பிரிந்தவர் கூடினால்...


பிரிந்தவர் கூடினால்...
x
தினத்தந்தி 22 April 2022 8:06 PM GMT (Updated: 22 April 2022 8:06 PM GMT)

‘சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று.

‘சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார் அன்று. அவர் கனவு இன்னும் நனவாகவில்லை என்றாலும், அங்கு சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் இடையே இப்போது உறவு பாலம் அமைக்கப்பட்டுவிட்டது. இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம், தாங்கமுடியாத விலைவாசி உயர்வு, மருந்து தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல், சமையல் கியாசுக்கு ஒருபக்கம் பற்றாக்குறை, மற்றொரு பக்கம் பணம் கொடுத்தாலும் கிடைக்காத நிலை என்று மிக மோசமான நிலை தலைவிரித்தாடுகிறது. அங்கு வாழ வழியில்லாமல் அடுத்தடுத்து குடும்பம் குடும்பமாக இலங்கை தமிழர்கள் தஞ்சம்தேடி தாய் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை அகதிகளாக கருதி எல்லா உதவிகளையும் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவ அரிசி, மருந்துகள், எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப மத்திய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இதற்கிடையில் தங்கள் துயரத்தை, இன்னலை தாங்கமுடியாத இலங்கை மக்கள் ஒட்டு மொத்தமாக தங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லாமல், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வீதிக்கு வந்து போராடி வருகிறார்கள். எந்த மகிந்தா ராஜபக்சேயை, கோத்தபய ராஜ்பக்சேயை தங்கள் ஒப்பற்ற தலைவர்கள் என்று மதித்தார்களோ, அவர்களை இப்போது வீட்டுக்கு போ, நாட்டைவிட்டு போ, ராஜினாமா செய் என்று ஆத்திரத்துடன் கோஷமிட்டு வருகிறார்கள். எங்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளிவிட்டீர்களே என்ற கோபத்தீ அவர்கள் போராட்டத்தில் வெளிப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போது இலங்கையில் பலமடங்கு உயர்ந்து விண்ணுக்கு எகிறிவிட்டது. இலங்கை அரசாங்கத்திடம் அன்னிய செலாவணி கையிருப்பு அடிபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியவில்லை. கஷ்டத்தை தாங்க முடியாத நிலை ஏற்பட்டதால் மக்கள் போராட்டம், கிளர்ச்சி நாடு முழுவதும் வலுத்துள்ளது.

இலங்கை அதிபர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள காலி முகத்திடலில் கடந்த பல நாட்களாக இரவு பகலாக மக்கள் அங்கேயே சாப்பிட்டு தூங்கி மழை வெயிலை பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நாளுக்குநாள் போராட்டம் வலுத்து வருகிறது. பெண்கள் ஒப்பாரி பாடி தங்கள் உணர்வுகளை காட்டி வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு நடைமுறை உண்டு. தீரா பகையுடன் இருப்பவர்களும் ஏதாவது துயரம், துக்கம் என்று வந்துவிட்டால் பகையெல்லாம் பறந்துபோகும், உறவு மிளிரும், பாசம் தழைத்தோங்கும். அந்தவகையில் 2 கோடியே 23 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த 1996-ம் ஆண்டுக்கு பிறகு சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே கடும்பகை இருந்தது. இப்போது சிங்களர்கள் நாம் ஒன்றாக சேர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலையை அடைவோம், தமிழ் இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோருகிறோம் என்ற போர்டுகளையும், பதாகைகளையும் வைத்து இருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள் நோன்பு திறக்க சிங்களர்களும், தமிழர்களும் உணவு சமைக்கிறார்கள். இளைஞர்களிடம் இப்போது சிங்களர், தமிழர், முஸ்லிம் என்ற பேதம் இல்லை. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற புதிய அன்பு ஏற்பட்டுள்ளது. ஒரு புதிய நல்லிணக்கம் இப்போது இலங்கையில் உருவாகியுள்ளது. இதுவரை பிரிந்து இருந்தவர்களை பொருளாதார நெருக்கடி ஒன்றாக இணைத்துவிட்டது. இது எந்த அளவுக்கு சென்று இருக்கிறது என்றால் இலங்கை தமிழர்களுக்கு உதவ மு.க.ஸ்டாலின் முன்வந்துள்ள நிலையில் எங்கள் சிங்கள சகோதரர்களுக்கும் சேர்த்து உதவுங்கள் என்று தமிழர்களும் கேட்கும் நிலை தோன்றியுள்ளது.

Next Story