சுற்றுச் சூழலை பாதிக்காத நவீன கான்கிரீட்
கட்டுமான பணிகளில் செங்கல் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு மாற்று தொழில்நுட்ப முறைகள் தற்போது பரவலான பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
அந்த வகையில் பசுமை கட்டுமானப் பொருளாக உள்ள ‘போம் கான்கிரீட்’ ( Cellular Light weight Concrete) மற்றும் ‘போம் கான்கிரீட் பிளாக்குகள்’ ஆகியவற்றில் கட்டுனர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். பெரிய அளவிலான கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பில்டர்கள், பணி இடத்திலேயே இயந்திரங்கள் மூலம் ‘கான்கிரீட் பிளாக்குகள்’ தயாரித்து பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
காலப்போக்கில் அதிகரிக்கும் வலிமை
பொதுவாக, கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் செங்கல் உள்ளிட்ட கற்களின் உறுதித்தன்மை காலப்போக்கில் குறைந்து விடும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், ‘போம் கான்கிரீட்’ வகை தயாரிப்புகளின் கடினத்தன்மை காலப்போக்கில் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. சுற்றுச்சுழலுக்கு பாதிப்பில்லாத பிளை ஆஷ், சோயா பீன்ஸ் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ‘போம்’ மற்றும் மற்ற மூலப்பொருட்களைக் கொண்டு இவ்வகை கான்கிரீட் மற்றும் பிளாக்குகள் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சிறப்பம்சங்கள்
பளு தாங்கும் திறன், வெப்பம் கடத்தாத தன்மை (Thermal Insulation), ஒலியைக் கடத்தாத திறம், நெருப்பால் பாதிக்கப்படாத தன்மை (Fire Proof) போன்ற பல்வேறு நன்மைகளைக் கொண்ட ‘போம் கான்கிரீட்’ கற்கள் அளவில் பெரியதாக இருந்தாலும், எடை குறைவாக இருப்பது கவனிக்கத்தக்கது. அதன் காரணமாக கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து விடலாம். மேலும், மொத்த கட்டுமான பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 15 சதவிகிதத்தை சேமிக்கவும் இயலும்.
விரைவான கட்டுமானப் பணிகள்
தனி வீடுகள் கட்டமைப்பில் ‘ரூப் கான்கிரீட்’ அமைக்கவும் ‘போம் கான்கிரீட்டை’ பயன்படுத்தலாம். மேலும், பக்கவாட்டு பகுதிகளில் அமைக்கப்பட்ட‘மோல்டுகள்’ மூலம் ‘ஆட்டோ பில்லிங்’ முறையில் கலவை ஊற்றப்பட்டு, கான்கிரீட், பீம்கள், காலம் ஆகியவற்றை எளிதாக கட்டமைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குள் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிந்து விடும். இத்தகைய ‘பிரிகாஸ்ட்’ கட்டுமான முறையை பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகள் கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றன. இந்திய சந்தைக்கு இவ்வகை கட்டுமான முறைகள் இன்னும் அதிகப்படியான பயன்பாட்டுக்கு வரவில்லை. இவை போன்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக சென்று சேர்க்கப்படும் வரையில் அவை வெறும் செய்திகளாகத்தான் இருந்து வரும்.
Related Tags :
Next Story