தமிழ்நாட்டுக்கு கிடைத்த மேலும் ஒரு பெருமை!


தமிழ்நாட்டுக்கு கிடைத்த மேலும் ஒரு பெருமை!
x
தினத்தந்தி 9 May 2022 7:38 PM GMT (Updated: 2022-05-10T01:08:40+05:30)

பண்டைய தமிழர்கள் எல்லா துறைகளிலும் மேலோங்கி இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு ஏராளமாக இருக்கிறது.

பண்டைய தமிழர்கள் எல்லா துறைகளிலும் மேலோங்கி இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வரலாறு ஏராளமாக இருக்கிறது. குறிப்பாக அவர்கள் கட்டிட தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்கி இருந்துள்ளனர் என்பதற்கு, பழைய மன்னர்கள் கட்டிய நீர்த்தேக்கங்கள், அரண்மனைகள், கோவில்கள் எல்லாம் இன்றளவும் உறுதியாக இருக்கிறது என்பதே சான்றாகும். அதை உறுதிப்படுத்தும் வகையில், சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் தமிழ்நாட்டுக்கு 3 விருதுகள் வழங்கியுள்ளது. நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பிரிவில் இந்த ஆணையம், ஒரு சீர்மிகு அமைப்பாகும். யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய இடங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட இடங்களை தேர்வுசெய்து அங்கீகாரம் வழங்கிவருகிறது. இந்த அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுக்கள் பரிந்துரைக்கும், பயன்பாட்டில் இருக்கும் பழைய மற்றும் பாரம்பரிய நீர்த்தேக்க கட்டமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும், அந்தவகையில் 4 விருதுகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச ஆணையத்துக்கு இந்த விருதுக்காக அனுப்பப்பட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கங்களையும் தமிழக அரசின் நீர்வளத்துறை பரிந்துரைத்திருந்தது. இந்த நீர்த்தேக்கங்கள் குறித்த உரிய ஆவணங்களும் தமிழக அரசால் ஆதாரமாக அனுப்பப்பட்டு இருந்தது. சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த 6 நீர்த்தேக்கங்களுக்கும் வந்து அங்குள்ள கட்டமைப்பு வசதிகளை விரிவாக ஆய்வு செய்தது.

இந்தியாவில் இருந்து 4 நீர்த்தேக்கங்களுக்கு உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பு விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள கல்லணை, வீராணம் ஏரி, காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமையாகும். ஒவ்வொரு தமிழனும் நமது பாரம்பரிய கட்டமைப்பை நினைத்து பெருமை கொள்ளவேண்டும். மொத்தம் உள்ள 4 விருதுகளில் 3 விருதுகள் தமிழ்நாட்டுக்கும், ஒரு விருது உத்தரபிரதேசத்தில் உள்ள துக்நான் நீர்த்தேக்கத்துக்கும் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பண்டைய தமிழ்நாட்டின் கட்டிடக்கலை திறமைக்கு புகழ்சேர்க்கும் கல்லணை கி.பி. 2-ம் நூற்றாண்டில் கரிகால சோழ மன்னரால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பழமையான அணையாகும். இது உலகில் 4-வது பழமையான அணையாகும். இந்தியாவில் பழமை வாய்ந்த முதல் அணையாகும். 2 ஆயிரம் ஆண்டுகளாக மிக உறுதியாக இருக்கும் கல்லணையால், ஆரம்பகாலங்களில் 69 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்றது. இப்போது 13 லட்சத்து 20 ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9-ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது. வீர நாராயண பெருமாள் கோவிலின் பெயரால் வீர நாராயணன் ஏரி என்று பெயரிடப்பட்டு, அந்த பெயர் மருவி இப்போது வீராணம் ஏரி என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைக்கட்டு ஏறத்தாழ 740 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு பகுதியின் மன்னரான காளிங்கராயன் கவுண்டரால் கட்டப்பட்டது.

பழங்கால தமிழ் மன்னர்கள் ஆற்றிய இத்தகைய அரும்பெரும் பணிகளுக்காக, அவர்கள் போற்றி வணங்கப்படவேண்டியவர்கள். அவர்களது கட்டுமானம் இவ்வளவு உறுதியாக இருக்கிறது என்றால், நமது பாரம்பரியத்தின் தொழில்நுட்ப தொடர்ச்சியை இப்போதும் கடைப்பிடித்தால் நமது பாசன திட்டங்கள், கட்டிடங்கள் மேலும் வலிவு பெறும். தமிழர்களின் பாரம்பரிய தொழில்நுட்பத்தை உலகம் கொண்டாடும். உடனடியாக நமது கோவில்கள், நீர்த்தேக்கங்கள், புராதன கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராயும் வகையில் நிபுணர்களை அந்த பணிகளில் இறக்கவேண்டும் என்பது தமிழ்மக்களின் கோரிக்கையாகும்.

Next Story