தமிழக இளைஞர்களுக்கு காஷ்மீரில் தேர்வு மையமா?


தமிழக இளைஞர்களுக்கு காஷ்மீரில் தேர்வு மையமா?
x
தினத்தந்தி 4 May 2022 7:33 PM GMT (Updated: 4 May 2022 7:33 PM GMT)

படித்த இளைஞர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகிக்கொண்டே இருப்பதுபோல, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது.

படித்த இளைஞர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகிக்கொண்டே இருப்பதுபோல, வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசாங்க பணிகளுக்கு அவ்வப்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஆனால், தமிழக இளைஞர்களுக்கு ஒரு மனக்குறை என்னவென்றால் ரெயில்வே, தபால் துறை போன்ற பணிகளில் தமிழே தெரியாத வட மாநிலத்தவர் தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்ந்து விடுகிறார்களே என்பதுதான். ஆனால் பலர் தமிழ்நாட்டில் படித்தது போல போலி சான்றிதழ் வழங்கி வேலையில் சேர்ந்துவிடுகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தற்போது இத்தகைய சான்றிதழ்களை சரிபார்த்ததில் 321 சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது” என்று கூறினார்.

இந்த போலி சான்றிதழ்கள் மூலம் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டுள்ளது என்றால், இப்போது ரெயில்வேயில் தேர்வு எழுத முடியாத நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே தேர்வு வாரியம் ரெயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரெயில் கார்டு உள்பட பல பணிகளில் 2,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக விளம்பரம் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 601 பணியிடங்கள் ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கான பணியிடங்களாகும். எப்படியும் இந்த தேர்வில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற துடிப்பில் ஏழை-எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 2 ஆண்டுகளாக மிகத்தீவிரமாக படித்து வருகிறார்கள். இதற்காக முதல்கட்ட தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதியில் இருந்து 2021-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்தது. இதில் கலந்துகொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இந்த முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வு வருகிற 9,10-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், ஸ்டேஷன் மாஸ்டர் வேலைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும், நாமும் வெள்ளை சீருடை அணிந்து கையில் பச்சை-சிகப்பு கொடியுடன் பணிபுரியலாம் என்ற ஆனந்த கனவில் இருந்த இளைஞர்களுக்கு பேரிடியாக அவர்களில் பலருக்கு தேர்வு மையங்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா, உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத், கர்நாடகாவில் உள்ள மைசூர், உடுப்பி, ஷிமோகா உள்பட பல மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் சென்று தேர்வு எழுத வேண்டும் என்றால் எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும்? அங்கு 2, 3 நாட்கள் தங்க வேண்டும், இந்தி தெரியாத இளைஞர்களால் வட மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவது எவ்வளவு சிரமம்? என்றெல்லாம் எண்ணிப்பார்க்காமல், முதல்கட்ட தேர்வையே தமிழ்நாட்டில் உள்ள மையங்களில் எழுத வசதி வாய்ப்பு உள்ள நிலையில், தமிழ்நாட்டைவிட்டுவிட்டு, வெளி மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்து இருப்பது அவர்களை தேர்வு எழுதவிடாமல் செய்யும் முயற்சி என்று பரவலாக குற்றம் சாட்டப்படுகிறது. பல குடும்பங்களில் ஒருவருக்கான செலவையே கொடுக்க முடியாத நிலையில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் செல்லவேண்டிய நிலையில் துணைக்கு ஒருவரை அழைத்துசெல்ல வேண்டிய நிலை உருவாகும். இப்படி கஷ்டங்களோடு தேர்வு எழுதினால், அவர்கள் மனநிலை எப்படி இருக்கும்? மொத்தத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தமிழ்நாட்டில்தான் மத்திய அரசாங்க பணிகளுக்கான தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

Next Story