தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்!


தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம்!
x
தினத்தந்தி 17 April 2022 7:43 PM GMT (Updated: 2022-04-18T01:13:56+05:30)

எந்தவொரு திட்டமும் முறையான செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் சட்டசபையில் அதற்குரிய சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.

எந்தவொரு திட்டமும் முறையான செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்றால் சட்டசபையில் அதற்குரிய சட்டத்தை நிறைவேற்றவேண்டும். பொதுவாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலை பெற்றப்பிறகுதான் சட்டமாகி அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால் அந்த மசோதா தொடர்பான திட்டங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு தேவைப்படும்பட்சத்தில் நிதி மசோதாவாக கருதப்படும், அந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே கவர்னரின் ஒப்புதலை பெற்றுவரவேண்டும்.

அந்தவகையில், தமிழக அரசு சித்த மருத்துவத்துக்கு என தனியாக பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும் என்ற ஒரு நல்ல முடிவை எடுத்திருந்தது. ‘மருத்துவமும், கல்வியும் எனது இரு கண்கள்’ என்று கூறி பல்வேறு முன்னேற்ற பாதைகளை வகுத்துச்செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அவரது நோக்கங்களை நிறைவேற்றும் அரும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்து வருகிறார். மருத்துவ துறையில் பல ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டு, செயல்படுத்தி வரும் நிலையில் சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டு தனியாக பல்கலைக்கழகம் தொடங்கப்படவேண்டும் என்றால் அரசின் நிதி ஒதுக்கீடு தேவை என்ற நிலையில், அதற்கான வரைவு மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. கொஞ்ச நாட்கள் இந்த மசோதா நிலுவையில் இருந்தது. இப்போது கவர்னர் அந்த மசோதாவில் குறிப்புரை எழுதி அரசுக்கு திரும்ப அனுப்பி வைத்துள்ளார். இந்த மசோதா பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு ஏற்றவகையில் இல்லை. அந்தவகையில் உருவாக்கி மசோதாவை நிறைவேற்ற சொல்லியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு சித்த மருத்துவத்துக்கு என தனியாக பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற இருக்கிறது. தற்போது தமிழக அரசின் சார்பில் சென்னை அரும்பாக்கம் மற்றும் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மேலும் ஒரு சித்த மருத்துவக்கல்லூரி பழனி முருகன் கோவில் சார்பில் பழனியில் தொடங்கப்பட இருக்கிறது. சித்த மருத்துவம் என்பது உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் மக்களின் பாரம்பரிய வைத்திய முறை என்று உறுதிப்பட சொல்லுகிறார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் ஒய்.ஆர்.மானேக்‌ஷா.

சித்த மருத்துவம் தொடர்பான பல ஆய்வு கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ள அவர், ‘தமிழ் எப்போது தோன்றியதோ அப்போது தோன்றிய மருத்துவம் தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் குறித்து யூகி வைத்தியசிந்தாமணி நூலில் சிவன் சக்திக்கு சொல்ல, சக்தி நந்தி தேவருக்கு சொல்ல, நந்திதேவர் முதல் சித்தரான அகத்தியருக்கு சொல்ல, அகத்தியர் மூலமாக மற்ற சித்தர்களுக்கு உரைக்கப்பட்டு தொன்றுதொட்டு மக்களின் உடல் பிணி, உள்ள பிணி இவைகளை நீக்கி நோயற்ற பெருவாழ்வு வாழ வழிவகை செய்யும் மருத்துவ முறையாகும் இது’ என்கிறார். சித்த மருத்துவ முறை என்பது நோயாளிகளின் எண் வகை தேர்வுகளை (நாடி, பரிசம், நாவு, நிறம், மொழி, விழி, மலம், சிறுநீர்) பரிசோதித்து நோய் நிலை அறிந்து மூலிகை, தாது, சீவப்பொருட்களை கொண்டு செய்யப்படும் மருந்துகளால் நோய் நீக்கும் மருத்துவம் ஆகும்.

சித்த மருந்துகள், மருந்து மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருந்துவாழ் மலை, குற்றாலம், கொல்லிமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சில இடங்களில் சித்த மருத்துவத்துக்கான அபூர்வ மூலிகைகள் கிடைக்கின்றன. பழைய ஓலைச்சுவடிகளை இன்னும் ஆய்வு செய்து, மூலிகை செடிகளை மேலும் மலைப்பகுதிகளில் பயிரிடுவதற்கு தமிழக அரசின் மருத்துவத்துறை முனைப்புடன் செயல்படுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது சித்த வைத்தியர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவர்களை நியமித்து சித்த மருத்துவப்பிரிவை தொடங்கவேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாகும்.

Next Story