‘கை’ தூக்கிவிடுவாரா, பிரசாந்த் கிஷோர்?


‘கை’ தூக்கிவிடுவாரா, பிரசாந்த் கிஷோர்?
x

கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் கடும் தோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் கடும் தோல்வியை சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தைக்கூட பெற முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் பல சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எதற்காக இவ்வளவு பெரிய தோல்விகளை அடுக்கடுக்காக சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது? என்பதை ஆராய, அடுத்த மாதம் ராஜஸ்தானில் சுய பரிசோதனை முகாம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கு முன்பாக வரப்போகிற தேர்தல்களில் போட்டியிட தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதல்களை பெறும் வகையில் அவரோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவும் முதல் கட்ட ஆலோசனை கூட்டங்கள் தொடங்கி விட்டன.

முதல் கூட்டம் கடந்த 16-ந்தேதி சோனியா காந்தி இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் சோனியா காந்தியுடன் பல மூத்த தலைவர்களும் பங்குபெற்றனர். அதன்பிறகு சோனியா காந்தி இல்லத்தில் 4 கூட்டங்கள் நடந்தன. இதில் பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், ஏ.கே.அந்தோணி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்பட பல தலைவர்கள் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பிரசாந்த் கிஷோர் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார் என்று முதலில் ஒரு செய்தியும், இப்போது மறுத்துவிட்டார் என்ற செய்தியும் வந்துள்ளது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும்?, குஜராத், இமாசல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் போன்ற மாநிலங்களில் எந்தெந்த வகைகளில் தேர்தல் அணுகுமுறை இருக்கவேண்டும்?, தமிழ்நாடு போன்ற கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், எவ்வாறு கூட்டணியை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவேண்டும்?, எந்தெந்த வகைகளில் மக்களிடம் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும்?, என்னென்ன வகையில் வாக்குறுதிகளை அளிக்கலாம்? என்பது உள்பட பல வழிகாட்டுதல்களை மிக விளக்கமாக எடுத்துரைத்தார். 350 முதல் 370 தொகுதிகளை அடையாளம் கண்டு, ‘இப்போதே வேலைகளை தொடங்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோரின் யுக்திகளால் காங்கிரஸ் கட்சியின் ‘கை’ சின்னம் உயருமா? என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்தால் வெற்றி என்ற நிலையை, 2012-ம் ஆண்டு குஜராத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பணியாற்றி 3-வது முறையாக நரேந்திர மோடி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றதில், பிரசாந்த் கிஷோரின் பணி முக்கிய இடத்தில் இருந்தது. தொடர்ந்து 2014-ல் மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்காகவும், 2015-ல் பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும், 2017-ல் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும், 2019-ல் ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கும், 2019-ல் மராட்டிய சட்டசபை தேர்தலில் சிவசேனாவுக்கும், 2020-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கும், 2021-ல் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பணியாற்றி வெற்றி முத்திரைகளை பதித்தார். ‘யானைக்கும் அடிசறுக்கும்’, என்பது போல பிரசாந்த் கிஷோரின் பணிகளில் அவருக்கு கிடைத்த முதல் தோல்வி காங்கிரஸ் கட்சிக்காக, அவர் 2017-ல் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பணியாற்றியதில்தான். அந்த தேர்தலிலும், திரிணாமுல் காங்கிரசை கோவாவில் காலெடுத்து வைக்க மேற்கொண்ட முயற்சியிலும் அவர் வெற்றி பெறவில்லை. எனவே பஞ்சாபில் காங்கிரசை வெற்றி பெற செய்தது போல அவரது முயற்சிகள் கொடிகட்டி பறக்குமா? அல்லது உத்தர பிரதேசத்தை போல உதறி விட்டுவிடுமா? என்பது தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தான் தெரியும்.

Next Story