தொடர்ந்து எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்


தொடர்ந்து எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்
x
தினத்தந்தி 28 April 2022 7:48 PM GMT (Updated: 28 April 2022 7:48 PM GMT)

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல இடங்களில் தினந்தோறும் மின்சார ஸ்கூட்டர்கள் எரியும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கத்தக்கதாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல இடங்களில் தினந்தோறும் மின்சார ஸ்கூட்டர்கள் எரியும் சம்பவம் அதிர்ச்சி அளிக்கத்தக்கதாக இருக்கிறது. பெட்ரோல்- டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெயை பொறுத்தமட்டில், நாட்டின் தேவையில் 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நமது அன்னிய செலாவணியின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் இறக்குமதிக்கே சென்று விடுகிறது. இதற்கு மாற்றாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு வரிச்சலுகைகள் உள்பட பல சலுகைகள், மானியங்களை வழங்கி வருகிறது. மின்சார வாகனங்களை பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு நிறைய மிச்சமாக இருக்கிறது. பராமரிப்பு செலவும் மிக மிக குறைவாக இருக்கிறது. இந்த வாகனங்கள் ஓடும்போது சத்தம் கேட்பதில்லை. புகை வருவதில்லை. இதனால், மாசு ஏற்படுத்துவதில்லை என்பதால் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. பயணமும் மிக சுகமாக இருக்கிறது.

இந்த மின்சார வாகனங்கள் லித்தியம் பேட்டரியால் இயங்குகிறது. இந்த பேட்டரியின் விலைதான் வாகனத்தின் விலையில் பெரும்பகுதியாக இருக்கிறது. லித்தியம், இந்தியாவில் கிடைப்பது இல்லை என்பதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மின்சார வாகனங்களை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும். இதற்காக பொது சார்ஜிங் நிலையங்களும் இருக்கின்றன. ஸ்கூட்டர்களுக்கு வீடுகளிலேயே சார்ஜ் செய்து விடுகிறார்கள். இப்போது மின்சார வாகனங்களின் விற்பனை உயர்ந்து கொண்டு இருக்கிறது. மோட்டார் வாகனங்களின் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல்படி, கடந்த 2021-2022-ல் மட்டும் நாட்டில் 4 லட்சத்து 29 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதற்கு முந்தைய ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள்தான் விற்பனை ஆகியிருந்தன. இந்த ஆண்டு விற்பனையான மொத்த மின்சார வாகனங்களில் 2 லட்சத்து 31 ஆயிரம் இருசக்கர வாகனங்கள், அதாவது மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. மின்சார கார்களை விட மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனைதான் மிக அதிகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டைவிட 5 மடங்கு அதிகமாக விற்பனையாகியிருக்கிறது. இந்த விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் நிலையில், இப்போது தினமும் ஓரிரு மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. சார்ஜிங் செய்யும்போதும், வண்டி ஓடும்போதும் தீப்பிடித்து மளமளவென்று எரியும் விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துகள் குறித்து ஆராயவும், இதற்குரிய தீர்வுகளை காணவும் நிபுணர்குழு அமைக்கப்படும் என்றும், மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள் இத்தகைய விபத்துகளை ஏற்படுத்தும் மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப வாங்கி, அதை சோதனை செய்து சரிப்படுத்தவும் பிறப்பித்த உத்தரவின் பேரில் இப்போது ஓலா உள்பட சில நிறுவனங்கள் தாங்கள் விற்பனை செய்த மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப்பெற்று வருகின்றன. மின்சார கார்களில் விபத்து ஏற்படுவதில்லை. ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரிகள்தான் வெப்பத்தை குறிப்பாக கோடைகால வெப்பத்தை தாங்க முடியாமல் தீப்பிடித்துவிடுகிறது என்று கூறப்படுகிறது. பெரும்பாலான பேட்டரிகள் என்.எம்.சி. என்று கூறப்படும் நிக்கல்- மாங்கனீசு- கோபால்ட் என்று கூறப்படும் பேட்டரிகள்தான். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பேட்டரியில் பாதுகாப்பு சாதனங்களை பொருத்த வலியுறுத்தலாம் என்றும், இனி இவ்வாறு தீ பிடிக்காமல் இருக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது குறித்தும் மத்திய அரசாங்கம் ஆராய்ச்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்கு இத்தகைய தீ விபத்துகள் தடை கற்களாக இருக்கக்கூடாது.

Next Story