பெண்கள் உலக கோப்பையை 30 ஓவர் போட்டியாக குறைக்கச் சொல்வதா? வக்கார் யூனிசுக்கு, வீராங்கனைகள் கண்டனம்


பெண்கள் உலக கோப்பையை 30 ஓவர் போட்டியாக குறைக்கச் சொல்வதா? வக்கார் யூனிசுக்கு, வீராங்கனைகள் கண்டனம்
x
தினத்தந்தி 4 July 2017 9:12 PM GMT (Updated: 4 July 2017 9:12 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) யோசனை ஒன்று தெரிவித்துள்ளார்.

லண்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) யோசனை ஒன்று தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 50 ஓவர் கொண்டதாக நடத்தப்படுவதை 30 ஓவர் கொண்டதாக குறைக்க வேண்டும். டென்னிசில் வீராங்கனைகளுக்கு 5 செட்டுகளுக்கு பதிலாக 3 செட் கொண்டதாக நடத்தப்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 50 ஓவர் என்பது கொஞ்சம் அதிகமே. ஓவர்களை குறைப்பதன் மூலம் ஆட்டத்தில் கடும் சவாலும், சுவாரஸ்யமும் உருவாகும். ரசிகர்களையும் அதிகமாக கவர முடியும். அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் நோக்கில் இதை சொல்லவில்லை’ என்று குறிப்பிட்டார்.

வக்கார் யூனிசின் கருத்து பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் மத்தியில் பலமான எதிர்ப்பை கிளப்பி உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியுமான அலிசா ஹீலே கூறுகையில், ‘பெண்கள் உலக கோப்பையில் ஆஸ்திரேலியா – இலங்கை இடையிலான ஆட்டத்தில் மொத்தம் 530 ரன்கள் குவிக்கப்பட்டது, ரசிகர்களை குதூகலப்படுத்தவில்லையா? அதில் இரண்டு வீராங்கனைகளின் மிகச்சிறந்த இன்னிங்சை (சமாரி அட்டப்பட்டு 178 ரன், மெக் லேனிங் 152 ரன்) யாரும் பார்த்து இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை ஜெஸ் ஜோனாசென் கூறுகையில்,‘ இந்த உலக கோப்பையில் முதல் வாரத்தில் வீராங்கனைகளின் திறமை வியப்புக்குரிய வகையில் வெளிப்பட்டு இருக்கிறது. 7 பேர் சதம் அடித்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி இலக்கை விரட்டிப்பிடித்ததில் சாதனை படைத்தது. ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 377 ரன்கள் குவித்தது. இவை எல்லாம் பெண்கள் கிரிக்கெட்டில் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் அதிகரித்து வருகிறது என்பதற்கு சான்று. வக்கார் யூனிஸ் சொல்வது போல் 30 ஓவராக குறைத்தால் அதன் பிறகு ஒரு நாள் போட்டிக்கும் 20 ஓவர் போட்டிக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? வக்கார் யூனிசின் கருத்து தவறான வழிகாட்டுதல் போல் உள்ளது. அதை நாம் புறந்தள்ளி விட வேண்டும்’ என்றார்.


Next Story