வெள்ளை தேவதைகள் தினம்


வெள்ளை தேவதைகள் தினம்
x
தினத்தந்தி 11 May 2022 7:46 PM GMT (Updated: 2022-05-12T01:16:55+05:30)

மருத்துவமனைகளில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கும், உயிர் காக்கும் கடவுளாக டாக்டர்களும், பெற்ற அன்னைக்கு நிகராக அன்பு செலுத்தும் நர்சுகள் வெள்ளை தேவதைகளாகவுமே அங்குள்ள நோயாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள்.

மருத்துவமனைகளில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நோயாளிகளுக்கும், உயிர் காக்கும் கடவுளாக டாக்டர்களும், பெற்ற அன்னைக்கு நிகராக அன்பு செலுத்தும் நர்சுகள் வெள்ளை தேவதைகளாகவுமே அங்குள்ள நோயாளிகளும், அவர்கள் குடும்பத்தினரும் போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள். நர்சுகள் சேவை என்பது மகத்தான சேவையாகும். நோயாளிகள் எந்த நிலையில் இருந்தாலும், அவர்களை இரவு-பகலாக பராமரிப்பதிலும், மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன், சலைன் போன்ற சிகிச்சை அளிப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருக்கும் நர்சுகளின் கவனிப்பில்தான் நோயாளிகள் பாதி குணம் அடைகிறார்கள்.

சாதி, மதம், இனம், மொழி, பணக்காரர்கள்-ஏழைகள் என்ற பேதங்களை கடந்து எனக்கு எல்லோரும் ஒன்றுதான், அவர்களைக் காப்பாற்றுவதுதான் என் தலையாயபணி என்ற அர்ப்பணிப்போடு சேவை செய்வதுதான் நர்சு பணியின் அடிப்படை கொள்கையாகும். அந்த தூயபணிகளை செய்து வரும் நர்சுகளின் சேவைகளை எல்லோரும் போற்றும் வகையில், இன்று உலகம் முழுவதும் நர்சுகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஏன் ஆண்டுதோறும் மே மாதம் 12-ந் தேதி நர்சுகள் தினம் கொண்டாடப்படுகிறது? என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த நாள்தான் நர்சுகள் பணிமுறையை உருவாக்கிய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்சு நைட்டிங்கேல் பிறந்த நாள். நர்சுகளின் அன்னை என்று வணங்கப்படும் பிளாரன்சு நைட்டிங்கேல் 1820-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு அதற்கான படிப்பை படித்து நர்சு பணியைத் தொடங்கினார்.

1853-ல் ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற இங்கிலாந்து நாட்டுக்கும், ரஷியாவுக்கும் நடந்த கிரிமியா போரில் காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க கிரிமியா போர்முனைக்கு சென்றார். காலராவும், டைபாயிடும் வேகமாக பரவிக்கொண்டு இருந்த நேரத்தில், போரில் காயம் அடைந்து கிடக்கும் வீரர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் உயிரைக் காப்பாற்ற, நள்ளிரவு இருளில் கையில் மண்எண்ணெய் விளக்குடன் சென்ற அவரது ஒப்பற்ற தியாகத்தை போற்றும் வகையில்தான் ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்று உலகம் அவரை வணங்குகிறது. அவரால் குணமடைந்த வீரர்கள் ‘இவர் விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு வந்த தேவதை’ என்று கவுரவித்தனர்.

நர்சு படிப்பை படிக்க வரும் அனைவருமே பிளாரன்சு நைட்டிங்கேல் போல அவரைப் பின்பற்றி தங்கள் பணியைத் தொடங்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நர்சுகள் தினத்தன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது, “என்னைப் பொறுத்தவரை கருணையின் வடிவம் என்றுதான் நர்சுகளை சொல்வேன். அன்பு செலுத்துவதும், அதை வெளிப்படுத்துவதும் ஆகிய இரண்டும் இணைந்ததுதான் அவர்களது வாழ்க்கை. நர்சுகள் என்பதை ஒரு வேலையாக இல்லாமல் சேவையாக ஆற்றி வருகிறீர்கள்” என்று பாராட்டினார். கொரோனா நேரத்தில் நர்சுகள் செய்த சேவையை, இது கொடூர தொற்று நோய் என்றாலும் கவச உடை அணிந்து நோயாளிகளை கவனித்த உன்னதமான சேவையை தமிழகம் மறக்காது. நன்றியோடு எப்போதும் நினைவுகூறும்.

இதே போல ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் டாக்டர் ரேலா மருத்துவமனையில் கடந்த ஆண்டு டாக்டர் காவ்யா, “குக்கூ...குக்கூ....உயிரைக்காக்கும் தொழிலுக்கு குக்கூ...குக்கூ...நர்சு பண்ணும் சேவைக்கு, எதையும் தாங்கும் மனசுக்கு குக்கூ...குக்கூ...சின்னம்மா, பெரியம்மா நர்சு எல்லாம் தெய்வம்மா, கிடந்து போனாம்மா நர்சு நின்னு காக்கும்மா, தாயம்மா, தாயம்மா என்ன பண்ண மாயம்மா....அன்னக்கிளி, அன்னக்கிளி உன்னை உலகம் வணங்குமடி, நல்லா இரு என்று சொல்லி முழு மனசோடு வாழ்த்துமடி, கடவுள் போன்ற கருணைக்கு குக்கூ....குக்கூ...”என்று பாடிய பாடலையே தமிழகம் வாழ்த்தாக கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நர்சும் பிளாரன்சு நைட்டிங்கேல் போல சேவையாற்றவேண்டும் என்று மக்கள் வாழ்த்துகிறார்கள்.

Next Story