அறைகளை அழகுபடுத்தும் கண்கவர் ‘கார்பெட்’ வகைகள்


அறைகளை அழகுபடுத்தும் கண்கவர் ‘கார்பெட்’  வகைகள்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:30 PM GMT (Updated: 14 Sep 2018 11:21 AM GMT)

வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற பயன்பாட்டிற்கேற்ப தரை விரிப்புகள் என்ற கார்ப்பெட் வகைகள் உபயோகத்தில் இருந்து வருகின்றன.

பல்வேறு விதங்களில் கிடைக்கும் அவற்றை வாங்கி பயன்படுத்துவதற்கு முன்னர் கீழ்க்கண்ட வி‌ஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்வது  முக்கியம்.

அனைவருக்கும் பொருத்தமானது


பொதுவாக, தரை விரிப்புகள் போடப்பட்ட அறையில் வீட்டில் உள்ளவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் பாதிப்படையாமல் இருப்பது சற்று சிரமம்தான். குட்டி பசங்கள், வளர்ப்பு பிராணிகள், குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கும் பொருத்தமாக இருக்கக்கூடிய கார்பெட் வகைகளை அனைவரும் விரும்புகிறார்கள்.

வெளிர் நிறங்கள்

வெளிர் நிறத்தில் கார்பெட் விரிக்கப்பட்ட தரைத்தளம் அதற்கே உரிய மென்மையான அழகுடன் இருந்தாலும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாது. குறைவான பயன்பாடு கொண்ட அலுவலக ரீதியான சந்திப்பு நடக்கும் பகுதிகளுக்குத்தான் அவை பொருத்தமாக இருக்கும்.

அடர்த்தியான வகைகள்

குழந்தைகள் விளையாடும் ஹால் போன்ற பகுதிகளில் விரிக்கப்படும் கார்பெட் வகைகள் அடர்த்தியான நிறம் மற்றும் கெட்டியான தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். அதனால் சுருக்கம் ஏற்பட்டு குழந்தைகள் தடுக்கி விழாமல் தவிர்க்கப்படுகிறது.

அறையின் தோற்றம்

அறையை அல்லது குறிப்பிட்ட பகுதியை பார்வைக்கு பெரிய அளவு கொண்டதாகவோ அல்லது சிறியதாகவோ காண்பிக்கும் தன்மை கார்பெட்டின் நிறம் மற்றும் அதன் டிசைன்களுக்கு உண்டு. அதாவது, அடர்த்தியான நிறம் கொண்டவை பெரிய ஹாலை கச்சிதமாக அளவாக காண்பிக்கும். ஆனால், சற்றே வெளிர் நிறம் கொண்டவை சிறிய அறையைக்கூட பெரிதாக காட்டும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

இயற்கை வெளிச்சம்

கார்பெட் விரிக்கப்பட்ட அறைகளுக்குள் இயற்கை வெளிச்சம் வருவதற்கான சூழல் இருந்தால் அதன் இயல்பான நிறம் கண்களை கவருவதாக இருக்கும். அதுபோன்ற பகுதிகளில் அடர்த்தியான நிறம் கொண்ட கார்பெட் விரிப்பது பொருத்தமாக இருக்கும். இயற்கை வெளிச்சம் வர வாய்ப்பில்லாத பகுதிகளில் சற்று வெளிர் நிறமானவை பொருத்தமாக இருக்கும்.

சரியான அளவு

கார்பெட் தேர்வின்போது சம்பந்தப்பட்ட அறையில் உள்ள பொருட்களை கணக்கில் கொண்டு மத்தியில் எத்தனை சதுரடி இடம் கிடைக்கும் என்று கவனிக்க வேண்டும். சோபா செட், நாற்காலிகள் ஆகியவை போக மீதமுள்ள இடத்தை கணக்கிட்டு அதற்கேற்ப கார்பெட் விரிக்கலாம்.

அறையில் உள்ள பொருட்கள்

குறிப்பாக, வீட்டு சுவர்களில் உள்ள பெயிண்டு, பர்னிச்சர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு கார்பெட்டை தேர்வு செய்வது முக்கியம். வீட்டில் உள்ள பொருட்களோடு இயல்பாக பொருந்தும் நிறம் கொண்ட கார்ப்பெட் வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்வதுதான் அழகாக இருக்கும் என்பது உள் கட்டமைப்பு வல்லுனர்களது குறிப்பாகும்.

பகலில் தேர்வு

பொதுவாக, கார்பெட் ஷோ–ரூமில் தோன்றும் நிற அமைப்பு, வீட்டில் அப்படியே தோன்றக்கூடிய வாய்ப்பு குறைவாகவே இருப்பதை மனதில் கொள்ள வேண்டும். காரணம் அங்கு செய்யப்பட்டுள்ள லைட் செட்டிங்கும் வீட்டில் உள்ள ஒளி அமைப்பும் வெவ்வேறாக இருக்கும். அதனால் பகல் நேரத்தில் கார்ப்பெட் வகைகளை தேர்வு செய்வதுதான் நல்லது.

Next Story