அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைத்த ஆனந்த பரிசு!


அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு கிடைத்த ஆனந்த பரிசு!
x
தினத்தந்தி 8 April 2022 9:02 PM GMT (Updated: 8 April 2022 9:02 PM GMT)

சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் சமமாக கிடைப்பதை உறுதிப்படுத்துவதாகும்.

சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் சமமாக கிடைப்பதை உறுதிப்படுத்துவதாகும். ‘நீட்’ தேர்வு வருவதற்குமுன்பு 2014-2015-ல் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 38 மாணவர்களுக்கும், 2015-2016-ல் 36 மாணவர்களுக்கும் மருத்துவக்கல்லூரிகளில் இடம்கிடைத்த நிலையில், இவ்வளவு குறைவான இடங்கள் கிடைத்திருக்கிறதே என எல்லோரும் ஆதங்கப்பட்டு கொண்டிருந்தனர். ‘நீட்’ தேர்வு அமலுக்கு வந்ததும் இந்த ஆதங்கம் பெரும்கவலையாக மாறிவிட்டது. 2017-2018-ல் 3 மாணவர்களுக்கும், 2018-2019-ல் 5 மாணவர்களுக்கும் மட்டுமே மருத்துவக்கல்லூரிகளில் இடம்கிடைத்தது.

அந்தநேரம் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, அரசு பள்ளிக்கூடங்களில் படித்து, ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களில் 7.5 சதவீதம் பேருக்கு இடம்கிடைக்கும் வகையிலான உள்இடஒதுக்கீடு சட்டமசோதாவை நிறைவேற்றியது. 2020-2021-ம் ஆண்டில் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு காரணமாக 436 பேருக்கு இடம் கிடைத்தது. இந்த ஆண்டு 544 பேர் மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிபொறுப்பை ஏற்றவுடன், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், என்ஜினீயரிங், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப்படிப்பு போன்ற தொழிற்கல்விப்படிப்புகளுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றி மிகப்பெரிய புரட்சியை செய்தார். மேலும் இந்தக்கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி இடம்கிடைத்த மாணவர்களுக்கு ஆகக்கூடிய செலவும், கல்வி, விடுதி, கலந்தாய்வுக்கட்டணங்கள் உள்பட அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்குரிய அரசாணையையும் பிறப்பித்து, நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.

இத்தகைய சூழ்நிலையில், மருத்துவக்கல்லூரி மாணவர்சேர்க்கையில் அரசுப்பள்ளிக்கூட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்தது, அரசியல் சட்டத்துக்கு முரணானது; இது செல்லாது என்று சி.பி.எஸ்.இ. மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூட மாணவர்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்து, ஒரு வரலாற்று சிறப்புமிகுந்த தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெறும் அரசுப்பள்ளிக்கூட மாணவர்கள் சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர். எனவே இந்த இடஒதுக்கீடு சட்டமன்றத்தின் அதிகாரத்துக்குட்பட்டது. மேலும் இந்த சட்டத்தை பரிந்துரை செய்த நீதிபதி பி.கலையரசன் ஆணையம், பல்வேறு நிலைமைகளை ஆராய்ந்தே தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அரசுப்பள்ளிக்கூட மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டு வருமானம் ரூ.46 ஆயிரத்து 686. அதேநேரம் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் பெற்றோருடைய ஆண்டுவருமானம் ரூ.4 லட்சத்து 69 ஆயிரம். இதுமட்டுமில்லாமல், அரசுப்பள்ளிக்கூட மாணவர்களின் தந்தையரில் 83 சதவீதம் பேரும், தாய்மார்களில் 63 சதவீதம் பேரும் தினக்கூலிகள் என்பதையும் பார்த்தால், சமத்துவத்தை நிர்ணயிக்கும்போது இதை தள்ளிவிடமுடியாது. எனவே இந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர்.

அந்த தீர்ப்பில் இன்னொரு முக்கியஅம்சமாக 5 ஆண்டுகளுக்குபிறகு, இந்த இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதற்குள் அரசுப்பள்ளிக்கூடங்களில் கல்வித்தரத்தை உயர்த்தவேண்டும் என்ற எல்லோரும் வரவேற்கத்தக்க தீர்ப்பையும் வழங்கியுள்ளனர். நீதிபதி கலையரசன் ஆணையம் இதை பரிந்துரைத்து இருக்கிறது. இந்த 5 ஆண்டுகளில் அரசுப்பள்ளிக்கூடங்களின் கல்வித்தரத்தை உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த இடஒதுக்கீடு நீட்டிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பின் வெற்றியில் எடப்பாடி பழனிசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவருக்குமே பங்கு இருக்கிறது என்றாலும், சமூகநீதி பயணத்தில் இந்த 10 மாதங்களில் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த ‘ஹாட்ரிக்’ வெற்றி என்பதை சமுதாயம் பெருமையோடு பாராட்டுகிறது. மருத்துவப்படிப்புகளுக்கான அகிலஇந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு முதல்வெற்றி, மருத்துவ மேற்படிப்புகளில் ஊரகப்பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டில் பெற்றது 2-வது வெற்றி, இப்போது ஐகோர்ட்டில் 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை பெற்றது 3-வது வெற்றியாகும்.

Next Story