சொந்த வீடு வாங்குபவர்களுக்கான நிதி ஆலோசனைகள்
சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் பற்றி நிதியியல் ஆலோசகர்கள் மற்றும் கட்டுனர்கள் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
சொந்த வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு திட்டமிடுபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான தகவல்கள் பற்றி நிதியியல் ஆலோசகர்கள் மற்றும் கட்டுனர்கள் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். அவை பற்றிய தொகுப்பை இங்கே காணலாம்.
எதிர்காலத்தில் கூடுதலாக வாய்ப்புள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டிட விரிவாக்கம் ஆகிய விஷயங்களை மனதில் கொண்டு வீட்டின் வடிவமைப்பை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கச்சிதமான அளவு என்பது சொந்த வீடு விஷயத்தில் மிகவும் அவசியமானது.
இரண்டு படுக்கையறை வீடே போதுமானது என்ற நிலையில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்க முடிவெடுப்பது கடன் சுமையை அதிகரிக்கும். சிறிய வீடாக இருப்பின், திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் வசதிகள் கொண்டதாகவும், அடிப்படை வசதிகள் உள்ள பகுதியிலும் எளிதாக வாங்க முடியும். பெரிய வீடு என்றால் திட்டமிட்ட அதே பட்ஜெட்டில் புற நகர் பகுதிகளில்தான் வாங்க இயலும்.
வீட்டு உரிமையாளரது ஆண்டு வருமானத்தில் 3 மடங்கு அளவுக்கும் மேல் சொத்து மதிப்பு உள்ள வீடு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சமாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சத்திற்குள் இருப்பதே நல்லது.
வீட்டு உரிமையாளர் பெறக்கூடிய மாத வருமானத்தில் 25 சதவிகித அளவுக்கும் அதிகமாக மாதாந்திர கடன் தொகை இருப்பது கூடாது. அதாவது, மாத வருமானம் ரூ.50 ஆயிரம் என்றால் ரூ.12,500–க்கும் மேல் மாதாந்திர தவணைத்தொகை செலுத்தும்படி இருத்தல் கூடாது.
கடன் வாங்காமல் வீடு கட்டுவது அல்லது வாங்குவதே நல்லது என்றாலும் அனைவருக்கும் அது சாத்தியமாக இருப்பதில்லை. அதனால், இயன்றவரை பொருளாதார சேமிப்புகளை திட்டமிட்டு பயன்படுத்தி கடன் சுமையை குறைக்க முயற்சிப்பதே எதிர்கால நலன்களுக்கு ஏற்றதாகும். உதாரணமாக, வீட்டின் சந்தை மதிப்பு ரூ.30 லட்சம் என்ற நிலையில், சேமிப்பாக கைகளில் ரூ.10 லட்சம் இருப்பின், மீதமுள்ள ரூ.20 லட்சம் மட்டுமே கடன் தொகையாக இருக்கும். அதற்கான மாதாந்திர தவணை என்பது பெரிய நெருக்கடியாக இருக்காது.
கடனை திருப்பி செலுத்துவதற்கு குறைந்த வருடங்கள் கொண்ட கடன் திட்டத்தை தேர்ந்தெடுப்பது நிதி மேலாண்மைக்கு உகந்தது. கடன் தொகை திருப்பி செலுத்தப்படுவதற்கான காலகட்டம் அதிகப்படியான வருடங்கள் கொண்டதாக இருப்பது கூடுதல் நிதிச்சுமையாக அமையும்.
மாதாந்திர தவணைக்கான கடன் வட்டி என்பது மாறாத வட்டி விகிதமாக இருப்பதே நல்லது. மாறுபடும் வட்டி விகிதம் கொண்ட கடன் தொகை கூடுதல் நிதிச்சுமையாக அமையக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
Related Tags :
Next Story