முதலீடுகளை கொண்டுவரும் முதல்-அமைச்சரின் துபாய் பயணம்!


முதலீடுகளை கொண்டுவரும் முதல்-அமைச்சரின் துபாய் பயணம்!
x
தினத்தந்தி 24 March 2022 7:50 PM GMT (Updated: 2022-03-25T01:20:08+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 2030-ம் ஆண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 2030-ம் ஆண்டுக்குள் ரூ.75 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே அரசின் குறிக்கோள் என்று பிரகடனப்படுத்தினார். அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான தொழில்வளர்ச்சி ஏற்பட பல்வேறு முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தியிருக்கிறார். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இதுதான் “திராவிட மாடல்” என்பது. அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று எப்போதும்கூறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த திசையில் தொழில்வளர்ச்சி மேம்படுவதை தன் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார்.

தொழில்புரிவதை மிகவும் எளிதாக்கிடவும், அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும் நான் உறுதிபூண்டுள்ளேன் என்று கூறிவரும் அவர், முதலீட்டாளர்கள் தொழில்தொடங்குவதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெற்று, தங்கள் திட்டங்களை விரைவாகவும், எளிதாகவும் நிறுவுவதற்கு 24 துறைகளின் 100 சேவைகள்கொண்ட ஒரு மேம்படுத்தப்பட்ட ஒற்றைசாளர இணையதளமாக விளங்கும் வகையில் ஒரு புதிய இணையதளத்தையும் தொடங்கிவைத்தார். தமிழக அரசு அளிக்கும் ஊக்கத்தால், வழங்கப்படும் சலுகைகளால் நம் மாநில தொழில்முனைவோர்கள் மட்டுமல்லாது, அகில இந்திய தொழில்முனைவோர், ஏன் வெளிநாட்டு தொழில்முனைவோர்கூட தமிழ்நாட்டில் தொழில்முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்தவகையில், துபாய், அபுதாபி போன்ற வெளிநாட்டு தொழில்முனைவோர்களை நேரடியாக சந்தித்து புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி உள்பட ஒரு குழுவை அழைத்துக்கொண்டு துபாய், அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலக கண்காட்சிகள் மிக பழமையான, மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த உலக கண்காட்சி 6 மாதம் நடைபெறும். கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை துபாயில் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் கண்காட்சியாக நடந்துவருகிறது. இந்த உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கில், இன்று முதல் கண்காட்சி முடியும் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டு அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார். இந்த கண்காட்சிக்கு வருபவர்கள் தமிழ்நாட்டில் தொழில்துறை, மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிஅரங்குகளில், காட்சிப் படங்கள் திரையிடப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு தொழில்கள் மூலம் உற்பத்திசெய்யப்படும் பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த உலக கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்பதால், அதில் கலந்துகொள்ளவரும் எல்லோரும் தமிழ்நாடு அரங்கை பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் தொழில்தொடங்கஇருக்கும் வாய்ப்புகளை பார்ப்பார்கள். அதுசம்பந்தமாக விளக்கமளிக்க முதல்-அமைச்சர் தலைமையிலான குழுவும் அங்கு தயாராக இருக்கிறது. இந்த பயணத்தின்போது முதல்-அமைச்சர் தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும்வகையில் துபாய், அபுதாபி போன்ற நாடுகளின் பொருளாதாரம், வெளிநாடு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் மந்திரிகளையும், துபாயில் முன்னணி வணிக மற்றும் தொழில்நிறுவன அதிகாரிகளையும் சந்திக்கிறார். வர்த்தகம் மற்றும் தொழில்சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறார்.

நேற்று சட்டசபையிலேயே முதல்-அமைச்சர், இந்தியாவிலேயே தொழில்வளர்ச்சியில் தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு நம் தமிழகம் வரவேண்டும். அப்படிப்பட்ட நம் வெற்றிக்கு என்னுடைய துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணைநிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார். தொழில்முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சரே வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பாராட்டுக்குரியது. ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’ என்று அன்று பாடினார் பாரதியார், அதுபோல ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் தொழில்வளங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று தமிழகமக்கள் முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

Next Story