வெஸ்ட் இண்டீசை 48 ரன்னில் சுருட்டியது தென்ஆப்பிரிக்கா நீ கெர்க் புதிய சாதனை


வெஸ்ட் இண்டீசை 48 ரன்னில் சுருட்டியது தென்ஆப்பிரிக்கா நீ கெர்க் புதிய சாதனை
x
தினத்தந்தி 2 July 2017 10:15 PM GMT (Updated: 2 July 2017 7:50 PM GMT)

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லீசெஸ்டரில் நடந்த 12-வது லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

லீசெஸ்டர்,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லீசெஸ்டரில் நடந்த 12-வது லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 25.2 ஓவர்களில் வெறும் 48 ரன்னில் சுருண்டது. செடீன் நேசன் (26 ரன்) தவிர அந்த அணியில் யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை. பெண்கள் ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் 17-வது மோசமான ஸ்கோராக இது பதிவானது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இது 2-வது குறைந்த (ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக 41 ரன்னில் ஆல்-அவுட் ஆகியிருக்கிறது) ஸ்கோராகும்.

தென்ஆப்பிரிக்க பவுலர்கள் மொத்தம் 10 மெய்டன் ஓவர்கள் வீசினர். வேகப்பந்து வீச்சாளர் மரிஜனி கேப், கேப்டன் டேன் வான் நீகெர்க் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதில் சுழற்பந்து வீச்சாளர் வான் நீகெர்க் 3.2 ஓவர்களில் 3 மெய்டனுடன் ரன் எதுவும் விட்டுக்கொடுக்காமல் இந்த 4 விக்கெட்டுகளையும் கபளகரம் செய்திருந்தார். எந்த வடிவிலான சர்வதேச போட்டி என்றாலும் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) சரி, 4 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை ரன் எதுவும் வழங்காமல் ஒருவர் வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 6.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story