இந்து மத மரபுகள் காப்பாற்றப்படவேண்டும் !


இந்து மத மரபுகள் காப்பாற்றப்படவேண்டும் !
x
தினத்தந்தி 13 May 2022 9:00 PM GMT (Updated: 13 May 2022 9:00 PM GMT)

இந்து மதம் மிகவும் பழமை வாய்ந்த மதம். இந்து மத கோவில்கள் என்றாலும் சரி, இந்து மத மடங்கள், ஆதீனங்கள் என்றாலும் சரி, அதற்கென்று சில வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற எல்லா நடைமுறைகளுக்கும் சில சம்பிரதாயங்கள், மரபுகள் இருக்கின்றன.

இவை அனைத்தும் காலாகாலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. சட்டம் இயற்றப்பட்டு பின்பற்றிவரும் நடைமுறை என்றால், மற்றொரு மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து சட்டமாக்கி மாற்றிவிடலாம். இது போல அரசு உத்தரவு என்றால், மற்றொரு உத்தரவை பிறப்பித்து மாற்றிவிடலாம். ஆனால் மரபாக பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் முறையை திடீரென்று மாற்றுவதில் அர்த்தமேயில்லை.

அதுவும் மத சம்பந்தமான மரபுகள், வழிபாட்டு முறைகள், நடைமுறைகளில் கைவைப்பது என்பது தேன் கூட்டில் கை வைப்பது போலாகும். அதுதான் தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் விஷயத்தில் நடந்து இருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மடமாகும். இந்த மடத்தின் ஆதீனகர்த்தர் நியமனம் முதல் அங்குள்ள பல வழிபாட்டு முறைகளுக்கென்று சம்பிரதாயங்கள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர்த்தி அவரது சீடர்கள் மற்றும் பக்தர்கள் தோளில் சுமந்து வீதி உலா செல்வதும், பல்லக்கில் அமர்ந்தவாறே அவர் மக்களுக்கு ஆசி வழங்குவதும் மரபாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.

இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி இந்த பட்டின பிரவேசம் நடைபெறுவதாக இருக்கும் நிலையில், மனிதனை மனிதன் சுமப்பதா, இது மனித உரிமை மீறல் என்று திராவிடர் கழகமும் மற்றும் சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பட்டின பிரவேசம் நடந்தால் போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 27-ந் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் தருமபுரம் ஆதீன கர்த்தரை பட்டின பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கில் பக்தர்கள் தோளில் சுமப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பு காரணமாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என்று போலீஸ் டி.எஸ்.பி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதற்கு தருமபுரம் மடத்தில் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்கள், ஏன் பரவலாக இந்து மதத்தினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

சட்டசபையிலும் இந்த பிரச்சினை எதிரொலித்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு விழாவில் பேசும்போது, ‘பட்டின பிரவேசம் பல்லக்கு நிகழ்வு தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்-அமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்’ என்று கூறியவுடனேயே மனங்கள் குளிர்ந்தன. அடுத்த நாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் பல முக்கியமான பெரிய மடங்களை சேர்ந்த ஆதீனகர்த்தர்கள் சந்தித்து பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்க கேட்டுகொண்டனர்.

இந்த சந்திப்புக்கு பின் பத்திரிகையாளர்களிடம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசும்போது, ‘ஆதீனமும், ஆன்மிக உள்ளங்களும் எந்தவித கவலையும் கொள்ளாமல் இருக்கும் வகையில் முதல்-அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்’ என்று முதல்-அமைச்சர் தங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை சொல்லாமல் சொல்லிவிட்டார். அடுத்த நாளே ஏற்கனவே தடை விதித்த கோட்டாட்சியர், பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ஆணை விலக்கிக்கொள்ளப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மத நிகழ்வுகளில் ஆன்மிக மற்றும் பாரம்பரிய மரபுகள் எப்போதும் தடையில்லாமல் தொடர வேண்டும், அதில் தலையீடு கூடாது என்பதற்கு பட்டின பிரவேச சம்பவமே எடுத்துக்காட்டாகும்.


Next Story