யார் செய்தாலும் சரி; எங்களுக்கு விலை குறைய வேண்டும் !


யார் செய்தாலும் சரி; எங்களுக்கு விலை குறைய வேண்டும் !
x
தினத்தந்தி 29 April 2022 7:49 PM GMT (Updated: 2022-04-30T01:19:40+05:30)

சமுதாயத்தில் பெட்ரோல்-டீசல் விலை என்பது மக்களின் வருமானத்தில் கணிசமான அளவை பறித்துவிடுகிறது.

சமுதாயத்தில் பெட்ரோல்-டீசல் விலை என்பது மக்களின் வருமானத்தில் கணிசமான அளவை பறித்துவிடுகிறது. இது ஒரு அத்தியாவசிய பொருள் என்ற வகையில், இதற்காக செலவழிக்காமலும் இருக்க முடியாது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏற்படுகிற நேரத்திலெல்லாம் விலையை குறையுங்கள், விலையை குறையுங்கள் என்று மக்களிடம் இருந்து பலமாக குரல் எழும்புகிறது. தற்போது பெட்ரோல்-டீசல் விலை அதிகமாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசலுக்கு ரூ.100.94 ஆகவும் இருந்தது.

பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டருக்கு ரூ.56.70 தான். இதில் மத்திய அரசாங்கத்தின் மேல் வரி, கூடுதல் வரி உள்பட கலால் வரி ரூ.27.90 ஆகவும், மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி ரூ.22.54 ஆகவும், போக்குவரத்து செலவு 15 காசுகளாகவும், விற்பனையாளர் கமிஷன் ரூ.3.56 ஆகவும் இருக்கிறது. இதே போல, டீசலின் அடிப்படை விலை ஒரு லிட்டருக்கு ரூ.58.29 ஆகவும், மத்திய அரசாங்க வரி ரூ.21.80 ஆகவும், மாநில அரசு விதிக்கும் மதிப்பு கூட்டு வரி ரூ.18.45 ஆகவும், போக்குவரத்து செலவு 15 காசுகளாகவும், விற்பனையாளர் கமிஷன் ரூ.2.25 ஆகவும் சேர்ந்து விடுகிறது. இந்த நிலையில், மக்களின் கோரிக்கை வரியை குறையுங்கள், விலை தானாக குறைந்து விடும் என்பதுதான். கடந்த 27-ந்தேதி அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடனும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா நிலவரம் குறித்து காணொலி மூலமாக உரையாடிய போது, பெட்ரோல்-டீசல் மீது மத்திய அரசாங்கம் கலால் வரியை குறைத்தது. வரியை குறைக்குமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டது. கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் வரியை குறைத்தன. மராட்டியம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்தது. இது மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களையும் பாதிப்பதாகும். மத்திய அரசாங்கத்தின் வருவாயில் 42 சதவீதம் மாநில அரசுகளுக்கு செல்கிறது என்றார்.

இதற்கு தமிழக அரசு உள்பட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை சட்டசபையிலேயே முழுமையாக மறுத்தார். முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல இந்த கருத்தை சொல்லியிருக்கிறார் என்று கூறினார். கச்சா எண்ணெய் விலை குறைந்த நேரத்தில் கூட அதற்கேற்றாற்போல மத்திய அரசாங்கம் விலையை குறைக்கவில்லை என்றார். மத்திய அரசாங்கம் தான் விதிக்கும் வரியில் அதிகமான அளவு மேல் வரியாகவும், கூடுதல் வரியாகவும் விதித்து விடுகிறது. இதில் மாநில அரசுகளுக்கு பங்கு கிடையாது. எனவே இதை ரத்து செய்து 2014-ல் இருந்த வரி அளவு விதிக்க வேண்டும். 2014-ல் பிரதமர் மோடி பதவியேற்றதில் இருந்து இன்று வரை பெட்ரோல்-டீசல் மீது விதிக்கப்படும் மத்திய அரசாங்க வரி 200 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். மத்திய அரசாங்கம் மாநில அரசை வரியை குறைக்க சொல்கிறது. தமிழக அரசு மத்திய அரசாங்கத்தை குறைக்க சொல்கிறது. மக்களை பொறுத்தமட்டில், யார் குறைத்தாலும் சரி அல்லது இருவரும் சேர்ந்து குறைத்தாலும் சரி, எங்களுக்கு பெட்ரோல்-டீசல் விலை குறைய வேண்டும். அர்த்த சாஸ்திரத்தில் கவுடில்யர் மலர் நோகாமல் தேனி மலரிலிருந்து தேன் எடுப்பது போல வரி விதிக்க வேண்டும் என்று சொன்னது போல மக்களுக்கு வலிக்காமல் மத்திய - மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீது வரி விதிக்க வேண்டும் என்பதாகும்.

Next Story