ஒரு ஆண்டு சாதனை மலர்கள்; நூறு ஆண்டுகள் மணம் வீசும் !


ஒரு ஆண்டு சாதனை மலர்கள்; நூறு ஆண்டுகள் மணம் வீசும் !
x
தினத்தந்தி 6 May 2022 7:53 PM GMT (Updated: 2022-05-07T01:23:02+05:30)

“சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்” என்பது போல, முதல்-அமைச்சராக இன்று மு.க.ஸ்டாலின் பெருமைமிகு பணிகளை ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்றால், அவர் இந்த பொறுப்புக்கு சும்மா வந்துவிடவில்லை.

“சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்” என்பது போல, முதல்-அமைச்சராக இன்று மு.க.ஸ்டாலின் பெருமைமிகு பணிகளை ஆற்றிக்கொண்டு இருக்கிறார் என்றால், அவர் இந்த பொறுப்புக்கு சும்மா வந்துவிடவில்லை. எப்படி கருணாநிதி தன் 14-வது வயதில் திருவாரூரில் தன் தோளில் கொடி ஏந்திக்கொண்டு, “ஓடி வந்த இந்தி பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழை உள்ள நாடு இதுவல்லவே” என்று முழங்கிக்கொண்டு ஊர்வலமாக சென்றாரோ, அதுபோல மு.க.ஸ்டாலினும் தன் 14-வது வயதில் தோளில் தி.மு.க. கொடியை ஏந்திக்கொண்டு, 1967-ல் தி.மு.க. தேர்தல் பிரசாரத்தை வீதி வீதியாகச்சென்று மேற்கொண்டார். அவர் ஆற்றிய பணிகள் இளைஞர் சமுதாயத்தை கட்சி பணிகளில் ஈடுபட தட்டி எழுப்பியது. கட்சியின் அடிமட்டதொண்டராக தன் அரசியல் பயணத்தை தொடங்கி, பல்வேறு பொறுப்புகளை கடந்து எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர், அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவிகளில் ஜொலித்து, கடந்த ஆண்டு மே மாதம் 7-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, இன்று ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் பல அழிக்கமுடியாத முத்திரைகளை பதித்து இருக்கிறார்.

அவர் தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் நடந்த கூட்டத்தில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்று எழுதப்பட்ட பெட்டியை வைத்து, மக்கள் தங்கள் குறைகளை, கோரிக்கைகளை எழுதி அதில் போடச் சொன்னார். “முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் இந்த பெட்டியை திறந்து 100 நாட்களில் தீர்வு காண்பேன்” என்றார். சொன்னதை செய்யும் வகையில் 100 நாட்களில் அனைத்து துறைகளின் வாயிலாக மொத்தம் 4,57,845 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் மொத்தம் ஏற்கப்பட்ட மனுக்கள் 2,29,215 ஆகும். இது மட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தார். மே மாதம் 7-ந் தேதி பதவியேற்றவுடனேயே 2 கோடியே 9 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி உதவி, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு, அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மக்கள் மனுக்கள் மீது தீர்வு காண `உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறை’ ஆகிய 4 வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணைகளை வெளியிட்டார். “சொன்னதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்” என்ற அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் சொல்லாத தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவீனத்தை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் அரசே ஏற்பு என்ற ஆணையையும் பிறப்பித்தார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 505 வாக்குறுதிகளில் 220 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

“உழைப்பே! உன் பெயர்தான் மு.க.ஸ்டாலினா” என்ற வகையில் மாநில வளர்ச்சிக்காக ஆய்வு கூட்டங்கள், சுற்றுப்பயணங்கள், கள ஆய்வு, நிகழ்ச்சிகள் என்று அயராது பாடுபட்டு வருகிறார். தமிழகம் முதல் மாநிலமாக திகழவேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு துறையிலும் பல புதுமையான திட்டங்களை அறிவித்து வருகிறார். தொழில் வளர்ச்சியில் முன்னேறினால்தான் வேலைவாய்ப்பு பெருகும், மாநிலம் வளம் பெறும் என்ற வகையில் அவர் எடுத்துகொண்ட முயற்சிகளின் விளைவாக இந்த ஒரு ஆண்டில் மட்டும் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.69 ஆயிரத்து 375 கோடியே 50 லட்சம் முதலீடுகள் வருவதற்கும், 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறை சார்பிலும் இந்த ஒரு ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான திட்டங்களும் சாதனை மலர்கள்தான். மொத்தத்தில் இந்த ஒரு ஆண்டு சாதனை மலர்கள் 100 ஆண்டுகளானாலும் தொடர்ந்து மணம் வீசிக்கொண்டு இருக்கும்.

Next Story