ஓராண்டு நிறைவு நாளில் 5 மகத்தான திட்டங்கள்!


ஓராண்டு நிறைவு நாளில் 5 மகத்தான திட்டங்கள்!
x
தினத்தந்தி 8 May 2022 7:53 PM GMT (Updated: 8 May 2022 7:53 PM GMT)

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, கடந்த சனிக்கிழமையோடு ஓராண்டு நிறைவுபெற்றது.

முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று, கடந்த சனிக்கிழமையோடு ஓராண்டு நிறைவுபெற்றது. இந்த நல்ல நாளில், அவர் பலதரப்பு மக்களிடம் இருந்து வந்த பாராட்டு மழையினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அன்று காலையில் சட்டசபைக்கு வந்து கொண்டு இருந்த வழியில், அவர் மாணவனாக இருந்த நேரத்தில், பள்ளிக்கூடத்துக்கு செல்ல தினமும் பயணித்த ‘29 சி’ என்ற வழித்தட எண் கொண்ட பஸ்சில் திடீரென்று ஏறி சற்று தூரம் பயணம் செய்தார். அவர் 7 நிமிடம் பயணம் செய்த நேரத்தில், இந்த ஓராண்டு ஆட்சி பற்றி கருத்து கேட்டார். பயணம் செய்த பெண்கள், ‘இந்த ஓராண்டு ஆட்சி மிக சிறப்பாக இருக்கிறது. குறை எதுவும் சொல்வதற்கில்லை, பெண்களுக்கு சாதாரண கட்டண நகர பஸ்களில் இலவச பயணம் என்ற அறிவிப்பால் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய முடிகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை எங்களால் மிச்சப்படுத்த முடிகிறது’, என்று பாராட்டினர்.

5 என்ற எண்ணுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது போலும்!. அவர் முதல்- அமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன், 5 அறிவிப்புகளை நிறைவேற்றும் வகையிலான ஆணைகளில் கையெழுத்திட்டார். அதே போல ஓராண்டு நிறைவு பெற்ற நாளில், சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அளித்த அறிக்கையில், இந்த ஒரு ஆண்டில் அவர் அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டுவிட்டு, புதிதாக 5 பெரும் திட்டங்களை அறிவித்தார். நீதிக்கட்சியில் இருந்து திராவிட இயக்கங்கள் ஆட்சிகளிலும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலும் மாணவர்களுக்கு மதிய உணவு, சத்துணவு திட்டங்கள் என்ற பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக ஆட்சி செய்துகொண்டு இருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 5 அறிவிப்புகளில் முதல் அறிவிப்பாக, அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார். முதல் கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலை தூர கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.

‘1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய தொடக்க பள்ளிக்கூட மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும், இதை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்’, என்று வெளியிட்ட அறிவிப்பு மகத்தானது. முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார். இனி உள்ளாட்சி அமைப்புகள் இந்த கல்வி ஆண்டிலேயே அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். 2- வது அறிவிப்பாக, ‘6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஏற்படுத்தப்படும்’, என்று கூறினார். 3-வது திட்டமாக, அவர் டெல்லி சென்ற நேரத்தில், அங்கு சென்று பார்த்த ‘மாதிரி பள்ளிக்கூடம்’ போல தமிழ்நாடு முழுவதும் ‘தகைசால் பள்ளிக்கூடங்கள்’ தொடங்கப்படும் என்றும், 4- வது திட்டமாக கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், 5-வது திட்டமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் `உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம்’ நடைமுறைக்கு வரப்போகிறது என்றும் அடுக்கடுக்காக அறிவித்தார்.

ஓராண்டு நிறைவு என்பது விழா எடுக்கும் நிகழ்வாக அல்லாமல், மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்களை அறிவிக்கும் மறக்க முடியாத நாளாக அமையச் செய்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்குரியவர். முதல்- அமைச்சரால் முத்திரை பதிக்கப்பட்ட இந்த திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தும் பொறுப்பு இனி உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அரசுத் துறைகள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது.

Next Story