தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற வேண்டும்!


தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற வேண்டும்!
x
தினத்தந்தி 15 April 2022 8:12 PM GMT (Updated: 2022-04-16T01:42:20+05:30)

இல்லத்தரசிகளின் இன்றியமையாத தேவை தீப்பெட்டி ஆகும். சமையல் செய்வதற்கு, அது கியாஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு என்றாலும் சரி, தீப்பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி இல்லாமல் முடியாது.

இல்லத்தரசிகளின் இன்றியமையாத தேவை தீப்பெட்டி ஆகும். சமையல் செய்வதற்கு, அது கியாஸ் அடுப்பாக இருந்தாலும் சரி, விறகு அடுப்பு என்றாலும் சரி, தீப்பற்ற வைப்பதற்கு தீப்பெட்டி இல்லாமல் முடியாது. இதுமட்டுமல்லாமல், குத்துவிளக்கு ஏற்ற, மெழுகுவர்த்தி ஏற்ற, ஊதுபத்தி கொளுத்த, ஏன் கொசுவத்தி சுருளை கொளுத்துவதற்குக்கூட தீப்பெட்டி மிக அவசியமானது ஆகும். அத்தகைய தீப்பெட்டி தயாரிக்கும் ஏராளமான தொழிற்சாலைகள் கடந்த 6-ந்தேதி முதல் நாளை (17-ந்தேதி) வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த 12 நாட்களில் மட்டும் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி அளவிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் மூலப்பொருட்களின் விலை உயர்வுதான். ஒரு தீப்பெட்டி தயாரிக்க 18 மூலப்பொருட்கள் அவசியம். பொட்டாசியம் குளோரைடு, போர்டு, மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், காகிதம், குச்சி என்று பல பொருட்கள் கூட்டணியில்தான் தீப்பெட்டி முழு வடிவம் பெறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.1 ஆக இருந்த ஒரு தீப்பெட்டியின் விலை, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் ரூ.2 ஆக உயர்த்தப்பட்டது. இப்போது கூடுதலாக டீசல் விலை உயர்வும் சேர்ந்துகொண்டு, உற்பத்தி செலவை மேலும் அதிகரித்துவிட்டது. பொட்டாசியம் குளோரைடு ஒரு கிலோ ரூ.75-ல் இருந்து ரூ.110 ஆக உயர்ந்துவிட்டது. மெழுகு விலை ரூ.80-ல் இருந்து ரூ.120 ஆகவும், சிவப்பு பாஸ்பரஸ் விலை கிலோவுக்கு ரூ.750-ல் இருந்து ரூ.900 ஆகவும், போர்டு விலை கிலோவுக்கு ரூ.48-ல் இருந்து ரூ.68 ஆகவும் கூடிவிட்டது.

இந்த விலை ஏற்றத்தை தாங்க முடியாமல், 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டல் விலை, அந்தந்த கம்பெனி தயாரிப்புகளின் தரத்துக்கு ஏற்ப ரூ.280-ல் இருந்து ரூ.400 ஆக இருந்தது. இதில் ரூ.50 விலை ஏற்றி விற்பதாக உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், சில்லரை விற்பனையாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும்பாலான மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இப்போது ஓரளவுக்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் எந்திரமயமாகிவிட்டாலும், சில தொழிற்சாலைகளில் தீப்பெட்டி ஒட்டுதல், சட்டத்தில் தீக்குச்சி அடுக்குதல் போன்ற பணிகள் குடிசைத்தொழில் போல, வீடுகளிலுள்ள பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

இது ஒருபக்கம் இருந்தாலும், சீனாவிலிருந்து முறைகேடாக கொண்டுவரப்படும் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் லைட்டர்களாலும் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, சட்டசபையில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ (அ.தி.மு.க.), ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (தி.மு.க.), அசோகன் (காங்கிரஸ்), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ஜி.கே.மணி (பா.ம.க.), எஸ்.எஸ்.பாலாஜி (விடுதலை சிறுத்தைகள்) ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், தீப்பெட்டி தயாரிப்பு மூலப்பொருள் விலையை குறைக்க வலியுறுத்தி பேசினர்.

கடம்பூர் ராஜூ பேசும்போது, “மெழுகு, பொட்டாசியம் குளோரைடு போன்ற பொருட்களை சிட்கோ மூலம் மொத்தமாக கொள்முதல் செய்து, தீப்பெட்டி தயாரிக்க வினியோகிக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதை அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. தீப்பெட்டி தயாரிப்புக்கு தேவையான மெழுகை சென்னை பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்திடமிருந்து சிட்கோ வழியாக மொத்த கொள்முதல் செய்யப்படும். அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்” என்று உறுதியளித்தார்.

தமிழக அரசும் வரம்புக்குள் உள்ள நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. இனி மத்திய அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மூலப்பொருட்களுக்கு, அதன்விலை குறையும் வரை வரியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதை பரிசீலிக்க வேண்டும். மொத்தத்தில் ரூ.2-க்கு விற்கப்படும் தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களின் விலை குறைவதற்கான நடவடிக்கை மத்திய அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.

Next Story