“வீராங்கனைகள் பொறுப்புடன் ஆட வேண்டும்” இந்திய கேப்டன் மிதாலி ராஜ் வேண்டுகோள்


“வீராங்கனைகள் பொறுப்புடன் ஆட வேண்டும்” இந்திய கேப்டன் மிதாலி ராஜ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 July 2017 11:00 PM GMT (Updated: 13 July 2017 8:20 PM GMT)

வீராங்கனைகள் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று இந்திய கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரிஸ்டன்,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா-சாவா ஆட்டத்தில் வீராங்கனைகள் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று இந்திய கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்கள் உலக கோப்பை

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் பூனம் ரவுத் (106 ரன்), கேப்டன் மிதாலிராஜ் (69 ரன், 114 பந்து) ஆகியோரின் பங்களிப்புடன் இந்தியா நிர்ணயித்த 227 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

4 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை நியூசிலாந்துடன் மோதுகிறது. இதில் ஜெயித்தால் அரைஇறுதியை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான். உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் ஒன்றில் மட்டுமே (2005-ம் ஆண்டு) வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மிதாலி பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்ட பிறகு இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறியதாவது:-

தொடக்க சில ஓவர்களிலேயே விக்கெட்டை இழந்த பிறகு 226 ரன்கள் எடுத்தது என்பது ஓரளவு நல்ல ஸ்கோர் தான். மிடில் ஓவர்களில் இன்னும் வேகமாக ரன்கள் எடுத்திருக்கலாம். என்றாலும் இதை சவாலான ஸ்கோராகவே நினைத்தேன். ஆனால் எதிரணியை நிலைகுலைய செய்யும் அளவுக்கு எங்களது பந்து வீச்சு அமையவில்லை. ஆடுகளமும் வேகமின்றி (ஸ்லோ) இருந்தது.

இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடி வருகிறேன். சாதனைகள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை விட முக்கியம் எனது தேசத்துக்காக தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டியதே. 6 ஆயிரம் ரன் மைல்கல் எட்டியதை மகிழ்ச்சி என்று சொல்லலாம். அதே நேரத்தில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை என்ற நிலையிலும், இன்றைய ஆட்டத்தில் நான் பேட்டிங் செய்த விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கவில்லை.

முக்கியமான ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் எங்களுக்கு வாழ்வா-சாவா போன்றது. அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், எங்களது மிக உயரிய, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளன. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இத்தகைய சரிவில் இருந்து எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணிகளும் இதைத்தான் செய்ய முயற்சிக்கின்றன. ஒரு ஆட்டத்தில் தோற்றதும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. ஆனால் முக்கியமான ஆட்டத்தை எதிர்கொள்ளும் போது நாம் எப்போதும் இத்தகைய பிரச்சினையை சந்தித்து இருக்கிறோம். எனவே வீராங்கனைகள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.

இவ்வாறு மிதாலிராஜ் கூறினார்.

Next Story