சமத்துவத்தை செயலில் காட்டினார், மு.க.ஸ்டாலின்!


சமத்துவத்தை செயலில் காட்டினார், மு.க.ஸ்டாலின்!
x
தினத்தந்தி 25 April 2022 11:38 PM GMT (Updated: 2022-04-26T05:08:17+05:30)

விளிம்புநிலை மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே நேரடியாக சென்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டில் உணவருந்திய மு.க.ஸ்டாலின் சமத்துவத்தை செயலில் காட்டிவிட்டார்.

“இருட்டறையில் இருக்குதடா உலகம்; சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே” என்று வேதனையோடு தன் உணர்வுகளை கொட்டினார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அன்று. அந்த இருட்டிலிருந்து தமிழ்நாட்டை வெளிச்சத்துக்கு கொண்டுவரவும், சாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பணியாற்றிவரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த அடுத்தநாளே, அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவநாள் என்று கொண்டாடப்படும் என அறிவித்தார்.

தான் சொன்னதை ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே செய்து காட்டினார், முதல்-அமைச்சர். ‘வாட்ஸ்-அப்’பில் மாமல்லபுரம் அருகிலுள்ள பெருமாள்கோவில் அன்னதான நிகழ்ச்சியில், எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட நரிக்குறவ பெண் அஸ்வினி அனுமதிக்கப்படாததை பார்த்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அழைத்து, ‘அந்த பெண்ணை சாப்பிட வைக்கவேண்டும்’ என்று கூறியவுடன், அமைச்சர் அந்த பெண்ணை அழைத்து, அருகில் உட்காரவைத்து சாப்பிடவைத்தார்.

அதோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விட்டுவிடவில்லை. அந்தப்பெண், உறவினர்கள் வாழும் பூஞ்சேரி கிராமத்துக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களிடம் என்ன குறையிருக்கிறது? என்று கேட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டாக்கள், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு விட்டுவிடவில்லை. உடனடியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், “நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, உடனடியாக பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு உதவிகள், வீடுகள், கழிப்பறைகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், வீட்டுமனை பட்டாக்கள், வாக்காளர் அடையாளஅட்டை உள்பட இன்னும் ஏராளமான உதவிகளை அரசு சார்பில் வழங்கிடச் செய்தார். இப்போது, சமீபத்தில் ஒருநாள், சென்னை ஆவடி பருத்திப்பட்டிலுள்ள நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோர், தாங்கள் நரிக்குறவ இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அரசு பள்ளி உள்பட பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதாக பேசி வெளியிட்ட வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை நேரடியாக அங்கு அனுப்பி, அந்த மாணவிகளோடு வீடியோ காலில் பேசினார். அவர்களிடம் குறைகளை கேட்டார். “ஒரு வாரத்தில் உங்கள் குடியிருப்புக்கு வருகிறேன். அப்போது உங்கள் குறைகளையெல்லாம் கேட்டு நிவர்த்தி செய்கிறேன்” என்று கூறியதுடன், “உங்கள் வீட்டுக்கு வந்தால் எனக்கு சோறு போடுவீர்களா?” என்று உரிமையுடன் கேட்டார். உடனே அந்த மாணவிகள், “எங்கள் வீட்டுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம். கண்டிப்பாக கறி சோறு போடுகிறோம்” என்று கூறினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்போதும், “சொன்னதை செய்வேன். செய்வதை சொல்வேன்” என்று கூறுவதைப்போல, நரிக்குறவ இன மாணவி தர்ஷினி வீட்டுக்கு திடீரென சென்றார். அங்கு அவர் காபி குடித்தார். அப்போது ஒரு நரிக்குறவ பெண், “அய்யா.. உங்களுக்காக இட்லி, வடை, சாம்பார், சட்னி, நாட்டுக்கோழி சமைத்து வைத்திருக்கிறேன், சாப்பிடுங்கள்” என்று கூறினார். மு.க.ஸ்டாலினும் மிக மகிழ்ச்சியோடு “சாப்பிடுகிறேன்” என்று கூறி, அவர்கள் வழங்கிய உணவை தானும் சாப்பிட்டு, பக்கத்திலுள்ள குழந்தைக்கும் ஊட்டினார். இந்த காட்சியை பார்த்து அங்குள்ள நரிக்குறவ இனமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

விளிம்புநிலை மக்களின் குறைகளை தீர்க்க, அவர்கள் வசிக்கும் இடத்துக்கே நேரடியாக சென்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டில் உணவருந்திய மு.க.ஸ்டாலின் சமத்துவத்தை செயலில் காட்டிவிட்டார். அவர் காட்டிய வழியை அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டுமல்லாமல், மக்களும் பின்பற்றி, “எல்லோரும் சமமே” என்ற சமத்துவத்தை தமிழ்நாட்டில் உருவாக்கவேண்டும் என்பதுதான் சமத்துவ திருநாளை கொண்டாடிய எல்லோருடைய தணியாத ஆசையாக இருக்கிறது.

Next Story