குஜராத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: மும்பை அணி 228 ரன்களில் ஆல்-அவுட்


குஜராத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: மும்பை அணி 228 ரன்களில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 10 Jan 2017 8:56 PM GMT (Updated: 10 Jan 2017 8:56 PM GMT)

குஜராத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம்: மும்பை அணி 228 ரன்களில் ஆல்-அவுட்

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 228 ரன்களில் ஆட்டம் இழந்தது.

ரஞ்சி கிரிக்கெட்

மும்பை - குஜராத் அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் பார்த்தீவ் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி பலம் வாய்ந்த மும்பை அணி முதலில் பேட் செய்தது. ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் இருந்ததால் பந்து வீச்சு நன்கு எடுபட்டது. மோசமான ஷாட்டுகளால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த மும்பை அணி முதல் இன்னிங்சில் 83.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 17 வயதான பிரித்வி ஷா (71 ரன்), சூர்யகுமார் யாதவ் (57 ரன்கள்) அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. கேப்டன் ஆதித்ய தாரே (4 ரன்) உள்பட 5 வீரர்கள் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர்.

மும்பையின் மோசமான ஸ்கோர்

ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 41 முறை சாம்பியனான மும்பையின் 3-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1972-73-ம் ஆண்டு தமிழகத்திற்கு எதிராக 151 ரன்களிலும், 1947-48-ம் ஆண்டு ஹோல்கர் அணிக்கு எதிராக 191 ரன்களிலும் சுருண்டு இருந்தது. குஜராத் தரப்பில் ஆர்.பி.சிங், சின்டான் கஜா, ருஜூல் பாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். குஜராத் பவுலர்கள் மொத்தம் 22 ஓவர்களை மெய்டனாக வீசியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து குஜராத்தின் முதல் இன்னிங்சை சமித் கோஹெல், பன்சால் தொடங்கினர். முதல் பந்திலேயே சமித் கோஹெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ‘ஸ்லிப்’பில் நின்ற பிரித்வி ஷா வீணடித்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் குஜராத் அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்புன்றி 2 ரன் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story