நெஞ்சை பதற வைக்கும் இரு தீ விபத்துகள்


நெஞ்சை பதற வைக்கும் இரு தீ விபத்துகள்
x
தினத்தந்தி 3 May 2022 7:45 PM GMT (Updated: 3 May 2022 7:45 PM GMT)

விபத்துகள் எதிர்பாராமல் நடக்கின்றன என்றாலும், சில விபத்துகளை தவிர்த்து இருக்கலாம்.

விபத்துகள் எதிர்பாராமல் நடக்கின்றன என்றாலும், சில விபத்துகளை தவிர்த்து இருக்கலாம். கடந்த வாரத்தில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடந்த இரு தீ விபத்துகள் தமிழக மக்களின் நெஞ்சங்களையெல்லாம் பதற வைக்கிறது. தலைநகராம் சென்னையில் உள்ள பழம் பெரும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை. இங்கு 1939-ம் ஆண்டு கட்டப்பட்ட பிராட்பீல்டு அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள மருந்து கிடங்கில் சம்பவத்தன்று காலையில் தீ பிடிக்கத் தொடங்கி மளமளவென்று பரவியது. தரை தளத்தில் மருந்து கிடங்கும், முதல் தளத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவும், இரண்டாம் தளத்தில் நெஞ்சக சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வந்தது. தரை தளத்தில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களில், 4 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள், ஆக்சிஜன் உதவியோடு இருந்த நோயாளிகள், பக்கவாதத்தால் நடக்கமுடியாத நிலையில் இருந்த நோயாளிகள் என 128 பேர் புகை மூட்டத்துக்கு இடையே பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தை படம் எடுக்கச் சென்ற ‘தினத்தந்தி’ போட்டோகிராபர் உள்பட பல பத்திரிகை போட்டோகிராபர்களும் தீயணைப்பு துறையுடன் சேர்ந்து பல நோயாளிகளை பத்திரமாக மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டார். மின்கசிவுதான் விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டாலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்று கூறியிருக்கிறார். இது மிகவும் வருந்தத்தக்கது. மருத்துவமனை பராமரிப்பில் இதுபோல எந்த கடமை குறைவும் இருக்கக்கூடாது.

அடுத்த விபத்து 11 பேரின் உயிரை பறித்து, 15 பேருக்கு காயம் ஏற்படுத்திய கோவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்த விபத்தாகும். தஞ்சாவூருக்கு அருகில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அப்பர் என்கிற திருநாவுக்கரசு மடத்தில் நடந்த சதய விழாவையொட்டி தேர் புறப்பாடு நடந்தது. இது 94-வது ஆண்டு தேரோட்டமாகும். இந்த ஆண்டு நள்ளிரவில் தொடங்கிய தேரோட்டம் தெருக்களை சுற்றி வந்து அதிகாலை 3.30 மணிக்கு மடத்துக்கு திரும்புவதற்காக தேரை திருப்பியபோது எதிர்பாராமல் மேலே உள்ள உயர் அழுத்த மின்கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து தேரில் அமர்ந்து இருந்தவர்கள், சுற்றி இருந்தவர்கள் என பலர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது. முதல்-அமைச்சர் உடனடியாக அங்கு விரைந்து இறந்தவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, ஒவ்வொருவர் குடும்பத்துக்கும் அரசு சார்பில் ரூ.5 லட்சமும், தி.மு.க. சார்பில் தலா ரூ.2 லட்சமும் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் அறிவித்தார். முதல்-அமைச்சர் மருத்துவமனைக்கும் சென்று காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண நிதி, பழக்கூடை வழங்கி ஆறுதல் கூறினார். இதுபோன்ற ஒரு விபத்து 2012-ல் நடந்தபோது தேர் ஊர்வலங்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும், போகிற வழியில் மின்சார சப்ளை நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் விதிகளின்படி திருவிழா கமிட்டிகளில் மின்சார வாரியம், வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைக்கும் படை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் இடம் பெறவேண்டும், அந்த குழு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. விதிகள் பின்பற்றப்பட்டு இருந்தால், இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற வகையில், எதிர்காலத்தில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வழிகளாகும்.

Next Story