பஞ்சு இறக்குமதிக்கு வரி இல்லை!


பஞ்சு இறக்குமதிக்கு வரி இல்லை!
x
தினத்தந்தி 19 April 2022 8:08 PM GMT (Updated: 2022-04-20T01:38:15+05:30)

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆடைகள், பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி போன்ற ஜவுளித்தொழில், நெசவுத்தொழில் பெரும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது.

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தாற்போல், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆடைகள், பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி போன்ற ஜவுளித்தொழில், நெசவுத்தொழில் பெரும் வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நெசவுத்தொழிலாளர்கள் பரவலாக இருந்தாலும், பின்னலாடை தொழில்கள் அதிகமாக இருப்பது “டாலர் சிட்டி” என்று அழைக்கப்படும் திருப்பூரில்தான். இது ஏன் டாலர் சிட்டி? என்று அழைக்கப்படுகிறது என்றால், வெளிநாடுகளுக்கு பருத்தி ஆடைகளை ஏற்றுமதி செய்து டாலர்களை ஈட்டித்தருவதன் காரணமாகத்தான்.

அங்கு மட்டும் 1,200 பனியன் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதில் 95 சதவீத தொழிற்சாலைகள் நடுத்தர மற்றும் சிறிய அளவிலானவைதான். இதன் மூலம் 6 லட்சம் பேர் நேரடியாக வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இதில், 60 சதவீதம் பேர் பெண்கள். அதுமட்டுமல்லாது, 3-ல் ஒரு பங்கு பேர் வடமாநிலங்களில் இருந்தும், வடகிழக்கு மாநிலங்களில் இருந்தும் வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

இந்தியாவில் இருந்து மொத்தம் ஏற்றுமதியாகும் பின்னலாடைகளில் 60 சதவீதம் திருப்பூரில்தான் உற்பத்தியாகின்றன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது. அதேபோல், உள்நாட்டிலும் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடைகள் விற்பனையாகின.

இந்த நிலையில், பின்னலாடை உற்பத்திக்கும் மற்ற நூற்பாலை, ஆடைகள் உற்பத்திக்கும், தமிழ்நாட்டிலும், உள்நாட்டிலும் விளையும் பருத்தி மூலம் கிடைக்கும் பஞ்சு போதாத நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பஞ்சுக்கு மொத்தம் 11 சதவீதம் சுங்க வரி, மேல் வரி, சர்சார்ஜ் ஆகியவை விதிக்கப்பட்டதால், பஞ்சின் விலை 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி, கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.44 ஆயிரம் என்று இருந்த நிலையில் ரூ.96 ஆயிரம் அளவுக்கு உயர்ந்தது. பின்னலாடை மட்டுமல்லாமல், நூற்பாலைகள், ஆடை உற்பத்தி ஆலைகள் பஞ்சு விலை உயர்வால் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இதன் காரணமாக எல்லா ஆடைகளின் விலையும் 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது, ஏற்கனவே ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட விலையில் சப்ளை செய்ய வேண்டிய நிலை இருந்ததால், இந்த விலையேற்றம் தொழிலதிபர்களை வெகுவாக பாதித்தது. தொழிலை தொடர்ந்து நடத்தவே மிகவும் தடுமாறினார்கள். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆடைகளின் விலையை விட, வியட்நாம், வங்காளதேசம், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் குறைந்த விலைக்கு ஆடைகளை சப்ளை செய்ய முடிவதால், நமது ஏற்றுமதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடுமோ?, இதன் காரணமாக தொழிற்சாலைகள் உற்பத்தி குறைப்போ அல்லது மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பாக, ஜவுளி மற்றும் ஆடை ஆலை அதிபர்கள் சங்கத்தினர் மத்திய மந்திரியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் பெருமுயற்சி எடுத்தார். இதையொட்டி, மத்திய அரசாங்கம் இப்போது இந்த பஞ்சுக்கான 11 சதவீத சுங்கவரியையும் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரியில்லாமல் பஞ்சை இறக்குமதி செய்யலாம், குறைந்த விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு, மற்ற நாடுகளைவிட குறைந்த விலையில் ஆடைகளை ஏற்றுமதி செய்யலாம் என்ற நிலையில், நமது ஏற்றுமதியும் பெருகும்.

மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நிச்சயமாக வரவேற்கத்தகுந்தது, பாராட்டுக்குரியது. ஆனால், வெளிநாட்டு பஞ்சின் விலை குறைவாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 1.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ள 3 லட்சம் விவசாயிகள் விளைவிக்கும் பஞ்சின் விலை சற்று கூடுதலாக இருக்கும் என்பதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அவர்களுக்கும் ஏதாவது சலுகை, மானியம் வழங்கப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

Next Story