புதிய ஜனாதிபதி யார்?; துணை ஜனாதிபதி யார்?


புதிய ஜனாதிபதி யார்?; துணை ஜனாதிபதி யார்?
x
தினத்தந்தி 2 May 2022 8:07 PM GMT (Updated: 2022-05-03T01:37:28+05:30)

ஒட்டுமொத்த இந்தியாவே இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, ராம்நாத் கோவிந்துக்கு பிறகு, புதிய ஜனாதிபதி யார்?, வெங்கையாநாயுடுவுக்கு பிறகு புதிய துணை ஜனாதிபதி யார்? என்பதுதான்.

ஒட்டுமொத்த இந்தியாவே இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, ராம்நாத் கோவிந்துக்கு பிறகு, புதிய ஜனாதிபதி யார்?, வெங்கையாநாயுடுவுக்கு பிறகு புதிய துணை ஜனாதிபதி யார்? என்பதுதான். பதினான்காவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதி முடிவடைகிறது. துணை ஜனாதிபதியின் பதவிக்காலமும் ஆகஸ்டு மாதம் நிறைவடைகிறது.

ஜனாதிபதியை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சேர்ந்த தேர்தல் குழு (எலக்ட்டோரல் காலேஜ்) தான் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து 776 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய ஓட்டின் மொத்த மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும்.

எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தமட்டில், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதாவது, மாநிலத்திலுள்ள மக்கள்தொகையின் அடிப்படையில்தான், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 208. ஆனால், கோவாவில் அதன் மதிப்பு 20 தான். அந்தவகையில், தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டுமதிப்பு 176. இப்படி அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டுமதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 495 ஆகும்.

அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த ஓட்டுமதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும். இதில், 50 சதவீதத்துக்கு மேல் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 லட்சத்து 39 ஆயிரத்து 827 ஓட்டு மதிப்புதான் இருக்கிறது. 50 சதவீதத்தைப்பெற இன்னும் 9 ஆயிரத்து 625 ஓட்டுமதிப்பு கூடுதலாகவேண்டும்.

2002-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பும் விரும்பிய ஏ.பி.ஜே.அப்துல்கலாமை வேட்பாளராக, மறைந்த பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். இதேபோலத்தான், 2017-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்தையும் தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திரமோடி விரும்பினாலும், ஒருமித்த கருத்து உருவாகவில்லை. ஆனால், பல மாநில கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார். தலித் சமுதாயத்திலிருந்து கே.ஆர்.நாராயணனுக்கு பிறகு ராம்நாத் கோவிந்த்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராம்நாத் கோவிந்தைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிப்பார் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுபோலத்தான், இப்போதும் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். முதல் ஜனாதிபதியான ராஜேந்திரபிரசாத் மட்டுமே தொடர்ந்து 2 முறை ஜனாதிபதி பதவியை வகித்துள்ளார். அதேபோன்ற நிலை ஏற்பட இப்போதும் வாய்ப்பு இருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் ராம்நாத் கோவிந்தே அறிவிக்கப்படலாம். அல்லது மாநிலங்களவை துணைத் தலைவராக சிறப்பாக பணியாற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பரிசு கிடைக்கலாம். இல்லையென்றால், மீண்டும் துணை ஜனாதிபதி வேட்பாளராகவே அறிவிக்கப்படலாம்.

கடந்த காலத்தை பார்த்தால், சர்வபள்ளி டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் முதல் துணை ஜனாதிபதியாக பதவிவகித்து, 2-வது முறையும் அந்த பதவியில் இருந்தார். அதேபோல், ஹமீது அன்சாரியும் 2-வது முறை துணை ஜனாதிபதி ஆனார். துணை ஜனாதிபதியாக இருந்த பலர் ஜனாதிபதி ஆனார்கள். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிப்பதால், பா.ஜ.க. எளிதில் வெற்றிபெற்றுவிடலாம். இதுவரையில் ராஜேந்திரபிரசாத் 1950-ம் ஆண்டிலும், நீலம் சஞ்சீவ ரெட்டி 1970-ம் ஆண்டிலும்தான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எனவே, இந்த முறை தேர்தல் நடக்குமா?, போட்டியின்றி ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்பது வேட்பாளர் தேர்வு செய்யப்படுவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

இன்னும் 75 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், இந்த இரு தேர்தல்களும் பல்வேறு கணக்குகளை கூட்டிக்கழித்து, இறுதியில் வரும் எண்ணைப் பொறுத்துதான் முடிவு இருக்கும்.

Next Story