துணைவேந்தர்கள் நியமனம்!


துணைவேந்தர்கள் நியமனம்!
x
தினத்தந்தி 27 April 2022 7:39 PM GMT (Updated: 2022-04-28T01:09:30+05:30)

தமிழ்நாட்டில் தற்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. துணை வேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

தமிழ்நாட்டில் தற்போது 13 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. துணை வேந்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். இப்போது உள்ள நடைமுறையில் புதிதாக துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரம் வேந்தரான கவர்னருக்குத்தான் இருக்கிறது. புதிய துணை வேந்தரை நியமிக்கும் முதல் நடைமுறையாக, முதலில் 3 பேர் அடங்கிய தேர்வு குழு அமைக்கப்படும். இதில் ஒரு உறுப்பினர் கவர்னராலும், ஒரு உறுப்பினர் அரசாலும், ஒரு உறுப்பினர் அந்த பல்கலைக்கழக சிண்டிகேட்டாலும் நியமிக்கப்படுவார்கள். இந்த தேர்வுக்குழு 3 உறுப்பினர்கள் கொண்ட பட்டியலை கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும். இதில் இருந்து ஒருவரை கவர்னர் நியமிப்பார். புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கலந்தாலோசிப்பது மரபாக இருந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில், கவர்னர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்தாக இருக்கிறது.

இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் 2 நாட்கள் துணை வேந்தர்கள் கருத்தரங்கை கூட்டினார். இந்த கருத்தரங்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள். இந்த கருத்தரங்குக்கு தமிழக கல்வித்துறை அதிகாரிகளோ, உயர் அதிகாரிகளோ, இணை வேந்தர் பொறுப்பில் உள்ள அமைச்சர்களோ அழைக்கப்படவில்லை.

அதே நாளில் தமிழக சட்டசபையில் 13 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கும் வகையில் 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அந்த மசோதாக்களில் 1949-ம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழக சட்டம், 1991-ம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டம் ஆகியவை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசு அதிகாரத்தை கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் 2000-ம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழக சட்டத்தின்படி துணை வேந்தரானவர், மாநில அரசின் இசைவுடன் வேந்தரான கவர்னரால் நியமிக்கப்பட வேண்டும் என்று நோக்க காரண விளக்கவுரையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தமிழக சட்டசபையில் இப்போது மட்டும் எடுக்கப்படவில்லை. 1994-ம் ஆண்டிலேயே ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது பல்கலைக்கழக வேந்தராக கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சரை நியமிக்கும் வகையிலான மசோதாவும், துணை வேந்தர்களை ‘டிஸ்மிஸ்’ செய்யும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அப்போது கவர்னராக இருந்த சென்னா ரெட்டி இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இது மட்டுமல்லாமல் 2007-ம் ஆண்டில் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்த பரிந்துரையிலும், அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தர் நியமன அதிகாரத்தை கவர்னருக்கு அளிக்கக்கூடாது என்று தெள்ளத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆணைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்து இருந்தன.

தமிழக சட்டசபையில் இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள், அடுத்த நாளே கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. கவர்னர் இதற்கு ஒப்புதல் கொடுத்து உடனடியாக அனுப்பி விடுவாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இந்த அரசியல் சர்ச்சைகளால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அது பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பயன் அளிக்க கூடியதாகவும், கல்வி வளர்ச்சி தழைத்தோங்குவதாகவும், திறமையுள்ள, கல்வியாளர்களாக இருக்கக் கூடிய துணை வேந்தர்கள் நியமனங்களுக்கு வழிகோலுவதாகவும் அமைய வேண்டும் என்பதே மக்களின் உணர்வாக இருக்கிறது.

Next Story