பதவியை கொடுத்த மக்களே பறித்துவிட்டார்கள்


பதவியை கொடுத்த மக்களே பறித்துவிட்டார்கள்
x
தினத்தந்தி 10 May 2022 7:40 PM GMT (Updated: 2022-05-11T01:10:28+05:30)

இந்தியாவில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் தலைவர்கள் கூறிய பல பொன்மொழிகள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றன.

இந்தியாவில் வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் தலைவர்கள் கூறிய பல பொன்மொழிகள் இந்த நாட்டுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றன. அந்த வகையில் மகாத்மா காந்தி சொன்ன, ‘புகழ் அழையாது வரும், விடை பெறாமல் போகும் என்பதும்’, ‘பதவியைக் கொடுத்த மக்களால் அதைப் பிடுங்கவும் முடியும்’ என்பதும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்வில் நடந்து இருக்கிறது. போற்றிப் புகழ்ந்த இலங்கை மக்களே இன்று அவரை விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். 76 வயதான மகிந்த ராஜபக்சே இலங்கை அரசியலில் முடிசூடா மன்னராக கோலோச்சிக் கொண்டு இருந்தவர். 24 வயதிலேயே இளம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மந்திரியாக பதவி வகித்து இலங்கையில் ஒரு அடையாளமாக காணப்பட்டார்.

தொடர்ந்து மந்திரி, பிரதமர், இருமுறை அதிபர் என்றும் மீண்டும் பிரதமர் பொறுப்புகள் என்றும் பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்சே, கடைசியாக அவருடைய சகோதரர் கோத்தபய அதிபராகவும், தான் பிரதமராகவும், தன் குடும்பத்தில் பலர் மந்திரிகளாகவும், தான் வைத்ததுதான் சட்டம் என்ற வகையில் ஆட்சி செலுத்தினார். தவறான பொருளாதார கொள்கைகளால் நாடு சீரழிந்தது. தாங்கமுடியாத அளவில் வாங்கிய வெளிநாட்டு கடன்களுக்கு வட்டி கட்டுவதற்கே நாட்டின் நிதியில் பெரும்பகுதி சென்றது. அன்னிய செலாவணி கையிருப்பு போதிய அளவில் இல்லாததால், வெளிநாட்டில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. தவறான வேளாண் கொள்கையால் விவசாய உற்பத்தியும் சரிந்தது. தினமும் 12 மணி நேரத்துக்கு மேல் மின்சார வெட்டு, பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் மட்டுமல்லாமல் அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை மக்களால் வாங்க முடியாத அளவில் மட்டுமல்லாமல், கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சே குடும்பத்தினரின் ஊழலும் ஒரு முக்கிய காரணம் என்று மக்கள் நம்பினர்.

‘மனோகரா பொறுத்தது போதும், பொங்கி எழு’ என்பது போல பொறுத்து பொறுத்து பார்த்த இலங்கை மக்கள், பொறுக்க முடியாமல் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிவிட்டனர். இப்போது இலங்கை மக்களிடையே சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் நாம் அனைவரும் இலங்கை மக்களே என்ற ஒற்றுமை உணர்வுடன் போராடி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 9-ந் தேதி முதல் கொழும்பில் இலங்கை அதிபர் மாளிகை எதிரே உள்ள காலி முக திடலில் கூடாரங்கள் அமைத்து, மக்கள் நடத்திய போராட்டத்தின் உச்சகட்டமாக நேற்று முன்தினம் இலங்கை முழுவதும் போராட்டம் புரட்சியாக மாறி, மக்களின் கோபம் வெடித்தது.

ஒரே கோஷம் ராஜபக்சே குடும்பமே, உன் கிராமத்துக்கு போ என்பதுதான். துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை வீச்சு என்று ரணகளமாகியது. ஒரு ஆளுங்கட்சி எம்.பி. உள்பட பலர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். ஆனாலும் மக்களின் ஆத்திரம் அடங்கவில்லை. ராஜபக்சே குடும்பத்தினர் உயிர் தப்பினால் போதும் என்று ஓட்டம் பிடிக்க வேண்டிய நிலையில், திரிகோணமலை கப்பற்படை தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பி ஓடியிருக்கிறார்கள். இலங்கையின் எதிர்காலமே ஒரு கேள்விக்குறியாகிவிட்டது. இந்த பதற்றம் எங்கு கொண்டு போய்விடுமோ? எப்போது நிலைமை சீரடையுமோ? என்ற ஒரு நிச்சயமற்ற நிலையில் இலங்கை மக்கள் தவிக்கிறார்கள். அடுத்தாற்போல இலங்கையின் ஆட்சி பொறுப்பை யார் ஏற்பார்கள்? என்பதுமே இப்போதைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Next Story