விடைபெறுகிறதா கொரோனா?


விடைபெறுகிறதா கொரோனா?
x
தினத்தந்தி 27 March 2022 7:40 PM GMT (Updated: 2022-03-28T01:10:19+05:30)

2 ஆண்டுகளாக உலகத்தையே உலுக்கிக்கொண்டிருந்த கொரோனா இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

2 ஆண்டுகளாக உலகத்தையே உலுக்கிக்கொண்டிருந்த கொரோனா இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் மொத்த பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 பேர். 10 நாட்களாக தொடர்ந்து உயிரிழப்பு இல்லை. மருத்துவமனையில் 394 பேர்களே சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியும் கிடைத்து வருகிறது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி ஓமன் நாட்டிலிருந்து வந்த காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளர்தான் முதலாவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மார்ச் 24-ந்தேதி மத்திய அரசாங்கம் பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின்கீழ் கட்டுப்பாடுகளை பிறப்பித்தது. இடையில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கொரோனா முதல்அலை தொடங்கி, ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6 ஆயிரத்து 993 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த முதல்அலையில் அதிகபட்சமாக ஆகஸ்டு 15-ந்தேதி 127 பேர் உயிரிழந்திருந்தனர். படிப்படியாக முதல்அலை குறைந்து, 2-வது அலை பாதிப்பு 2021-ம் ஆண்டு தொடங்கியது. அதில் அதிகபட்சமாக மே மாதம் 21-ந்தேதி 36 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டனர். மே 30-ந்தேதி 493 பேர் அதிகபட்சமாக உயிரிழந்தனர். 3-வது அலை தொடங்கி, இந்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி 30 ஆயிரத்து 744 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் முதல் டோஸ், 2-வது டோஸ், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிபோடும் பணிகள் மிகத்தீவிரமாக நடந்தன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும்பணி முதற்கட்டமாக நடந்து, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இப்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிபோடும் பணி நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை கணக்குப்படி, தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92.10 சதவீதம் பேர் முதல்தவணை தடுப்பூசியையும், 75.50 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியையும் செலுத்தியிருக்கின்றனர். 12 ஆயிரத்து 585 பஞ்சாயத்துகளில் 3 ஆயிரத்து 240 பஞ்சாயத்துகளும், 121 நகராட்சிகளில் 27 நகராட்சிகளும் 100 சதவீதம் தடுப்பூசியை போட்டு சாதனை படைத்துள்ளன. மேலும் 5 மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக பெருமை சேர்க்கின்றன. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நன்றாக குறைந்த நிலையில், திருமணத்தில் 200 பேர் மட்டும் பங்கேற்கவேண்டும் என்றும், இறப்பு நிகழ்வுகளில் 100 பேர் மட்டும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் ஆகிய 2 கட்டுப்பாடுகளை தவிர மற்ற கட்டுப்பாடுகள் எல்லாமே விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்த 2 கட்டுப்பாடுகளும் விரைவில் முதல்-அமைச்சரின் ஆலோசனைக்கு பிறகு விலக்கிக்கொள்ளப்படும் என்ற செய்தியை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவிட்டநிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மார்ச் 31-ந்தேதி முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறைஅமைச்சகம் தெரிவித்துவிட்டது. என்றாலும், ஆங்காங்கு உள்ள நிலைமைக்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. கொரோனா குறைந்துவிட்டாலும், முககவசம் அணிவது, சமூகஇடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற விதிகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. சில நாடுகளிலும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே தமிழ்நாட்டிலும் கவனமாக இருக்கவேண்டும். இன்னும் 3 மாதங்களுக்கு முககவசம் அணிவதையும், சமூகஇடைவெளியை பின்பற்றுவதையும் யாரும் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால் இப்போது இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 4-வது அலை உருவாக வாய்ப்புள்ளது என்ற அபாய செய்தியையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துவிட்டார். 4-வது அலையை தடுக்க தடுப்பூசியும், முககவசமும்தான் தீர்வு. எது எப்படியாக இருந்தாலும் மக்கள் கவனமாக இருந்தால் இப்போது குறைந்து கொண்டிருக்கும் கொரோனாவை ‘போய் வா கொரோனா திரும்பி வராதே’ என்று தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிக்க முடியும். எனவே, போகும் கொரோனா திரும்பிவராமல் இருக்கவேண்டுமென்றால் அது மக்கள் கையில்தான் இருக்கிறது.

Next Story