தமிழகத்துக்கு தஞ்சம் கேட்டு வரும் இலங்கை தமிழர்கள்!


தமிழகத்துக்கு தஞ்சம் கேட்டு வரும் இலங்கை தமிழர்கள்!
x
தினத்தந்தி 28 March 2022 7:40 PM GMT (Updated: 2022-03-29T01:10:09+05:30)

இலங்கையில் வரலாறுகாணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

இலங்கையில் வரலாறுகாணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாட்டிலிருந்து எதையும் இறக்குமதி செய்யமுடியாத சூழ்நிலையில், எல்லா விலையும் விண்ணுக்கு எகிறிவிட்டது. வருமானமும் இல்லாமல், இப்போதுள்ள விலைவாசியில் எந்த பொருட்களையும் வாங்கமுடியாமல் அடித்தட்டுமக்கள் பசி, பட்டினியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, கடந்த 1980-ம் ஆண்டுகளிலிருந்து 2009-ம் ஆண்டு வரை இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால் ஏராளமான பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். லட்சக்கணக்கில் வந்த நிலையில் பலர் திரும்பிச்சென்றபிறகு, தற்போது தமிழ்நாட்டில் உள்ள 106 அகதிகள் முகாம்களில் 60 ஆயிரம் பேரும், போலீஸ் பதிவோடு வெளியே 30 ஆயிரம் பேரும் தங்கியிருக்கிறார்கள். 2012-ம் ஆண்டுக்குப்பிறகு யாரும் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு இலங்கையிலிருந்து வந்ததில்லை.

தற்போது இலங்கையில் வாழ வழியில்லாமல், தாய் தமிழ்நாட்டுக்கு தஞ்சம்தேடி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் 2 குடும்பங்களைச்சேர்ந்த கஜேந்திரன் (வயது 24), மேரி கிளாரின் (23), இவர்களுடைய 4 மாத ஆண் குழந்தை நிஜாத், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த தியோரி (28), குழந்தைகள் எஸ்தர் (9), மோசஸ் (6) ஆகியோர் இலங்கையிலிருந்து ஒரு ஆளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுத்து, இரவு முழுவதும் பயணம்செய்து, தனுஷ்கோடி அருகிலுள்ள 4-ம் மணல்திட்டில் இறங்கி என்ன செய்வது? என்று தெரியாமல், திக்குமுக்காடிப்போய் நின்றிருந்தனர். அன்று இரவு மேலும் 2 ஆண்கள், 3 பெண்கள், 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் கொண்ட 10 பேர் தனுஷ்கோடி அருகே உள்ள மற்றொரு மணல் திட்டில் படகில் வந்து இறங்கியிருக்கிறார்கள். இவர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டு, தமிழக போலீசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தஞ்சம் கேட்டுவந்த தியோரி, ‘இலங்கையில் விலைவாசி உயர்வு, யாரும் வாங்கமுடியாத நிலையிலிருக்கிறது. சிலிண்டர் விலை ரூ.1,900-ல் இருந்து ரூ.4 ஆயிரம் ஆகவும், ஒரு கிலோ அரிசிவிலை ரூ.130-ல் இருந்து ரூ.230 ஆக உயர்ந்தும், ஒரு முட்டை விலை ரூ.35 ஆகவும் இலங்கை பணத்தில் விற்கப்படுகிறது’ என்றார். இலங்கையில் ஒரு ரூபாய் என்பது இந்திய பணத்தில் 27 காசுகளுக்கு சமமானது. இதற்கு முன்பாக வந்தவர்கள் அகதிகளாக கருதப்பட்டு, உடனடியாக அகதிகள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். அகதிகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தத்தில் ஏதாவது நாட்டிலிருந்து சாதி, மத, இன, தேசியவகையிலோ, ஏதாவது ஒரு சமூகஅணி அல்லது அரசியல் கருத்தைக் கொண்டிருப்பவர்களோ கொடுமைப்படுத்தப்பட்டு, அங்கு வாழமுடியாமல் வெளிநாடுகளில் தஞ்சம்அடைந்தால்தான் அகதி என்ற கணக்கில் சேர்க்கப்படுகிறார்கள். இவ்வாறு விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியால் வந்தவர்கள் அகதிகள் கணக்கில் எடுப்பதில்லை.

தற்சமயம் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் எதற்காக, எப்படி வந்தார்கள்? என்ற வகையில் விசாரணை நடந்துவருகிறது. தமிழக அரசின் அயலக தமிழர்நலம் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் மண்டபத்தில் முகாமிட்டார். இந்த 16 பேர் போல, இன்னும் பலர் வரும் சூழ்நிலை இருக்கிறது. இப்போது வந்துள்ள 16 பேருக்கும் தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில் தஞ்சம்கொடுப்பது? என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில், ‘இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, மத்திய அரசாங்கத்திடமும், அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்திலும், மந்திரிகளிடத்திலும் தொடர்புகொண்டு, இதை எப்படி கையாளவேண்டும் என்று சட்டரீதியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை நிச்சயமாக தமிழக அரசு ஏற்படுத்தித்தரும்’ என்ற தெளிவான உறுதியை அளித்துள்ளார். மு.க.ஸ்டாலின் அளித்திருக்கும் உறுதி, இலங்கை தமிழர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இனி மத்திய அரசாங்கம் கையில்தான் இருக்கிறது. சட்டத்தில் இடம் இல்லையென்றாலும், மனிதாபிமான அடிப்படையிலும், தமிழர்கள் என்பதாலும் மத்திய அரசாங்கம் அவர்களை அகதிகளாக கருதி, அவர்களுக்கான உதவிகளை செய்யவேண்டும்.

Next Story