சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வா?


சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வா?
x
தினத்தந்தி 31 March 2022 7:59 PM GMT (Updated: 2022-04-01T01:29:43+05:30)

குடும்பங்களில் ஆண் சம்பாதித்து வந்தாலும்சரி, ஆண்-பெண் இருவரும் சம்பாதித்து வந்தாலும்சரி குடும்ப வரவு-செலவுகளை கவனித்து, வாழ்க்கையை ஓட்டுவது பெண்கள் கையில்தான் இருக்கிறது.

குடும்பங்களில் ஆண் சம்பாதித்து வந்தாலும்சரி, ஆண்-பெண் இருவரும் சம்பாதித்து வந்தாலும்சரி குடும்ப வரவு-செலவுகளை கவனித்து, வாழ்க்கையை ஓட்டுவது பெண்கள் கையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு பொருட்களின் விலைஉயர்வையும் கவனித்து குறைந்தவிலையில் கிடைத்தால் தாராளமாக வாங்குவதும், விலை உயர்ந்தால் அதன் பயன்பாட்டை சற்று குறைத்துக்கொண்டு, அதற்கு மாற்றுப்பொருட்களை வாங்குவதும் இல்லத்தரசிகளுக்கு கைவந்த கலை.

அத்தகைய நிலையில், இப்போது சமையல்கியாஸ் சிலிண்டர் விலை ஒரேநேரத்தில் ரூ.50 உயர்ந்ததை, இல்லத்தரசிகள் எங்களால் தாங்கமுடியவில்லை என்கிறார்கள். பழையகாலங்களில் அடுப்பெரிக்க விறகுகளை பயன்படுத்தி வந்தார்கள். பிற்காலங்களில் நிலக்கரி அடுப்பு, மண்எண்ணெய் ‘ஸ்டவ்’ என்று தொடங்கி தற்போது பயன்படுத்தும் சமையல் கியாஸ் அடுப்பு வழக்கம் வந்தது. மரங்களை வெட்டி பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கில், மத்திய-மாநில அரசுகள் சமையல்கியாஸ் சிலிண்டரை பயன்படுத்துவதையே ஊக்குவித்தது. தற்போது இந்தியாவில் 29 கோடியே 11 லட்சம் சமையல்கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் இருக்கின்றன. இதற்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகவைத்து கியாஸ் சிலிண்டரின் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. ஆனால் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் தேர்தலையொட்டி பெட்ரோல்-டீசல், சமையல்கியாஸ் சிலிண்டர் விலை 137 நாட்களாக உயர்த்தப்படவில்லை. மக்களும் அடிக்கடி சட்டசபை தேர்தல்கள் வராதா? இப்படி விலை உயராமல் இருக்குமே என்று மனதில் நினைத்துக்கொண்டிருந்தார்கள். தேர்தல்முடிந்தபிறகு, திடீரென கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தியிருப்பது, இல்லத்தரசிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரூ.10 வரை உயர்த்தினால்கூட அவ்வளவு வலி தெரியாது. ஆனால் ஒரேநேரத்தில் ரூ.50 உயர்த்தியிருப்பது இல்லத்தரசிகளுக்கு தாங்கமுடியாத வேதனையை அளித்துள்ளது.

இப்போது கியாஸ் சிலிண்டர் ரூ.965.50 என்ற விலையில் இருக்கிறது. சிலிண்டர் கொண்டுவருபவர்களுக்கு வழக்கமாக வீடுகளில் கொடுக்கும் ‘டிப்சை’ சேர்த்தால், இனி ஒரு சிலிண்டரை வாங்க ரூ.1,000 வரை செலவிடவேண்டும் என்று இல்லத்தரசிகள் கூறுகிறார்கள். கடந்தஆண்டு ஜனவரிமாதம் சமையல்கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி ரூ.915.50 ஆக உயர்ந்தது. இப்போது ரூ.50 உயர்ந்த நிலையில், இதோடு நிற்குமா? அல்லது இன்னமும் உயருமா? என்ற அச்சம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தல் இருந்தாலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தியிருந்தால் இவ்வளவு விமர்சனங்கள் வந்திருக்காது. தேர்தலுக்காக இவ்வளவு நாட்கள் விலைஉயர்வை தள்ளிப்போட்டுவிட்டு, இப்போது திடீரென்று உயர்த்துவதை பொதுமக்களால் ஏற்கமுடியாத நிலையிருக்கிறது.

தமிழ்நாட்டில் 34 லட்சத்து 51 ஆயிரத்து 561 சமையல்கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த குடும்பங்கள் அனைத்திலும் இப்போது இதுதான் பேச்சாக இருக்கிறது. இனிமேலும் விலை உயர்வு செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கேற்றாற்போல் வரியை குறைத்து, விலையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிலிண்டருக்கு நிறைய மானியத்தை அரசு கொடுத்துவந்த நிலையில், இப்போது 24 ரூபாய் 50 காசுதான் வழங்குகிறது. பலருக்கு அந்த பணமும் வந்துசேருவதில்லை. எனவே இனி விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், சாதாரண மக்களால் தாங்கமுடியாது என்ற வகையில் மானியத்தொகையை உயர்த்தவேண்டும் என்பதும் பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது. இனிமேல் விறகு அடுப்புக்கு போகமுடியாத சூழ்நிலையில், எவ்வளவு விலையை உயர்த்தினாலும் சமையல் கியாஸ் சிலிண்டரைதான் பயன்படுத்தவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள இல்லத்தரசிகள், இனியும் விலையை உயர்த்தி எங்களுக்கு அதிர்ச்சியை தரவேண்டாம்; போதும் சிலிண்டர் விலை உயர்வு என்று கூறுகிறார்கள்.

Next Story