இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்ப்பந்தத்தால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினாரா? புதிய தகவல்


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்ப்பந்தத்தால் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகினாரா? புதிய தகவல்
x
தினத்தந்தி 10 Jan 2017 12:15 AM GMT (Updated: 9 Jan 2017 7:21 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகியின் வற்புறுத்தலால் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெற்றிகரமான கேப்டன் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் டோனி. டோனி தலைமையில்

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகியின் வற்புறுத்தலால் டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

வெற்றிகரமான கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் டோனி. டோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 2007–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை, 2011–ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013–ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தது.

3 வகையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக இருந்த டோனி 2014–ம் ஆண்டில் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விடைபெற்றார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் அணிக்கு விராட்கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு டோனி கேப்டனாக தொடர்ந்தார்.

டோனி திடீர் விலகல்

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் டோனி, ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த 4–ந் தேதி அதிரடியாக அறிவித்தார். அதே நேரத்தில் அணியில் வீரராக தொடருவேன் என்றும் தெரிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் 3 வகையிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர்) போட்டிக்கும் இந்திய அணியின் கேப்டன் ஆனார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கான அணியில் வீரராக டோனி இடம் பெற்றுள்ளார்.

எம்.எஸ்.கே.பிரசாத் காரணமா?

இந்த நிலையில் 35 வயதான டோனி தானாக முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணை செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோரின் வற்புறுத்தலால் தான் டோனி கேப்டன் பதவியை துறந்தார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரைஇறுதிப்போட்டியில் ஜார்கண்ட்–குஜராத் அணிகள் மோதிய ஆட்டம் நாக்பூரில் நடந்தது. இந்த போட்டிக்கான ஜார்கண்ட் அணியின் ஆலோசகராக டோனி செயல்பட்டார். இந்த போட்டியின் போது நாக்பூர் சென்ற தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், டோனியை சந்தித்து பேசியதாகவும், அப்போது 2019–ம் ஆண்டு உலக கோப்பையை கருத்தில் கொண்டு விராட்கோலிக்கு கேப்டன் பதவியை அளிக்க முடிவு செய்து இருப்பதாகவும், அதனால் டோனியை கேப்டன் பதவியை விட்டு விலகும் படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் டோனி அதிரடி முடிவு எடுத்து அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்மா குற்றச்சாட்டு

இதேபோல் பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி தானாக முன்வந்து பதவியில் இருந்து விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வாரிய இணை செயலாளரும், ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து சில தினங்களுக்கு முன்பு விலகிய அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தினால் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் டோனியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வற்புறுத்தி பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். டோனி இந்த விவகாரத்தால் மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டோனியை கேப்டன் பதவியில் இருந்து விலகும் படி நெருக்கடி அளித்ததாக வெளியான செய்தி வதந்தியாகும். அதில் உண்மை எதுவும் கிடையாது என்று தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘கேப்டன் பதவியில் இருந்து விலக டோனிக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்கப்படவில்லை. விலகல் அறிவிப்பு அவரது தனிப்பட்ட முடிவாகும். நாக்பூரில் நடந்த ஜார்கண்ட்–குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி அரைஇறுதிப்போட்டியின் போது இந்த முடிவை அவர் என்னிடம் தெரிவித்தார்’ என்றார்.


Next Story