக மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்பு!
x
தினத்தந்தி 13 March 2022 8:09 PM GMT (Updated: 13 March 2022 8:09 PM GMT)

உக்ரைன் நாட்டில் ரஷியா போர் தொடுத்ததையடுத்து, கடந்த பல நாட்களாக உயிருக்கு பயந்து, சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் அனைவரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

உக்ரைன் நாட்டில் ரஷியா போர் தொடுத்ததையடுத்து, கடந்த பல நாட்களாக உயிருக்கு பயந்து, சரியான உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த தமிழக மாணவர்கள் அனைவரும் மத்திய-மாநில அரசுகளின் முயற்சிகளால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று காலையில் உக்ரைன் நாட்டில் இருந்து கடைசியாக தமிழகம் திரும்பிய 9 மருத்துவ மாணவ-மாணவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்துக்கு சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றது, அந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் பெற்றோருக்கும், ஏன் தமிழக மாணவர்கள் பத்திரமாக திரும்பவேண்டுமே என்ற பதைபதைப்பில் இருந்த தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

தமிழக மாணவ-மாணவிகள் உக்ரைன், போலந்து, ரஷியா, சீனா என்ற பட்டியலில் உள்ள பல நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கிறார்கள். கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்த பிறகு உக்ரைன் ராணுவமும் எதிர் தாக்குதலை மேற்கொண்ட நேரத்தில், எங்கும் மழை போல குண்டுகள் பொழிந்தன. ராக்கெட்டுகள் வீசப்பட்டன. தமிழக மாணவர்கள் பதுங்கு குழிகளிலும், மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களிலும், சுரங்க அறைகளிலும், சரியான உணவு, கழிப்பிட வசதி, ஏன் தண்ணீர் கூட இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தனர். போர் தொடங்கிய உடனேயே தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்தார். முதலில் எவ்வளவு தமிழக மாணவர்கள் உக்ரைன் நாட்டில் படிக்கிறார்கள்? என்ற தகவல் கிடைக்காமல் இருந்தது.

அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மாநில தொடர்பு அலுவலராக, அரசு சார்பில் நியமிக்கப்பட்டார். சென்னையில் கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களோடு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. உக்ரைனில் உள்ள மாணவர்களோடும் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அங்குள்ள இந்திய தூதரகத்திடம் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதேநேரத்தில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியதோடு, பிரதமருக்கும் கோரிக்கை விடுத்தார். தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். மு.க.ஸ்டாலினே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு சென்று காணொலி அழைப்பு வாயிலாக உக்ரைனில் மருத்துவம் படிக்கும் 3 மாணவர்களோடு பேசி அவர்களுக்கு, ‘நாங்கள் இருக்கிறோம் பயப்படாதீர்கள்’ என்று தைரியம் கொடுத்தார். இந்தநிலையில், மத்திய அரசாங்கம் அவர்களை அழைத்துகொண்டுவர விமானங்களை ஏற்பாடு செய்திருந்தது.

விமானப்படை விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. ஆனால் மீட்பு விமானங்களில் ஏறவேண்டும் என்றால் உக்ரைனில் உள்ள அண்டை நாடுகளுக்கு மாணவர்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஏற்பாடு செய்தது. பல மாணவர்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. இந்தநிலையில் திருச்சி சிவா எம்.பி. தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அவர்கள் டெல்லியில் முகாமிட்டு மத்திய அரசோடு தொடர்புகொண்டு மீட்பு பணிகளை விரைவுப்படுத்தினர். தற்போது தமிழ்நாட்டில் இருந்து உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த 1,921 மாணவர்களில் 1,890 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு, தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதுதவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டைநாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் திரும்ப வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. ஆக போர்க்களத்தில் பாதுகாப்பற்று இருந்த தமிழக மாணவர்களை மீட்டு கொண்டுவர நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மத்திய அரசாங்கம், தமிழக அரசு குறிப்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் போற்றுதலுக்குரிய கருணை அடிப்படையிலான பாராட்டுக்குரிய பணிகளை செய்திருக்கிறார்கள் என்று தமிழ் சமுதாயம் வாழ்த்துகிறது.

Next Story