இந்தி பேசாத மாநிலங்கள் இதை ஏற்கவே ஏற்காது!


இந்தி பேசாத மாநிலங்கள் இதை ஏற்கவே ஏற்காது!
x
தினத்தந்தி 11 April 2022 7:57 PM GMT (Updated: 11 April 2022 7:57 PM GMT)

மொழி உணர்வு என்பது எல்லோருக்கும் உயிர் உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு தாய்க்கு நிகரானது.

மொழி உணர்வு என்பது எல்லோருக்கும் உயிர் உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் அந்த உணர்வு தாய்க்கு நிகரானது. அதனால்தான் பாரதிதாசன், ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடினார். மொழி உணர்வு தேன் கூடுபோன்றது. அதை தொடாமல் இருந்தால் சுவைமிகு தேனை பெறலாம். தொட்டால் ஆயிரம் தேனீக்கள் ஒன்றுபோல வந்து கொட்டிவிடும். எதை தமிழர்கள் விட்டுக்கொடுத்தாலும், விட்டுக்கொடுப்பார்களே தவிர, தமிழ் மொழிக்கு தீங்கு வந்தால் அதை தாங்கிக்கொள்ளவேமாட்டார்கள். சுதந்திரம் பெற்றதற்கு முன்பே இந்தியாவில் இந்தி திணிப்பு முயற்சிகள் நடந்தன.

தந்தை பெரியார் 1938-ம் ஆண்டிலேயே மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தி சிறை தண்டனை பெற்று, பெல்லாரி, கோயம்புத்தூர் சிறைச்சாலைகளில் பெரும் துன்பங்களை அனுபவித்தார். அதே காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் ஏராளமானவர்கள் சிறை சென்றனர். 1938-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி தனது பிறந்தநாளன்று, 14 வயதிலேயே கருணாநிதி தமிழ்க்கொடி ஏந்தி மாணவர் படையுடன் திருவாரூர் வீதிகளில் “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே! வாருங்கள் எல்லோரும் நாட்டினரே! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்!” என்று முழக்கமிட்டார். 1965-ம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்றிவிடும் முயற்சி நடந்தபோது, எழுந்த போராட்டத்தால் அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இந்தியாவில் அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதியளித்தார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவுதான் தமிழ்நாட்டில் 1967-ல் தி.மு.க. ஆட்சி அமைக்க வழிவகுத்தது. இத்தகைய சூழ்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இப்போது திடீரென பல்வேறு மொழிகளை பேசும் மாநிலங்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியிருப்பது பெரிய எதிர்ப்பை நாடு முழுவதும் கிளப்பியிருக்கிறது. மேலும் அவர், ‘இந்தியை அலுவல் மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று கூறியிருக்கிறார். ‘பல்வேறு மாநில மக்கள் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் தொடர்புகொள்ளவேண்டும். மத்திய மந்திரி சபையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்துக்கு மாற்றாகத்தான் இந்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இந்தியை மக்கள் கருதக்கூடாது’ என்று கூறியது பெரிய எதிர்ப்பை கிளப்பியுள்ளது. உடனடியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள் என்று அமித்ஷா சொல்லுவது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை பழுதாக்கும் வேலை. ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது’ என்று அடுத்த சில நிமிடங்களில் உறுதிப்பட தெரிவித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, ‘இந்தியை தேசிய மொழி ஆக்குவதற்கு ஒருபோதும் விடமாட்டோம். பன்முகத்தன்மையே நம்முடைய தேசத்தை ஒருங்கிணைத்துள்ளது’ என்று கூறியிருக்கிறார். இதே உணர்வில் இருக்கும் இந்தி பேசாத மாநிலங்கள் இந்தி தொடர்பு மொழி என்பதை ஏற்கவே ஏற்காது. இந்தி என்பது தாய்மொழியாம் அன்னை தமிழ் மொழி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி போன்ற மாநில மொழிகள் போல ஒரு சில மாநிலங்களில் பேசும் மொழிதான். இதை அனைத்து மாநிலங்களும் தொடர்பு மொழியாக கொள்ளவேண்டும் என்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அப்படி மொழியின் சிறப்பு வைத்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்றால், உலகிலேயே மூத்த மொழியாம் தமிழ் மொழியை எல்லோரும் கற்று அதையே அலுவல் மொழியாக, தொடர்பு மொழியாக வைத்துக்கொள்வதில் என்ன தவறு ஏற்பட்டுவிடும்? என்பது தமிழறிஞர்களின் கேள்வியாகும்.

Next Story