இந்தியாவின் நண்பர் ரணில் விக்ரமசிங்கே!


இந்தியாவின் நண்பர் ரணில் விக்ரமசிங்கே!
x
தினத்தந்தி 17 May 2022 12:53 AM GMT (Updated: 17 May 2022 12:53 AM GMT)

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி, தாங்கமுடியாத விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களின் கோபத்தீயால் நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டார்.

ஆனாலும் போராட்டம் இன்னும் ஓயவில்லை. “கோத்தபய வெளியேறுங்கள்” என்று அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இன்னும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்க எந்தக்கட்சியும் முன்வரவில்லை. எனவே, ரணில் விக்ரமசிங்கேயை, அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்து, அவரும் பதவியேற்றுவிட்டார்.

ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், வாக்குகள் எண்ணிக்கையில் வழங்கப்படும் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, ரணில் விக்ரமசிங்கே நியமன எம்.பி. ஆகிவிட்டார்.

73 வயதுடைய ரணில் விக்ரமசிங்கே 6-வது முறையாக இப்போது பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஆனால், ஒருமுறைகூட தன் முழு பதவிக்காலத்தை அவர் நிறைவு செய்ததில்லை. வக்கீலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ரணில் விக்ரமசிங்கே, 45 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்து இருக்கிறார். அவருடைய பதவிக்காலத்தில் இந்தியாவுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்டிருந்தார். எடுத்துக்காட்டாக, கடந்த முறை பிரதமராக அவர் இருந்த நேரத்தில், 4 முறை இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறார். அதே காலக்கட்டத்தில், இந்திய பிரதமர் நரேந்திரமோடி, 2 முறை இலங்கைக்கு சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வேன்களை பிரதமர் நரேந்திரமோடி வழங்கியிருக்கிறார்.

முன்பு பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இருந்த நேரத்தில், விடுதலைப்புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரப்பங்கீடு அளிக்கவும் முன்வந்தார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் அதிகாரமளிக்கும் பல திட்டங்களை செயல்படுத்த தயாராக இருந்தார். ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்தால், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அவர் தொடர்ந்து பிரதமராக நீடிக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்தநிலையில், முக்கிய எதிர்க்கட்சிகள் எதுவும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுராக் குமாரதிசநாயகே, “ரணில் விக்ரமசிங்கே ராஜபக்சேக்களை பாதுகாக்கிறார். ராஜபக்சேக்கள், ரணில் விக்ரமசிங்கேயை பாதுகாக்கிறார்கள். இலங்கை மக்கள் யாரும் இந்த சூழ்ச்சிக்கு பணிந்துவிடமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

யார் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள்? என்ற குழப்பம் இருந்த நிலையில், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவெடுத்துள்ளனர். தேசிய நலன் கருதி, நாட்டை பொருளாதார சீர்கேட்டிலிருந்து மீட்டெடுக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

ராஜபக்சேயை எதிர்த்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மக்கள், இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலையில், திடீரென ரணில் விக்ரமசிங்கே, கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் நடத்திக்கொண்டிருக்கும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். “அவர்களுக்கு எல்லா பாதுகாப்பும் அளிக்கப்படும். எதிர்கால கொள்கைகளை வகுக்கும்போது, அவர்கள் கருத்துகளும் கேட்கப்படும்” என்று கூறியிருக்கிறார்.

“இலங்கையின் அரசியல் முறையில் ஒரு மாற்றம் கொண்டுவர, இந்த போராட்டம் தொடரவேண்டும். அதற்கு இளைஞர்கள் முன்னெடுத்து செல்லட்டும்” என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென சஜித் பிரேமதாசா தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்கே, “அரசியல் என்பது செஸ் விளையாட்டை போன்றது. கிரிக்கெட் விளையாட்டைப்போல ஒரு குழு பணியாகும். மாரத்தான் போல உடலில் வலு இருக்கவேண்டும். குத்துச்சண்டை போல ரத்தம் சிந்தும் விளையாட்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

நாளை இலங்கை பாராளுமன்றம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தொடரில், அவர் இதில் எந்த விளையாட்டைப்போல தன் பெரும்பான்மையை நிரூபிப்பார் என்பதற்கு வருகின்ற நாட்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

Next Story