தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்!


தமிழ்நாட்டில் குவிகிறது அன்னிய நேரடி முதலீடுகள்!
x
தினத்தந்தி 18 April 2022 8:04 PM GMT (Updated: 18 April 2022 8:04 PM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றது. முதல்நாளில் இருந்தே அவர் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். மாநிலத்தில் தொழில் வளர்ந்தால்தான், குறிப்பாக முதலீடுகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டால்தான் அந்தந்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வரும். மாநிலத்தின் தொழில்வளர்ச்சி பெருகும். தொழில் வளர்ச்சி பெருகினால் உற்பத்தி பெருகும். மாநிலத்துக்கு வருமானம் கிடைக்கும் என்று பல வகைகளிலும் நன்மைகள் வந்து பெருகும். எல்லா இடங்களிலும் எல்லா வளர்ச்சிகளும் பெற வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் கதவை தட்டவேண்டிய அவசியம் இல்லாமல், எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் வகையில் தமிழக அரசின் தொழில் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.

தி.மு.க. அரசு அமைக்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசு முதலீடுகளை ஈர்ப்பதில் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. துடிப்புள்ள தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு, ‘எங்கள் அரசின் முன்னுரிமை இலக்கு என்பது, 2030-ல் 23 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து, 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதுதான்’ என்று சூளுரைத்துள்ளார். எல்லோருமே பொதுவான ஒரு குறிக்கோளாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்திரை பதித்தாற்போல் சொல்லிவரும், தமிழ்நாட்டில், 2030-ல் ரூ.75 லட்சம் கோடி பொருளாதாரத்தை உருவாக்குவதுதான் எனது இலக்கு என்பதை நோக்கியே செயல்பட்டு வருகிறார்கள். அதை நோக்கித்தான் அரசு வேகமாக பீடு நடைபோடுகிறது. இதுவரை தமிழக அரசு ரூ.69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 402 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எல்லாம் செயல்பாட்டுக்கு கொண்டுவர மிக வேகமாக பணிகள் நடந்து வருகின்றன. இதில் மிகவும் பெருமைப்படத்தக்க நிகழ்வு என்னவென்றால் முதல்-அமைச்சரின் துபாய் சுற்றுப்பயணத்தில் ரூ.6 ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் 14 ஆயிரத்து 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தான். தமிழ்நாட்டில் இப்போது அன்னிய நேரடி முதலீடுகளும் வந்து குவிகின்றன.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காக மிக எளிதாக முதல்-அமைச்சருடனேயே பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றிகரமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். மத்திய அரசாங்கத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரமே இதற்கு சான்று ஆகும். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நாட்டு முதலீடுகளில் தமிழ்நாட்டின் பங்கு 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. மராட்டியம், கர்நாடகா, குஜராத், டெல்லிக்கு பிறகு தமிழ்நாடுதான் இந்த வரிசையில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீடுகளில் தொழில் துறை செயலாளரான கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், சிறு தொழில் துறை செயலாளர் அருண்ராய் ஆகியோரின் அயராத முயற்சியால், தொடர்ந்து அன்னிய நேரடி முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டு இருக்கின்றன. தமிழக அரசு மிக சரியான பாதையில் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது என்று தொழில் அதிபர்கள், மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். அதே நேரம் இந்த தொழில் வளர்ச்சியை கண்டு மனம் பூரித்து தமிழக அரசை மனமுவந்து பாராட்டி கொண்டு இருக்கும் பொதுமக்கள், இது போதாது, 5-வது இடத்தில் இருக்கும் தமிழ்நாடு முதலிடத்துக்கு வர வேண்டும். முதல்-அமைச்சரின் கனவு அவர் குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே நிறைவேற வேண்டும். அந்த நாளும் தூரத்தில் இல்லை என்றே கருதுகிறார்கள்.

Next Story