உயில் பற்றி பதிவுத்துறை அளிக்கும் தகவல்கள்

ஒருவரது சுய உழைப்பு மற்றும் முயற்சியின் மூலம் சேர்த்த ‘சுயார்ஜித’ சொத்துக்களை, அவரது விருப்பப்படி வேண்டியவர்களுக்கு உரிமை மாற்றம் செய்து கொடுக்கலாம். அதற்காக ‘விருப்ப உறுதி ஆவணம்’ என்ற உயிலை (WI-LL) எழுதி, ஆவணமாக பதிவு செய்வது பற்றி பதிவுத்துறை குறிப்பிட்டுள்ள தகவல்களை இங்கே காணலாம்.
* தனது விருப்பப்படி ஒருவர் உயில் எழுதுவது அவரது அடிப்படை உரிமையாகவும், கடைசி ஆசையாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
* உயில் ஆவணம் எந்த சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவிற்காக தாக்கல் செய்யப்படலாம்.
* உயில் ஆவணத்தை பொறுத்த வரையில், அதன் பதிவுக்கான தாக்கல் செய்ய கால வரம்பு ஏதும் இல்லை.
* உயில்களை சீலிடப்பட்ட உறைகளுக்குள் வைத்து மாவட்டப் பதிவாளரிடம் பாதுகாப்பாக ‘டெபாசிட்’ செய்து கொள்ள இயலும்.
* அவ்வாறு பாதுகாக்கப்படும் சீலிடப்பட்ட உறைக்குள் உள்ள உயிலை அதை எழுதியவர் அவரது ஆயுட்காலத்திற்குள் திரும்பவும் பெற இயலும்.
* உயில் எழுதி சீலிட்ட உறையில் வைப்பு செய்தவர், இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றுடன், அங்கீகரிக்கப்பட்ட நபர் விண்ணப்பம் செய்யும்போது, மாவட்டப் பதிவாளரால் உறை பிரிக்கப்பட்டு உயில் ஆவணம் பதிவு செய்யப்படும்.
* பதிவு செய்யப்பட்ட உயிலுக்கான சான்றிடப்பட்ட நகலை, அதனை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும்வரை அவர் மட்டுமே பெற முடியும்.
* உயிலை எழுதிக் கொடுத்தவர் இறந்த பின்னர் அவருடைய இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்து எவரும் சான்றிடப்பட்ட நகலைப் பெறலாம்.
* சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள அசையாத சொத்துக்களை பொறுத்து, விருப்ப உறுதி ஆவணம் என்ற உயில் எழுதப்பட்டிருக்கும் நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் மூலம் அது உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்ட பின்னரே சட்டப்படி (Pr-o-b-ate) அதை செயல்படுத்த இயலும்.
Related Tags :
Next Story






