விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் தரும் வேளாண் ‘பட்ஜெட்’


விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் தரும் வேளாண் ‘பட்ஜெட்’
x
தினத்தந்தி 20 March 2022 8:03 PM GMT (Updated: 20 March 2022 8:03 PM GMT)

பழங்காலங்களில் இருந்து மிகவும் மேன்மையான தொழிலாக விளங்கிய விவசாயத்தொழில், பிற்காலங்களில் நலிவடைய தொடங்கிவிட்டது.

பழங்காலங்களில் இருந்து மிகவும் மேன்மையான தொழிலாக விளங்கிய விவசாயத்தொழில், பிற்காலங்களில் நலிவடைய தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் விவசாயம், லாபகரமான தொழிலாக அமையாததுதான். அதாவது விவசாயிகளின் உழைப்புக்கும், செலவுக்கும் உரிய வருமானம் கிடைக்காமல் போனதால், கையிலிருந்து போட்ட செலவைக்கூட விவசாயிகளால் எடுக்க முடியவில்லை. இந்தநிலையில், வரப்புகளோடு செழிப்பாக இருந்த விவசாய நிலங்கள் மஞ்சள்நிற கல் நடப்பட்டு வீட்டு மனைகளாக மாறிக்கொண்டிருக்கின்றன.

மறைந்த பேரறிஞர் அண்ணா, ‘உழவனின் உள்ளத்திலே புயல் இருக்குமானால், வயலிலே வளம் காணமுடியாது’, என்றார். அப்படி நலிந்து போய்க்கொண்டிருந்த விவசாயத்தொழிலை மீட்க, விவசாயத்துக்கு புத்துயிரூட்ட விவசாயிகள் வாழ்வில் வளம்காண விவசாயத்துக்கென தனி ‘பட்ஜெட்’ வேண்டும் என்பது நீண்டநாட்களாக விவசாயிகளின் கோரிக்கையாக இருந்தது. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘வேளாண்மைக்கு தனி ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டு, வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும்’ என்று கூறியிருந்தார்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை நிறைவேற்றும் வகையில் கடந்தாண்டு ஆகஸ்டு 14-ந்தேதி, முதல் வேளாண் ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை 2-வது ‘பட்ஜெட்’ தாக்கல் செய்யப்பட்டது. கடுமையான நிதிநெருக்கடி இருக்கும்போதும் விவசாயத்துக்கு கடந்த ஆண்டைவிட கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தாண்டு ரூ.33,007 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசுக்கு விவசாய வளர்ச்சியிலுள்ள அக்கறையை காட்டுகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக வருமானம் கிடைப்பதற்காக, உணவு பதப்படுத்தும் துறை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்ற நல்ல அறிகுறி இந்த ‘பட்ஜெட்’டில் தெரிகிறது.

2023-ம் ஆண்டை ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு’ என ஐ.நா. சபை அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்தாண்டு பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய ‘சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்’ என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்தது. விவசாயிகள் தங்கள் சாகுபடியுடன் கறவை மாடுகள், ஆடுகள், நாட்டுக்கோழிகள், தீவன பயிர்கள், மரக்கன்றுகள், தேனி வளர்ப்பு, மண்புழு உரத்தயாரிப்பு ஆகிய வேளாண் தொடர்பான பணிகளையும் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒரு தொகுப்புக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வீதம் 13 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் தொடங்கப்பட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் தற்போது இந்தியாவின் தேவைக்கு வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. சூரியன் இருக்கும் திக்கில் முகம்திருப்பி புன்னகைபுரியும் சூரியகாந்தி பயிர் சாகுபடிக்கேற்ற தட்பவெப்பநிலை, சாகுபடி பரப்பு தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏராளமாக இருப்பதால் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு ஆகிய எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

வேளாண் வளர்ச்சி மட்டுமல்லாமல் பணப்பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடியை உயர்த்தவும், 10 லட்சம் பனை விதைகளை வினியோகிக்கவும் அரசு மிகத்தீவிரமாக நடவடிக்கைகளை இந்தாண்டு மேற்கொள்ளப்போகிறது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் கொடுத்துவந்த, கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ‘உழவர் சந்தை’ புத்துயிர் பெறப்போகிறது என்ற செய்தி விவசாயிகளின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் பயன்பெறப்போகும் மக்களின் மனதிலும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும். விவசாயம் மட்டுமல்லாமல் கால்நடை பராமரிப்பு, மீன்வளம், மீனவர் நலன், கூட்டுறவு, பட்டுவளர்ப்பு போன்ற அனைத்து துறைகளையும் தன்னோடு இணைத்து, அதன் விளைவாக விவசாயத்துக்கும், விவசாயிகளின் வாழ்வின் ஏற்றத்துக்குமான திட்டங்கள் இந்த வேளாண் ‘பட்ஜெட்’டில் இடம்பெற்றுள்ளன.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்னதுபோல, மண்ணை கண்ணாய் மதித்து, உள்ளத்தை ஊன்றி உழவு செய்து, நாற்றுகளுக்கும் கைகளால் குடைபிடித்து, கடும் உழைப்பை நாள்தோறும் கடைபிடித்து, உடலை பேணுவது போல வயலைப்பேணி, வறட்சியை பொறுத்து, வெள்ளத்தை கடந்து, மகப்பேறு போல மகசூலைப்பெறும் உழவர் வாழ்க்கையை மீண்டும் செழிக்க செய்வது, இந்த ‘பட்ஜெட்’டில் கூறப்பட்ட அறிவிப்புகளை அப்படியே சம்பந்தப்பட்ட துறைகள் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது.

Next Story