சொத்து வரி உயர்வு!


சொத்து வரி உயர்வு!
x
தினத்தந்தி 3 April 2022 7:56 PM GMT (Updated: 3 April 2022 7:56 PM GMT)

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள், 36 மாவட்ட ஊராட்சிகள், 388 பஞ்சாயத்து யூனியன்கள், 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இப்போது மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இனி நமக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு நிபந்தனைகளின் பெயரில்தான் சொத்து வரியை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் தங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட 15-வது நிதிக்குழு தன் அறிக்கையில், இந்த 2022-2023-ம் நிதியாண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், நிதிக்குழுவில் பரிந்துரையின் பேரில் மானியம் பெறவேண்டும் என்றால், இந்த ஆண்டு சொத்து வரியின் தள வீதங்களை (புளோர் ரேட்ஸ்) அறிவிக்கை செய்யவேண்டும். மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஆண்டுதோறும் சொத்து வரி விகிதத்தை உயர்த்திடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. நிதிக்குழுதான் இவ்வாறு சொத்து வரியை உயர்த்துவதற்கு நிபந்தனை விதித்துள்ளது என்றால், மத்திய அரசாங்கத்தின் தூய்மை இந்தியா திட்டம்-20 மற்றும் அம்ரூட்-20 ஆகிய திட்டங்களிலும் இதே நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சமாக 100 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சம் 25 சதவீதமும், அதிகபட்சம் 150 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏனைய மாநகராட்சிகளிலும் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 1998-ம் ஆண்டிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2008-ம் ஆண்டிலும்தான் சொத்து வரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அதேபோல, இவ்வளவு வரி உயர்வுக்கு பிறகும் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, புனேயில் விதிக்கப்படும் சொத்து வரியை கணக்கிட்டால், தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர் போன்ற மாநகராட்சிகளில் மிகக் குறைவாகவே உள்ளது. சொத்து வரி சீராய்வு இப்போது புதிதாக செய்துவிடப்படவில்லை. 2013-ம் ஆண்டே இதுபோல சீராய்வு செய்வதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, பின்னர் 2019-ம் ஆண்டு நவம்பரில் நிறுத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து சொத்து வரி சீராய்வு மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட பல கருத்துகளின் அடிப்படையிலேயே இப்போது இந்த வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனாவால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், இப்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் உயர்வு, மருந்து விலை உயர்வு என்ற பலமுனை தாக்குதல்களை மேற்கொண்டு தாங்கமுடியாமல் சுருண்டுபோன நிலையில், சொத்து வரி உயர்வும் இதில் சேர்ந்துகொண்டால் மக்களுக்கு கஷ்டம்தான்.

சொத்து வரியை இவ்வாறு உயர்த்தும்போது, வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மாத வாடகையும், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணமும் உயரும் அபாயம் இருக்கிறது. ஆனாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்ய வேண்டுமென்றால், கண்டிப்பாக நிதி ஆதாரம்வேண்டும். இப்போதுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது. எனவே, இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும், மத்திய அரசாங்கத்தின் மானியத்தை பெறவும் இதை செய்தாகவேவேண்டும். மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வேண்டும் என்றால் இதுபோல கஷ்டங்கள் வருவது இயல்பே.

Next Story