நிலங்களின் வகைகளுக்கேற்ப பழந்தமிழர்களின் குடியிருப்புகள்


நிலங்களின்  வகைகளுக்கேற்ப பழந்தமிழர்களின்  குடியிருப்புகள்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 11:40 AM GMT)

கோவில் கட்டமைப்புகள் மூலம் உலகப்புகழ் பெற்ற தமிழ் மண்ணில், பழங்காலங்களில் வாழ்ந்த பொதுமக்களின் குடியிருப்புகள் அந்தந்த நிலப்பகுதிகளின் இயற்கை அமைப்புக்கு ஏற்ப ஒத்திசைவாக அமைக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோவில் கட்டமைப்புகள் மூலம் உலகப்புகழ் பெற்ற தமிழ் மண்ணில், பழங்காலங்களில் வாழ்ந்த பொதுமக்களின் குடியிருப்புகள் அந்தந்த நிலப்பகுதிகளின் இயற்கை அமைப்புக்கு ஏற்ப ஒத்திசைவாக அமைக்கப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீடுகள் மற்றும் அரண்மனை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு முன்னர், சித்திரை மாத நண்பகல் நேரத்தில், தரையில் நடப்பட்ட இரு கம்புகளில் கட்டிய நூலின் நிழல் விழுவதை வைத்து திசைகள் கண்டறியப்படும். பின்னர், திசைகளுக்கு உரிய தெய்வங்களை வணங்கி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

கட்டுமானப் பணிகள் 

சிறிய வீடாக இருந்தாலும், பெரிய மாளிகையாக இருந்தாலும், சிற்ப நூல்களில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் மனையிடம் வரையறை செய்து கொள்ளப்படும். அதன் பின்னர், வீடு பறித்தல் என்ற அஸ்திவாரம் எடுப்பது, மண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் சுவர் அமைப்பது, தலைவாசல் மற்றும் ஜன்னல் அமைத்தல், விட்டம் மற்றும் மேற்கூரை அமைத்தல், சுவர்களுக்கு சுண்ணாம்புக் கலவை பூசுதல், வாஸ்து சாந்தி, புதுமனை புகுவிழா ஆகிய படிநிலைகளில் அவர்களது கட்டிடக்கலை அனுபவ மரபுச் செல்வமாக (
Heritage by Experience
) வாழ்வுடன் இணைந்திருந்தது.

நமது பகுதியில் நிலப்பரப்பு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்று ஐந்து வகையாக பிரிக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்ட விதம் பற்றி இங்கே பார்க்கலாம். 

முல்லை நில கட்டுமானங்கள்

காடுகள் மற்றும் அதன் சுற்றுப்புற நிலப்பரப்பை குறிப்பிடும் முல்லை நிலப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள், கடும் மழை மற்றும் காட்டு விலங்கு ஆகியவற்றின் பாதிப்புகளை தவிர்க்க, மரங்களில் பரண்கள் அமைத்து வாழ்ந்தனர். மரக்கிளைகள் மற்றும் மூங்கில் ஆகியவற்றை நட்டு, வலுவான மரக்கம்புகள் மற்றும் இலைகளை பரப்பி குடிசைகளை அமைத்தனர். கம்புகளால் வலுவாக கட்டப்பட்ட தடுப்பு அமைப்பை குடிசையின் தலைவாசலில் அமைத்துக் கொண்டனர். 

கூரையுடன் கூடிய குடிசை அமைப்பு, காலப்போக்கில் சுடப்பட்ட செங்கல் சுவர்கள் மீது அமைக்கப்பட்ட கூரையுடன் கூடிய கச்சிதமான கட்டமைப்பாக மாறியது.

குறிஞ்சி நில கட்டுமானங்கள்

மலைகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள நிலப்பகுதிகளை குறிப்பிடுவது குறிஞ்சி நிலப்பகுதி ஆகும். தொடக்கத்தில் குகையில் வசித்த மக்கள், சிறிது காலத்தில் பரண் அமைப்பில் குடிசைகளை அமைத்தனர். பின்னர், கூம்பு அமைப்புடன் கூடிய, வட்டமான தரைத்தளம் கொண்ட குடிசைகளை வடிவமைத்துக்கொண்டனர். குடிசை சுவர்கள், பாறைக் கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் அமைக்கப்பட்டது. தினை மற்றும் வரகு ஆகியவற்றின் தாள்கள் மூலம் கூரை வேயப்பட்டது.

மருத நில கட்டுமானங்கள்

வயல்வெளிகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மருத நிலப்பகுதியாக குறிப்பிடப்படும். பயிர் செய்யும் உழவர்கள் வாழும் பகுதியான மருத நிலத்தில் நீர் வளம் உள்ள காரணத்தால், களிமண் சுவர்களை அமைத்து, அதன் மேலாக தென்னை ஓலை கூரை வேய்ந்து வீடுகளை அமைத்தனர். அதன் பின்னர், செங்கல் சுவர்கள் அமைத்து அதன் மீது கம்புகள், புல், வைக்கோல் ஆகியவற்றின் மூலம் கூரையை அமைத்துக்கொண்டனர். அதில், தூண்கள், முற்றம், தாழ்வாரம் முதலிய பகுதிகளும்  திட்டமிட்டு கட்டப்பட்டன.

நெய்தல் நில கட்டுமானங்கள்

கடல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நிலப்பகுதி நெய்தல் ஆகும்.  இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள், பனை அல்லது தென்னை மரச் சட்டங்களை நட்டு, அதன் மேல் பனை ஓலை அல்லது தென்னை ஓலை ஆகியவற்றின் கூரை கொண்ட உயரம் குறைவான குடிசைகளை கட்டமைத்தனர். பின்னர், காலப்போக்கில் உயரமான, செங்கல் வீடுகளை அமைத்துக்கொண்டனர்.

பாலை நில கட்டுமானங்கள்

தண்ணீர் மிகக்குறைவாக உள்ள வெப்பம் மிகுந்த மணல் பரப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் பாலை நிலமாகும். வறண்ட நிலத்தில் நிலையான வாழ்வாதாரம் இல்லாத நிலையில், குடியிருப்புகள் என்பது மரக்கம்புகளை ஊன்றி, துணிகளால் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரமாகவே இருந்து விட்டது.

Next Story