மக்களுடன் சேர்ந்து பணியாற்று!


மக்களுடன் சேர்ந்து பணியாற்று!
x
தினத்தந்தி 16 March 2022 7:50 PM GMT (Updated: 16 March 2022 7:50 PM GMT)

மறைந்த பேரறிஞர் அண்ணா படிக்காத தத்துவங்களே இல்லை எனலாம். அடிக்கடி சீன தத்துவ மேதை லாவோ சூவின் இந்த வாசகங்களை கட்சியினரிடம் பகிர்ந்துகொள்வார்.

மறைந்த பேரறிஞர் அண்ணா படிக்காத தத்துவங்களே இல்லை எனலாம். அடிக்கடி சீன தத்துவ மேதை லாவோ சூவின் இந்த வாசகங்களை கட்சியினரிடம் பகிர்ந்துகொள்வார். கருணாநிதியும், அண்ணா சொன்ன இந்த கருத்தை அடிக்கடி கட்சியினரிடம் தெரிவிப்பார். அண்ணாவின், கருணாநிதியின் அடியொற்றி நடக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 6-ந்தேதி தூத்துக்குடியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தபோது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு அறிவுரை கூறும் வகையில் அதே கருத்தை சொன்னார்.

“இன்றைக்கு மேயர்களாக, துணை மேயர்களாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக, பேரூராட்சி தலைவர்களாக, துணை தலைவர்களாக, பேரூராட்சியில் உறுப்பினர்களாக, அதேபோல் ஊரக பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி பொறுப்புகளிலும் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி, ஏன் அமைச்சர்களாக இருந்தாலும், முதல்-அமைச்சராக இருக்கும் நானாக இருந்தாலும் இன்றைக்கு எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி என்னவென்று கேட்டால், அறிஞர் அண்ணா அடிக்கடி எடுத்து சொல்வதுண்டு. ‘மக்களிடம் செல், மக்களுடன் சேர்ந்து பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ்’ என்று நமக்கு கற்று தந்திருக்கிறார். எனவே அதை உணர்ந்து நாம் நம்முடைய கடமையை ஆற்ற அவர் வழியில் செயல்பட்ட கலைஞரின் உருவச்சிலையை திறந்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று உங்கள் அத்தனை பேரையும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்’’, என்று அறிவுறுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 21 மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், 138 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 489 பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தது. கடந்த 4-ந்தேதி நடந்த மேயர் தேர்தலில் 20 மாநகராட்சிகளில் தி.மு.க.வும், ஒரு மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. 125 நகராட்சிகளில் தி.மு.க.வும், 2 இடங்களில் அ.தி.மு.க.வும், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடங்களிலும் 4 இடங்களில் சுயேச்சைகளும் தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர். 4 இடங்களில் உறுப்பினர்கள் போதிய எண்ணிக்கையில் வராததால் தேர்தல் நடைபெறவில்லை.

பேரூராட்சிகளை பொறுத்தமட்டில் 395 இடங்களில் தி.மு.க.வும், 20 இடங்களில் காங்கிரசும், 18 இடங்களில் அ.தி.மு.க.வும், 8 இடங்களில் பா.ஜ.க.வும், 3 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், ம.தி.மு.க., அ.ம.மு.க. தலா 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு இடத்திலும், 25 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர். போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வராததால் 13 இடங்களில் தேர்தல் நடைபெறவில்லை. ஏற்கனவே கிராமப்புற ஊராட்சிகளில் தலைவர்கள், உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆக தமிழ்நாட்டில் இப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவருமே மக்களுக்கு சேவை செய்வதையே தங்கள் முதல் கடமையாக மனதில் பதிய வைத்து அண்ணா கற்றுத்தந்த உணர்வான, ‘மக்களிடம் செல், மக்களுடன் சேர்ந்து பணியாற்று, மக்களோடு மக்களாக இருந்து வாழ்’ என்ற உணர்வோடு அவர்கள் மக்கள் பணியாற்றவேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

மேயர்கள், நகரசபை தலைவர்கள், பேரூராட்சி தலைவர்களில் பெரும்பாலானோர் பெண்கள், இளைஞர்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. அரசு நிறைவேற்றும் சட்டங்கள், தீர்மானங்கள், உத்தரவுகள், நிதி ஒதுக்கீடுகள் அனைத்துமே மக்களை சென்றடையும் மகத்தான பணி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளிடம் தான் இருக்கிறது என்ற வகையில் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நல்ல முறையில் பணியாற்றி அவர்களிடம் செல்வாக்கு பெற்றால் எதிர்காலத்திலும் வெற்றி மீது வெற்றி தங்களுக்கு வந்து குவியும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் மனதில் பதிய வைத்துக்கொள்ளவேண்டும்.

Next Story