ரூ.6,100 கோடி முதலீடுகளை அள்ளிக்கொண்டு வந்த முதல்-அமைச்சர்!


ரூ.6,100 கோடி முதலீடுகளை அள்ளிக்கொண்டு வந்த முதல்-அமைச்சர்!
x
தினத்தந்தி 29 March 2022 7:56 PM GMT (Updated: 2022-03-30T01:26:42+05:30)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தொழில் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுள்ளார். இந்த நிலையில், “தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நானே உங்களை தேடி வருகிறேன்” என்ற முடிவில், முதல்-அமைச்சரான பிறகு தனது முதல் வெளிநாட்டு பயணமாக கடந்த 24-ந்தேதி துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றார்.

துபாய் விமான நிலையத்தில் ஏராளமான தமிழர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அன்று இரவு, ஏற்கனவே தி.மு.க. அரசுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள டி.பி. வேர்ல்டு என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமதுபின் சுலைமானுடன் இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டே, “எங்கள் மாநிலத்தில் நீங்கள் மேலும் முதலீடு செய்யவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது, “ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை செயல்படுத்துவதற்காக எங்கள் அரசில் ஏதாவது இடர்பாடு இருக்கிறதா?” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டபோது, “எந்த சிக்கலும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடைபெறுகிறது” என்று அவர் கூறியவுடன் மனம் மகிழ்ந்தார். அடுத்த நாள் துபாய் சர்வதேச வர்த்தக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கை திறந்துவைத்து, துபாய் பன்னாட்டு நிதி மையத்தில், ஐக்கிய அரபு அமீரக மந்திரிகளுடன், தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் வரும்போது, ஏராளமான தமிழர்கள் நின்று வரவேற்பு கொடுத்தனர். நம் நாட்டில் இவ்வளவு மகத்தான வரவேற்பை பெறும் இவர் யார்? என்று பார்ப்பதற்காக, துபாயிலுள்ள அரேபியர்கள், அங்குவாழும் வெளிமாநில இந்தியர்கள் மட்டுமல்லாமல், சுற்றுலா வந்த வெளிநாட்டினரும், ஆர்வத்தோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க திரண்டு வந்திருந்தனர். அங்கிருந்து உலகிலேயே அதிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கோபுரத்தில், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சி குறித்து ஒளிபரப்பப்பட்ட அழகிய காட்சிப்படத்தை பார்வையிட்டார். செம்மொழியான தமிழ்மொழியாம் பாடல் இசைக்கப்பட்டபோது, வெளிநாட்டினர் கூட அதைக்கண்டு ரசித்தனர்.

அடுத்த நாள் ஐக்கிய அரபு நாட்டின் முதலீட்டாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எல்லோரையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவருமாறு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தில், துபாயை சேர்ந்த 5 நிறுவனங்களுடன் ரூ.2,600 கோடி முதலீட்டில் 9,700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒப்பந்தங்கள் அவர் முன்னிலையில் கையெழுத்தானது. அன்று துபாய் வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றினார். முதல்-அமைச்சரை பார்த்தவுடன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “நாம் தமிழினத்தை சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

அன்று மாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றார். அங்கு கேரளாவை சேர்ந்த லுலு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடி முதலீட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில், 2 வணிக வளாகங்கள், ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் நிறுவனம் தொடங்க கையெழுத்திட்டார். தொடர்ந்து, அபுதாபி வாழ் தமிழ் சமூகம் நடத்திய பாராட்டு விழாவில் பலத்த கைதட்டல், ஆரவாரத்துக்கிடையே கலந்துகொண்டார்.

அறிஞர் அண்ணாவை, நின்றால் பொதுக்கூட்டம், உட்கார்ந்தால் மாநாடு, நடந்தால் ஊர்வலம் என்பார்கள். அதேபோலத்தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் துபாய், அபுதாபி சுற்றுப்பயணத்திலும், எங்கு சென்றாலும் மாநாடாகவும், ஊர்வலமாகவும் இருந்தது. அங்குவாழும் தமிழர்களின் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. மொத்தத்தில் ரூ.6,100 கோடி முதலீடோடு 14,700 பேருக்கு வேலைவாய்ப்பையும் கொண்டுவந்த முதல்-அமைச்சரின் இந்த பயணம், ஒரு வெற்றிப்பயணம் என்பதில் சந்தேகமே இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிறுவனங்களோடு தொடர்ந்து பணியாற்றி, விரைவில் அனைத்து திட்டங்களும் செயல்பாட்டுக்கு வருவது, இனி அனைத்துத்துறை அலுவலர்களின் கையில்தான் இருக்கிறது.

Next Story