திசைகாட்டியாய் அமைந்த கலெக்டர்கள் மாநாடு!


திசைகாட்டியாய் அமைந்த கலெக்டர்கள் மாநாடு!
x
தினத்தந்தி 14 March 2022 7:39 PM GMT (Updated: 14 March 2022 7:39 PM GMT)

அரசில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடப்பது வழக்கம்.

அரசில் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் அல்ல 3 நாட்கள் மாநாட்டை கூட்டினார். இந்த மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாக வனத்துறை அலுவலர்களும் புதிதாக சேர்க்கப்பட்டனர். இது வெறுமனே அதிகாரிகளுக்கு உத்தரவிடும் மாநாடாக மட்டுமல்லாமல், அவர்களின் கருத்தையும் பகிர்ந்துகொண்டு, அதற்கு முதல்-அமைச்சர் வழிகாட்டும் மாநாடாக இருந்தது. முதல்-அமைச்சர் கூறியபடி, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பட்டிமன்றங்களின் நடுவராக இருந்தவர் என்பதால், மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேச அனுமதியும் கொடுத்து, குறிப்பிட்டநேரத்தில் முடிக்கச்செய்தது மிகவும் சிறப்புக்குரியது.

முதல்நாள் கூட்டத்திலேயே முதல்-அமைச்சர், ‘நேர்மையான, வெளிப்படையான இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கில் சமரசம் கிடையாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும், குற்றங்களும் நிகழ்ந்து முடிந்தபின்பு அவற்றை தீர்ப்பதற்கும், புலனாய்வு செய்வதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளைவிட அவை நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகள்தான் மக்களுக்கு மிகுந்த பயனைஅளிக்கும்’ என்று கூறியது மிகவும் கவனிக்கப்படத்தக்க ஒன்றாக இருந்தது. வனத்துறை அலுவலர்களுக்கு அவர் கூறிய ஆலோசனை தற்போது தமிழ்நாட்டில் 24 சதவீதமாக இருக்கும், மொத்த பசுமை பரப்பை குறைந்தபட்சம் 33 சதவீதமாக 10 ஆண்டுகளுக்குள் உயர்த்திவிடவேண்டும் என்பதுதான். இதை மட்டும் வனத்துறை நிறைவேற்றிவிட்டால் தமிழகம் வனவளம் மட்டுமல்லாமல், மரவளமும், மழை வளமும் அதிகம் உள்ள மாநிலமாக திகழ்ந்துவிடும்.

2-ம் நாள் கூட்டத்தில், அதிகாரிகளிடம் ‘எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களை போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள். ஒரு ரூபாய் செலவு செய்தால், அந்த ஒரு ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும். அதுதான் சிறந்த நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாக அமையும்’ என்று கூறிய வார்த்தைகள் ஊழல் இல்லாமல் எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்படவேண்டும். முழுமையாக மக்களுக்கு சென்றடையவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக கோடிட்டு காட்டிவிட்டது. 3-ம் நாள் மாநாட்டின் நிறைவு உரையில், ‘கடைக்கோடி மனிதனுடைய கவலைகளை தீர்க்கிற அரசாக, இந்த அரசு அமைந்திருக்கிறது. அதற்கு அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கவேண்டும். சாதிமோதல்களை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்காதீர்கள். ஏனெனில் இது சமூக ஒழுங்கு பிரச்சினை’ என்று கூறியது இப்போதுள்ள காலகட்டங்களில் பல இடங்களில் தலைதூக்கும் சாதிமோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக தெரிவித்தார்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் மு.ரவி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உள்பட பல போலீஸ் அதிகாரிகள், கலெக்டர்கள் கூறிய கருத்துகளை தொகுத்து, எல்லோரும் பின்பற்றவேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினார். ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’, ‘மக்களை தேடி மருத்துவம்’, ‘வேளாண்மை நிதி நிலை அறிக்கை’, ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’ போன்ற திட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் அதிககவனம் செலுத்தவேண்டும் என்பதை கூறினார். மிக முக்கியமாக அதிகாரிகள் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் உள்ளதுபோல, தங்கள் அலுவலகங்களில் ‘டேஷ்போர்டு’ அமைத்து, தங்கள் பணிகளை செதுக்கி வைத்துகொள்ளவேண்டும் என்று கூறியது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது.

எல்லோருடைய பேச்சுகளையும் கேட்டு, அதற்கு தன்னுடைய கருத்துகளை கூறிய முதல்-அமைச்சர், இந்த கூட்டத்தில் ‘திட்டமிடுதல் பற்றி அதிகம் பேசினோம்; அடுத்த கூட்டத்தில் சாதனைகளை பற்றி அதிகம் பேசுவோம்’ என்று அதிகாரிகளிடம் இவையெல்லாம் நிறைவேற்றி கொண்டுவாருங்கள். அந்த சாதனையை பார்ப்போம் என சொல்லாமல் சொல்லி அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டிக்கு மணி அடித்துவிட்டார். இதுவரை நடக்காத மற்றொன்று 3-ம் நாள் கூட்டத்தில் அவர் அதிகாரிகளோடு, ஒன்றாக உட்கார்ந்து உணவருந்தியது தான். முதல்-அமைச்சர் கூறியதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வருகிற ஒரு ஆண்டில் அனைத்து ஆலோசனைகளையும் நிறைவேற்றும்வகையில், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தங்கள் அன்றாட பணிகளை வகுத்துக்கொண்டு, போட்டி மனப்பான்மையோடு செயல்படுவார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Next Story