இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி!


இலங்கை மக்களுக்கு தமிழக அரசு உதவி!
x
தினத்தந்தி 1 May 2022 8:26 PM GMT (Updated: 2022-05-02T01:56:22+05:30)

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகிய எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கும், பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் ஆகிய எரிபொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடும், பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. மின்சார தட்டுப்பாட்டால் மக்கள் வாடி வதங்கிவிடுகிறார்கள். பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் துடி துடிக்கும் நிலை நிலவுகிறது. இந்த துயர சூழ்நிலை இலங்கையில் எதிரும் புதிருமாக இருந்த சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்களை அன்பினால் ஒன்றாக இணைத்துள்ளது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற வகையில் இலங்கையில் உள்ள தமிழ் சகோதரர்கள் படும் துயரை போக்க தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. மார்ச் மாதம் 31-ந் தேதி டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்த நேரத்தில், பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர் நடவடிக்கையாக கடந்த மாதம் 7-ந் தேதி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரோடு தொலைபேசியில் பேசி இலங்கை தமிழர்களின் நலன் கருதி தமிழக அரசு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தூத்துக்குடி துறைமுகம் வழியாக அனுப்ப தயாராக இருக்கிறது. இதை இந்திய தூதரகம் மூலமாக விநியோகிக்க உரிய அனுமதியும், ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல், ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் கடந்த மாதம் 15-ந் தேதி எழுதினார். இதற்கிடையே தமிழர்களுக்கு உள்ள கருணை உள்ளத்தை பிரதிபலிக்கும் வகையில் அங்குள்ள தமிழர்கள் தனியாக தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம். இலங்கை மக்களுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள். அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம் என முதல்- அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை மக்களுக்கு உதவ மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அவர் பேசும்போது, தமிழக அரசின் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 வகையான மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை வழங்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.

இந்த தீர்மானத்தின் மீது பேசும்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் வழங்குவதாக கூறினார். அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் இலங்கை நாட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால், அவற்றையும் ஒருங்கிணைத்து மத்திய அரசாங்கத்தின் மூலமாக இலங்கை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் குறிப்பிட்டார். கதறிக்கொண்டு இருக்கும் இலங்கை அரசுக்கு கருணையோடு உதவ மத்திய அரசாங்கத்தின் கதவுகளை தமிழக அரசு தட்டிக்கொண்டேயிருக்கிறது. இது இரக்க உணர்வோடு செய்ய நினைக்கும் உதவி, இதில் அரசியல் ஏதும் இல்லை, இலங்கை மக்கள் நம் சகோதரர்கள், அவர்களுக்கு உதவுவது நம் கடமை என்ற வகையில், அவர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு மத்திய அரசாங்கம் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். உதவிக்கரம் நீட்டும் தமிழக அரசின் முயற்சிக்கு துணை நிற்க ஓ.பன்னீர்செல்வம் முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல உதவ அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.

Next Story