சர்வதேச வெற்றிகளை குவிக்க தமிழக வீரர்களுக்கு பயிற்சி


சர்வதேச வெற்றிகளை குவிக்க தமிழக வீரர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 15 May 2022 7:28 PM GMT (Updated: 15 May 2022 7:28 PM GMT)

அமரர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை இந்தியா இன்றும் நினைவு கூறுகிறது. அவர் அமைப்புக்குழு உறுப்பினராக இருந்த நேரத்தில்தான் 1982-ல் டெல்லியில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக அவர் இருந்த காலகட்டத்தில்தான் தெற்காசிய விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதலை வாங்கியதோடு மட்டுமல்லாமல், சென்னையில் அதை நடத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகள்தான் காரணம். அந்தவகையில், 1995 டிசம்பர் மாதம் 18-ந்தேதியில் இருந்து 27-ந்தேதி வரை சென்னையில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஆக்கி, ஜூடோ, கபடி, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் என பல போட்டிகள் நடந்தன.

இந்த போட்டிகளை சென்னையில் நடத்தியதன் காரணமாக நேரு ஸ்டேடியம் முதல் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் நவீனப்படுத்தப்பட்டன. அந்தநேரத்தில்தான் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக கோயம்பேட்டில் தெற்காசிய விளையாட்டு கிராமம் பலமாடி கட்டிடங்களுடன் உருவாக்கப்பட்டது. அது இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் உயர் அதிகாரிகள் தங்கும் இல்லங்களாக மாறியிருக்கின்றன. இந்தியா இந்த போட்டிகளில் பதக்கங்களை அள்ளிகுவித்து, முதலிடத்தில் இருந்தது. தெற்காசிய விளையாட்டு போட்டி நடந்துவிட்டது.

இனி சென்னையில் ஆசிய விளையாட்டு போட்டி நடக்குமா?, ஏன் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுமா? என்பது தமிழக மக்களின் பெரிய ஏக்கமாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை ஒலிம்பிக் போட்டி நடந்தது இல்லை. ஏனெனில் ஒலிம்பிக் போட்டி ஒரு நாட்டில் நடக்கவேண்டுமென்றால், சர்வதேச தரத்தில், நவீன வசதிகளுடன் விளையாட்டு அரங்குகள் மிகவும் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் உலகில் உள்ள 180 நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபெற இருக்கிறார்கள். இந்த போட்டியை உலகமே வியக்கத்தக்க வகையில் நடத்தவேண்டியதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதுமட்டுமல்லாமல், வருகிற செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைவு கடிதம் வழங்கியுள்ளார்.

மேலும் சட்டசபையில் 110-வது விதியின்கீழ் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த பல நல்ல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். தமிழக இளைஞர்கள் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றிவாகை சூடுவதற்காக, பல்வேறு விளையாட்டுகளுக்காக உலக தரத்திலான விளையாட்டு கட்டமைப்புகளை ஏற்படுத்த சென்னைக்கு அருகில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை பெற்று வெற்றிவாகை சூடுவார்கள் என்று அவர் அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலங்களில், மண்டலத்துக்கு ஒன்று வீதம் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். ரூ.25 கோடி செலவில் ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் பதக்கம்பெற இளைஞர்களுக்கு வழிகாட்ட ‘ஒலிம்பிக் தங்கம் தேடுதல்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும். வடசென்னை என்றாலே பல குத்துச்சண்டை வீரர்களின் பிறப்பிடம் என்ற வகையில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடக்கும் போட்டிகளில் தமிழக இளைஞர்களை வெற்றிபெற வழிவகுக்கும், சர்வதேச போட்டிகள் நடக்கும் தளமாக தமிழ்நாட்டை உருவாக்க வழிவகையும் காணும் என்ற வகையில், முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புகள் நிச்சயமாக வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது.


Next Story