சோக நினைவுகளை நெஞ்சில் சுமந்து வரும் இலங்கை தமிழர்கள்!


சோக நினைவுகளை நெஞ்சில் சுமந்து வரும் இலங்கை தமிழர்கள்!
x
தினத்தந்தி 24 April 2022 7:48 PM GMT (Updated: 24 April 2022 7:48 PM GMT)

தஞ்சம் என்று தேடி வருபவர்களை நெஞ்சில் அன்பு நிறைய வரவேற்கும் பரந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள், தமிழர்கள்.

தஞ்சம் என்று தேடி வருபவர்களை நெஞ்சில் அன்பு நிறைய வரவேற்கும் பரந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள், தமிழர்கள். அதனால்தான் எங்கு நெருக்கடி என்றாலும், இந்தியாவில் உள்ள பல மாநில மக்களின் மனதில் நிழலாடுவது தமிழ்நாடுதான். அந்தவகையில்தான் பல வட மாநிலங்களில் இருந்து, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களிலிருந்து ஏராளமானவர்கள் தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பும் அளித்து, தங்களில் ஒருவராக தமிழக மக்கள் அவர்களுடன் பாசத்துடன் பழகி வருகிறார்கள். அவர்களுடனேயே இப்படி என்றால், தங்கள் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழர்களுக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போய் விடுபவர்கள் தமிழர்கள். இலங்கை தமிழர்களுக்கு இன்னல் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம், அவர்கள் தங்களைக் காப்பாற்ற தாய் தமிழ்நாடு இருக்கிறது என்ற நம்பிக்கையில், படகில் ஏறி தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார்கள். தமிழ்நாடும் அவர்களை ‘வாருங்கள் சொந்தங்களே…’ என்று வரவேற்று, அகதிகள் முகாம்களில் தங்கவைத்து எல்லா உதவிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இவ்வளவு நாளும் வந்த காரணங்கள் வேறு, இப்போது சில நாட்களாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டை தேடிவரும் காரணங்கள் வேறு. இலங்கையில் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. மக்கள் வாழ வழியில்லாமல் எல்லா பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறிவிட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் வீடுகளில் இல்லை, வீதிக்கு வந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ‘இனியும் இந்த நாட்டில் வாழ வழியில்லை, தமிழ்நாட்டுக்கு செல்வோம், அங்கு நமக்கு தஞ்சம் கிடைக்கும்’, என்ற நம்பிக்கையில் பல குடும்பத்தினர் தங்களிடம் இருப்பதையெல்லாம் விற்று, இதுதான் சாக்கு என்று ரூ.4 லட்சம் கொடு, ரூ.5 லட்சம் கொடு என்று கேட்கும் படகு உரிமையாளர்களுக்கு பணம் கொடுத்து, தனுஷ்கோடி அருகில் வந்து இறங்கி விடுகிறார்கள். குடும்பம் குடும்பமாக வரத்தொடங்கி விட்டார்கள்.

இதுவரையில் பல குடும்பங்களை சேர்ந்த 60 பேர் வந்து விட்டார்கள். கடைசியாக 18 பேர் வந்து இறங்கியிருக்கிறார்கள். தலைமன்னார் கடற்கரையில் இருந்து நகுலேசுவரன் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் உயிலங்குளத்தை சேர்ந்த முன்னாள் இலங்கை போலீஸ்காரர் பிரதீப், அவர் மனைவி மற்றும் குழந்தைகள் என 4 பேரும், 2 பைபர் படகுகளில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இரவில் வந்து இறங்கினார்கள். மேலும் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியை சேர்ந்த 81 வயது கிட்டம்மாள், குடும்பத்தினர் 4 பேர், 72 வயதான சுப்பிரமணி ஆகியோரும் தனுஷ்கோடி அருகே வந்து இறங்கியிருக்கிறார்கள். இதில் நகுலேசுவரனின் மருமகள் கர்ப்பிணி. ‘‘இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை மட்டும் உயரவில்லை, மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு இருக்கிறது. என் மனைவியின் சுகபிரசவத்துக்காக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளோம்’’, என்று அந்த பெண்ணின் கணவர் கூறினார். வந்து இருக்கும் 60 பேரும் கூறும் சோக நிகழ்வுகள் கேட்பவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது.

வருபவர்களையெல்லாம் அன்புடன் வரவேற்று உடனடியாக அவர்களுக்கு உணவு, உடை, தங்க இடம் மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான 22 பொருட்கள் அடங்கிய பை, பால் பொருட்கள், குடம், வாளி என தொடங்கி குடும்பத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்க தமிழக அரசு அயலக தமிழர் நலத்துறை கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ் ஏற்பாடு செய்துள்ளார். ‘இன்னும் ஏராளமானவர்கள் வருவார்கள்’, என்று இப்போது வந்துள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். எவ்வளவு பேர் வந்தாலும் பரவாயில்லை, வாழ வழியில்லாமல் வருகிறார்கள், என்ற உணர்வில் அவர்களை வரவேற்று ‘கவலைப்படாதீர்கள் உறவுகளே… உங்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம்’, என்று உதவிக்கரம் நீட்டுவது தமிழகத்தின் கடமையாகும்.

Next Story